2480. கருணைக் கடலை அக்கடலிற்
கலந்த அமுதை அவ்வமுதத்
தருணச் சுவையை அச்சுவையிற்
சார்ந்த பயனைத் தனிச்சுகத்தை
வருணப் பவளப் பெருமலையை
மலையிற் பச்சை மருந்தொருபால்
பொருணச் சுறவே பழமலையிற்
பொருந்தி யோங்கக் கண்டேனே.
உரை: பேரருட் கடலாகியவனும், அக்கடலிற் பிறக்கும் அமுத மானவனும், அந்தச் சிவாமிர்தத்தின் புதுச்சுவை போல்பவனும், அந்தச் சுவை கண்டவிடத் தெய்தும் பயனாகியவனும், பயனை நுகரப் பிறக்கும் சுகானுபவமானவனும், நிறமுற்ற பவளப் பெருமலை நிகர்ப்பவனும், அம் மலையின்கண் தங்கும் பச்சிலை மருந்து ஒக்கும் பொருளாகிய உமாதேவி விரும்பியுறையும் சிவபெருமானைப் பழமலைக் கோயிலிற் கண்டு மகிழ்ந்தேன். எ.று.
கருணைக்கடல் - அருட்பெருங்கடல். கடலிடத்தே பெறப்படுவது பற்றி, “கடலிற் கலந்த அமுது” என்கின்றார். தருணச்சுவை - கடைந்தெடுத்த காலத்து அப்பொழுதைச் சுவை. சுவை நுகரும்போது மெய்யிலும் மனத்திலும் உண்டாகும் தளிர்ப்புப் பயன் எனப்படுகிறது. அதனால் விளையும் இன்ப அனுபவம் சுகம் என்க. வருணம் - நிறம். மலைகள் பச்சிலை மருந்துகளையுடையவை என்பது கொண்டு, “பவள மலையிற் பச்சை மருந்து” எனக் குறிக்கின்றார். நச்சுறல்- விரும்புதல்.
இதனால் சிவானுபவத்தை விளக்கியவாறாம்.
(7)
|