New Page 6
நேரிசை வெண்பா
2486. ஆறு விளங்க அணிகிளர்தேர் ஊர்ந்தஉலாப்
பேறு விளங்கஉளம் பெற்றதுமன் - கூறுகின்ற
ஒன்றிரண்டு தாறுபுடை ஓங்கும் பழமலையார்
மின்திரண்டு நின்றசடை மேல்.
உரை: ஒன்றின்மேல் ஒன்றாக இரண்டு நிலத்தாறுகள் பக்கத்தே கொண்டுயர்ந்த முதுகுன்றமுடைய பெருமானது மின்னல் திரண்டு நிற்பதுபோலும் சடைமுடிமேல் கங்கையாறு விளங்க அழகிய தேர்மேல் ஊர்ந்துவரும் திருவுலாக் காட்சி பெறும் இனிய நலத்தை எனது மனக்கண் கண்டு வந்தது, காண். எ.று.
நிலவரையில் படிமேற் படியாய் உயர்ந்திருக்கும் பகுதி “நிலத்தாறு” எனப்படும். காய்களை நிரலே கொண்டு மேன்மேற் படிப்படியாய் நிற்கும் வாழைக்குலையைத் தாறு என்பதுபோல என அறிக. இதுபற்றியே நச்சினார்க்கினியரும் நெற்பயிரைத் “தாறுபடு நெல்” (சீவக. 53. உரை) என்கின்றனர். வானத்து மின்னற் கொடிகள் தம்மில் திரண்டதுபோல் தோன்றுதலால் சிவன் சடையை “மின் திரண்டு நின்ற சடை” எனவும், அதன்மேல் கங்கையாறு விளங்கத் திருவீதியில் உலாப்போந்த காட்சியைக் கண்டு மனம் மகிழ்ந்து பாடுதல் தோன்ற, “தேரூர்ந்த உலாப் பேறு விளங்க உளம் பெற்றது” எனவும் ஓதுகின்றார். உலாப் பேறு - திருவுலாக் காணும் பேறு, மன் - அசைநிலை.
இதனால், திருமுதுகுன்றில் பழமலைநாதர் திருவீதியில் திருவுலா வந்த காட்சியைப் புகழ்ந்து மகிழ்ந்தவாறாம். (3)
|