2485. சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த
சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்
அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
உரை: முன்னாளில் சாக்கிய நாயனார் மலர் எடுக்காமல் அன்பால் மாறாக எறிந்த கல்லையும் மலராக ஏற்று மகிழ்ந்த சிவனாகிய மலை சலிப்பதின்றிச் சாந்தமே குடிகொண்ட மேலோர் திருவுள்ளத்தையடைந்து விளங்கும் ஒப்பற்ற மலை; அம்பலத்தின்கண் தூக்கிய சேவடியுடன் திகழும் தூயமலை; வேதங்கள் ஓதுகின்ற மலை; சொல்லின் எல்லைக்கு அப்பாலான துரியக் காட்சியில் தோன்றும் மலை; வானுலக முதலாகிய எல்லா வுலகங்களையும் படைத்து அளித்து அழிக்கும் முத்தொழிலையும் செய்யும் மலை; என்றும் அழியாமல் உள்ள மலை; தூய அன்பர்களுக்கு வற்றாத இன்பம் தரும் அற்புதமான பொன் மலை; நற் செல்வ வகையனைத்தும் தன்கண் கொண்ட மலை எனப்படும் பழமலையைக் கிழமலை யென்று உலகோர் கூறுவது ஏனோ? எ.று.
நாளும் சிவலிங்கம் கண்டல்லது உணவு கொள்ளாத சாக்கிய நாயனார், ஒருநாள் ஒருபால் சிவலிங்கம் கண்டு உளம் மகிழ்ந்து உணர்விழந்து எதிரே கிடந்த கல்லையெடுத்து மலரிடும் வழக்கப்படி அதனையெறிந்து வழிபட்டு அதனையே பின்னும் தொடர்ந்து செய்து உய்தி பெற்றார். அதனை நினைக்கின்ற வள்ளற் பெருமான், சாக்கியர் எறிந்த கல்லையும் ஏற்றருளிய சிவனது அருணலத்தை வியந்து குறிக்கின்றாராதலின், “சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை” என்று கூறுகின்றார். சிலை - கல். சகித்தல் - பொறுத்துக்கொள்ளுதல். சித்த சாந்தர் - சாந்தமே குடி கொண்ட மனத்தையுடைய சான்றோர். சாந்தம் - எவர்பாலும் விருப்பு வெறுப்புக்கொள்ளாத மனநிலை. அவர்கள் திருவுள்ளத்தையே கோயிலாகக் கொள்பவன் சிவபெருமானாதலால், “சித்த சாந்தர் உளம் சார்ந்தோங்கித் தனித்த மலை” எனப் புகழ்கின்றார். ஒரு காலையூன்றி யொரு காலைத் தூக்கி அம்பலத்தில் சிவன் நடம் புரிவதால், “சபையில் தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை” என வுரைக்கின்றார். துரியத் தானத்தை ஆன்மா அடையும்போது கருவி கரணங்களின் நீங்கித் தூய அறிவுருவாய் நின்று சிவத்தை நோக்குதலால், “சொல்லிறந்த துரிய நடுமலை” எனச் சொல்லுகின்றார். மும்மூர்த்தியாய் உலகங்களைப் படைத்தளித்து அழித்தலால், “வானாக்கி அளித்தழிக்கும் மலை” என்கின்றார். வான் - மேலுலகம். மேன்மைபற்றி “வான்” கூறியதனால், ஏனை நடுவும் கீழுமாகிய மூவுலகும் கொள்ளப்பட்டன. தூய மெய்யன்பர்களின் சிந்தையில் தேனூற நிற்றல்பற்றி, “நல்லன்பருக்கு இன்பம் தரும் ஓர் அற்புதப் பொன்மலை” என்று புகழ்கின்றார். பொன்போலும் மேனியன் என்பதுபற்றிப் “பொன்மலை” எனப் புகல்கின்றார். “பொன் செய்த மேனியினீர் புலித்தோலை யரைக்கசைத்தீர்” (முதுகுன்) என நம்பியாரூரர் பழமலைப் பெருமானைப் பாடுதல் காண்க. பாக்கியம் - நன்மைகள்.
இதனாலும் பாக்கியம் பழுத்த பழமலையைக் கிழமலையென்று கருதுமாறு உலகவர் கூறுவது பொருந்தாதென்னும் பொருள்பட வியந்து கூறியவாறாம். (2)
|