பக்கம் எண் :

14

14. பழமலை கிழமலை

 

      திருமுதுகுன்றம் பழமையும் சிவனுக்கே உரிமையும் உடையதாயிருக்க உலகவர் பழமலை யெனவும் கிழமலை யெனவும் கூறுவதை வியந்து மகிழ்ந்து பரவுவதாம்.

 

                எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2484.

     ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
          ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
     ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்
          தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
     பூதிமலை சுத்தஅனு பூதிமலை எல்லாம்
          பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
     பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்
          பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.

உரை:

      மலைகட்கெல்லாம் ஆதியாய மலை, அனாதிமலை, அன்புமலை எங்கும் பரந்து விளங்கும் மலை, ஞானமாகிய மலை, இன்ப மலை, பெருமை சான்ற சோதி மலை, துரிய நிலையமான மலை, துரிய நிலையின் உச்சிக்கப்பால் விளங்கித் தோன்றும் மலை, கருவிக்கரணங்களாற் காணப்படாத சூது பொருந்திய மலை, திருநீற்றுமலை, சுத்தாவத்தைக் கண்ணின்று பெறும் அனுபவ மலை, எல்லாவற்றையும் படைத்தளிக்கும் மலையரசன் மகளாய கொடியென்று புகழப்படும் மலையைத் திருமேனியிற் பாதியாயவுடைய மலை, முத்தான்மாக்கள் அடையும் மலை எனப்படும் பழமலையை முதுமலையாக உலகினர் கூறுவது ஏனோ? வியப்பாக வுளது. எ.று.

     ஆதியென வொன்றுமில்லாதது அனாதி. சிவபரம்பொருளின் உருவாய மலையென்ற கருத்துப்பட மொழிகின்றாராகலின், “ஆதிமலை அனாதிமலை” எனவும், சிவமும் அன்பும் ஒன்றாதலால், அன்புமலையெனவும், சிவம் எங்கும் எல்லாமாய் இருப்பது கொண்டு, “எங்கும் ஆனமலை” எனவும், ஞானமாய் இன்பமாய் அருளொளியாய் இருக்கும் இயல்பு பற்றி, “ஞானமலை ஆனந்தமலை, வான் சோதி மலை” எனவும் கூறுகின்றார். வான் - பெருமை. துரிய மலை, உடம்பின்கண் உந்தியில் துரியாவத்தையில் ஆன்மா அறிவுருவாய் நின்று தியானிக்கும்போது மிகவும் ஓங்கிக் காட்சிப்படுதலால் சிவத்தைத் “துரியமலை” என்றும், துரியத்துக்கு அப்பாலான துரியாதீதத்திலும் தோன்றி யின்புறுத்தலால் “துரிய முடிக்கப்பால் தோன்றும் மலை” என்றும், ஏனைச் சாக்கிரம் சொப்பனம் என்ற நிலைகளில் கருவி கரணங்களோடு கூடிக் காணுமிடத்துப் புலப்படாமைபற்றி, “தோன்றாத சூதான மலை” என்றும் இயம்புகின்றார். காட்டலும் காட்டாமையும் உடையதாதல் சூது. வெண்பூதி-வெண்மையான திருநீறு. திருநீறு திருவருட் செல்வத்தின் வடிவமாதல் கொண்டு வடமொழியிற் பூதி எனவும், விபூதி யெனவும் வழங்குகிறது. கேவல சகலங்களிலிருந்து நீங்கிச் சிவானந்தத்தை நுகரும் நிலை “சுத்த அனுபூதி”யாகும். அனுபூதி - அனுபவம். எல்லாம் பூத்த மலைவல்லி - எல்லா உலகங்களையும் படைத்தளிக்கும் உமாதேவியாகிய மலைமகள். மகளிரைக் கொடியெனக் கூறும் மரபுபற்றி, மலைமகளை மலைவல்லி என்று குறிக்கின்றார். வல்லி - கொடி; மலைமகளாதலால் மலை என மகிழ்ந்துரைக்கின்றார். முத்தர் - சிவஞான மிக்க சீவன் முத்தர்கள். முத்திப் பேற்றுக்குச் சமைந்த அப் பெருமக்கள் அதனையல்லது பிறிது நினையாத சான்றோராதல் விளங்க, “முத்தரெலாம் பற்றும் மலை” என்று பரவுகின்றார். இவ்வாற்றால் சிவப் பழம் கனியும் மலையாவது கண்டும், முதுமைப் பொருளும் உரிமைப் பொருளும் தோன்றக் கிழமலை எனக் கிளந்து கூறுவது என்னையோ என வியக்கின்றாராதலால், “பழமலையை உலகு கிழமலையாய்ப் பகருவது என்” எனவுரைக்கின்றார்.      இதனால் முதுகுன்றத்தைப் பழமலை யென்னாமல் கிழமலை யென உலகு கூறுவதை மறுப்பது போன்று பராவியவாறாம்.

     (1)