பக்கம் எண் :

2483.

     ஆதி நடுவு முடிவுமிலா
          அருளா னந்தப் பெருங்கடலை
     ஓதி உணர்தற் கரியசிவ
          யோகத் தெழுந்த ஒருசுகத்தைப்
     பாதி யாகி ஒன்றாகிப்
          படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச்
     சோதி மலையைப் பழமலையிற்
          சூழ்ந்து வணங்கிக் கண்டேனே.

உரை:

      முதலென்றும் நடுவென்றும் ஈறென்றும் காண்டற்கில்லாத பேரருள் இன்பக் கடலாகியவனும், நூல்களால் ஓதியும் உள்ளத்தால் உணர்தற்கும் அரியதாகிய சிவயோகத்தில் நுகரப்படுவதுமாகிய ஒரு தனிப்பட்ட சுகப் பொருளானவனும், பாதியும் முழுதுமாகிய உருக்கொண்டு விளங்கும் மேன் மேலாகிய பரம்பொருளாம் அருட்சோதியாகிய மலைபோல்பவனுமான சிவபிரானைத் திருமுதுகுன்றத்தில் நினைந்து கண்டு வணங்கி இன்புற்றேன். எ.று.

     தானல்லாத பிற பொருள் அனைத்துக்கும் ஆதியும் அந்தமுமாய்த் தனக்கு ஒரு முதலும் முடிவுமில்லாத முதற் பொருளாதலால் சிவபெருமானை, “ஆதியும் நடுவும் முடிவுமிலா” என்றும், எல்லையில்லாத திருவருளே உருவாய் உயிர்கட்கு வற்றாத இன்பம் நல்குவது பற்றி, “அருளானந்தப் பெருங்கடல்” என்றும் கூறுகின்றார். “ஆதியந்த மாயினாய் ஆலவாயி லண்ணலே” (ஆலவாய்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. ஓதி வந்த வாய்மையால் உணர்ந்துரைக்கலாகுமே” என அவரே அத்திருப்பாட்டில் குறித்துரைப்பதுபற்றி, “ஓதியுணர்தற்கரிய ஒரு சுகம்” என வுரைக்கின்றார். கருவி கரணங்களின் நீங்கி அறிவுருவாய் ஒன்றும் சிவயோக மொன்றினாலே நுகரப்படும் நீர்மை புலப்பட “சிவயோகத் தெழுந்த ஒருசுகம்” என வுரைக்கின்றார். “பொறிப்புலன்களைப் போக்கறுத்துள்ளத்தை நெறிப்படுத்த நினைப்பவர் சிந்தையுள் அறிப்புறும் அமுதாயவன்” (ஏகம்பம்) எனத் திருநாவுக்கரசர். சிவயோக நுகர்ச்சியைத் தெரிவிப்பது, ஈண்டு நினைவு கூரத்தக்கது. மாதொரு பாகனாதல்பற்றி, “பாதி யாகி” எனவும், அம்மையைத் தனக்குள் ஒடுக்கித் தான் தனிமுதலாய் விளங்குமிடத்து முழுமுதலாய்த் தோன்றுமாறு புலப்பட, “ஒன்றாகிப் படர்ந்த வடிவு” எனவும், அது தானும் மேன்மேற் பரந்து ஓங்குதல் தோன்றப் “பரம்பரம்” எனவும் பகர்கின்றார். “சோதி முழுமுதலாய் நின்றான்” எனச் சான்றோர் கூறுதலால் “சோதிமலை” எனத் துதிக்கின்றார்.

     இதனால், யோகியர் யோகக் காட்சியில் தோன்றும் சிவபரம்பரத்தைக் கண்டு களித்தமை கூறியவாறாம்.

     (10)