15
15. திருவதிகைப் பெரியநாயகியார்
தோத்திரம்
திருமுதுகுன்றம் சென்று பழமலைநாதன்
திருத்தேர் விழாக் கண்டு மகிழ்ந்து போந்த வள்ளற் பெருமான் தாம் உறையும் கருங்குழிக்கு வடக்கில்
கடிலவாற்றின் வடகரையில் உள்ள திருவதிகை யடைந்து அங்கே கோயில் கொண்டருளும் வீரட்டேசுரரை
வழிபடுகின்றார். திருவதிகையில் சிவபரம்பொருளின் பங்கி லுறையும் தேவிக்குப் பெரிய நாயகி
என்பது திருப்பெயராதல் அறிந்து பெரிதும் உவகை கொண்டு இச் சொன்மாலை தொடுத்துப்
பரவுகின்றார்.
இதன்கண் பெரியநாயகியம்மையின்
பெருமைகளை இனிய பல புகழ் மொழிகளாற் போற்றி அவளது திருவருளை வேண்டுகின்றார்.
கலிவிருத்தம்
2487. உரிய நாயகி யோங்கதி கைப்பதித்
துரிய நாயகி தூயவீ ரட்டற்கே
பிரிய நாயகி பேரருள் நாயகி
பெரிய நாயகி பெற்றியைப் பேசுவோம்.
உரை: உலகிற்கு உரிமையுடைய நாயகியும், உயர்ந்த திருவதிகைத் திருக்கோயிலில் எழுந்தருளும் துரிய நாயகியும், தூய்மை யுருவான வீரட்டேசுரருடைய அன்பு நாயகியும், உலகுயிர்கட்குத் திருவருள் வழங்கும் நாயகியுமான பெரிய நாயகியம்மையின் பெருந்தன்மையை எடுத்துரைப்போம். எ.று.
உலகுகள் பலவற்றையும் பெற்றளிக்கும் பெருமாட்டியாதலால், “உரிய நாயகி” எனவும், திருபுரத்தசுரர்களை வென்ற வீரட்டானமாயும், திருநாவுக்கரசரை ஆட்கொண்ட திருப்பதியாயும் புகழ் மிக்கதுபற்றி, “ஓங்கு அதிகைப் பதி” எனவும் ஏத்துகின்றார். சிவயோகத்தில் துரிய நிலையில் சிவத்தோடு பிரிவின்றிக் காட்சி வழங்கும் அருமைபற்றித் “துரிய நாயகி” என்று புகழ்கின்றார். உலகுயிர் வாழ்க்கைக்குக் கலையாய்த் தோன்றித் துன்பம் செய்து திரிந்த திரிபுரத்தசுரரை யழித்துத் தூய்மை விளைத்த செய்தி நினைந்து, சிவபெருமானைத் “தூய வீரட்டன்” எனக் குறிக்கின்றார். வீரம் புரிந்த தானம் வீரத்தானமாகிப் பின் வீரட்டானமென மருவிற்று; வீரட்டானமும் பின்னர் வீரட்டம் எனக் குறுகிற்று. பெரியநாயகியாரைத் தனது திருமேனியின் ஒரு கூறாய்ப் பிரியாவகையிற் கொண்டமை விளங்க, “வீரட்டற்குப் பிரிய நாயகி” எனப் புகல்கின்றார். பிரியம் - அன்பு. சிவபிரான் வழங்கும் திருவருள் நலமனைத்துக்கும் அம்மையே உரிமையும் தலைமையுமுடையவளாதலின், “பேரருள் நாயகி” என்றும், அவ்வாற்றால் பெருமையனைத்தையும் உடைமை பற்றிப் “பெரிய நாயகி” என்றும் பராவுகின்றார். இனி வரும் பாட்டுக்களில் அம்மையின் அருட்டன்மையே சொற்றொறும் துளும்பி நிற்றலால், “பெற்றியைப் பேசுவோம்” என்று கூறுகின்றார்.
இதனால் நுதலிப் புகுதல் என்னும் உத்திபற்றிப் பெரியநாயகியின் பெருமைகளைச் சுருங்கக் காட்டியவாறாம். (1)
|