பக்கம் எண் :

2482.

     நல்ல மனத்தே தித்திக்க
          நண்ணும் கனியை நலம்புரிந்தென்
     அல்லல் அகற்றும் பெருவாழ்வை
          அன்பால் இயன்ற அருமருந்தைச்
     சொல்ல முடியாத் தனிச்சுகத்தைத்
          துரிய நடுவே தோன்றுகின்ற
     வல்ல மலையைப் பழமலையில்
          வயங்கி யோங்கக் கண்டேனே.

உரை:

      நல்லவர்களின் மனத்தின்கண் இனிமை நல்கும் கனி போல்பவனும், எனக்கு நலம் அளித்துத் துன்பமகற்றிப் பெருவாழ்வு தருபவனும், அன்பைக் கொண்டு செய்யப்பட்ட அரிய மருந்தாகியவனும், வாயாற் சொல்லமுடியாத ஒப்பற்ற சுகப் பொருளாயவனும் துரிய நிலையில் நின்று செய்யும் தியானத்தின் நடுவே புலப்படுகின்ற எல்லாம் வல்ல மலை போல்பவனுமாகிய சிவபெருமானைத் திருமுதுகுன்றத்தில் விளங்கியோங்கக் கண்டு மகிழ்ந்தேன். எ.று.

     நன்னினைவும் நற்செயலுமுடைய நல்லவர்களின் மனம் என்றற்கு “நல்லமனம்” எனவும், அவர்களது உள்ளத்தே ஞானவின்பத் தேனைச் சொரிதல்பற்றி, “நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனி” எனவும் கூறுகின்றார். நலம் - சிவஞானம். அல்லல் - மனக்கவலை. கவலையில்லாத வாழ்வினும் பெரிது வேறு இன்மைபற்றி, “அல்ல லகற்றும் பெருவாழ்வு” எனப் புகல்கின்றார். பெருவாழ்வு தருபவனைப் பெருவாழ்வு என்பது உபசாரம். அன்புருவாய்ப் பிறவி நோய் தீர்க்கும் அரிய பரம் பொருளாதலால், “அன்பால் இயன்ற அருமருந்து” என இசைக்கின்றார். “வாக்கிறந்த பூரணம்” என வழங்குவதால், சிவபரம்பொருளைச் “சொல்ல முடியாத் தனிச்சுகம்” எனவும், கண் முதலிய புறக்கருவிகளையடக்கி உந்திக்கண்ணிருந்து செய்யும் தியானம், துரிய தியானமாதலால், அதன்கண் இருந்து தியானிக்குமிடத்து ஆங்குக் காட்சிப்படும் சிவப் பேரொளி ஞானப்பெருமலையாய்த் தோன்றுவதால், “துரிய நடுவே தோன்றுகின்ற வல்ல மலை” எனவும் இயம்புகின்றார்; உதயகிரி, அத்தகிரி என்பதுபோல.

     இதனால் நல்லோரது துரியத் தியானத்தில் தோன்றும் சிவபரம் பொருளை வழிபடும் திறத்தைத் தெரிவித்தவாறாம்.

     (9)