பக்கம் எண் :

பன

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2488.

     உலகந் தழைக்க உயிர்தழைக்க
          உணர்வு தழைக்க ஒளிதழைக்க
     உருவந் தழைத்த பசுங்கொடியே
          உள்ளத் தினிக்கும் தெள்ளமுதே
     திலகந் தழைத்த நுதற்கரும்பே
          செல்வத் திருவே கலைக்குருவே
     சிறக்கும் மலைப்பெண் மணியேமா
          தேவி இச்சை ஞானமொடு
     வலகந் தழைக்குங் கிரியை இன்பம்
          வழங்கும் ஆதி பரைஎன்ன
     வயங்கும் ஒருபேர் அருளேஎம்
          மதியை விளக்கும் மணிவிளக்கே
     அலகந் தழைக்குந் திருவதிகை
          ஐயர் விரும்பும் மெய்யுறவே
     அரிய பெரிய நாயகிப்பெண்
          அரசே என்னை ஆண்டருளே.

உரை:

      உலகுயிர்கள் தழைக்கவும், உயிர்கட்கு உணர்வும் உள்ளொளியும் பெருகவும், உருக்கொண்டு உயர்ந்த பசுமையான கொடி போல்பவளும், நினைப்பவன் மனத்தின்கண் இனிமை நல்கும் தெளிந்த அமுத போல்பவளும், திலகமிட்ட நெற்றியை யுடையவளாய் இனிமைப் பண்பால் கரும்பு போன்றவளும், செல்வம் தரும் திருவாயும், கலையறிவு கொடுக்கும் குருவாயும் சிறப்புறும் மலையரசன் மகளாகிய பெண்மணியவனாளும், மாபெருந் தேவியாய் விளங்குபவளும், இச்சை ஞானம் வலம் தரும் கிரியை என்னும் சத்தியாய் இன்பமருளும் ஆதிபரை என்ற ஒரு திருப்பெயர் கொண்டு விளங்கும் ஒப்பற்ற பேரருளுருவாகியவளும், எங்கள் அறிவு விளங்கச் செய்யும் மணி விளக்காகியவளும், நெல் முதலிய உணவுப் பொருள் பெருக விளையும் திருவதிகையில் எழுந்தருளும், தலைவராகிய சிவபெருமான் விரும்பும் உண்மை யுறவானவளுமான அருமை வாய்ந்த பெரியநாயகி யென்னும் பெண்ணரசியே, எளிய என்னை ஆண்டருள்க. எ.று.

     அகளமா யின்றிப் பெரியநாயகி யெனச் சகளீகரித்தமையால், உலகங்களும் அவற்றில் வாழும் உயிர்களும் வளமுற்று, உணர்வாலும் ஒழுக்கும் பயக்கும் ஒளியாலும் ஓங்குகின்றன என்றற்கு “உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசுங்கொடியே” எனவுரைக்கின்றார். நல்லுணர்வால் நினைவு சொற்செயல்கள்புகழ் பெறுதலால் உணர்வையும் ஒளியையும் இணைத்து மொழிகின்றார். திருமேனி பச்சை நிறமுடைமையால் “பசுங்கொடி” யெனப் பகர்கின்றார். நினைப்பவர் நினைக்குந் தோறும் இனிமை தருவது புலப்பட, “உள்ளத்தினிக்கும் தெள்ளமுதே” என உரைக்கின்றார். மங்கல மரபு பற்றி, திலகமிட்ட சிறப்பு நோக்கி, “திலகம் தழைத்த நுதல்” எனப்படுகிறது. பண்பு பற்றிய உருவக வாய்பாட்டால் “கரும்பு” எனக் கூறுகின்றார். செல்வம் நல்கும் திருமகளாகவும், கலை ஞானம் நல்கும் கலைமகளாகவும் உயிர்கட்கு அருளுவதால் “செல்வத் திருவே கலைக் குருவே சிறக்கும் மலைப்பெண் மணியே” எனப் புகழ்கின்றார். மாதேவனை மணந்தமையால் “மாதேவி” எனப்படுகிறாள். இச்சை ஞானம் கிரியை என்ற மூவகைச் சத்திகளை இறைவற்கும் உயிர்கட்டும் தந்து இன்புறுவிக்கும் பராசக்தி யென்றற்கு, “இச்சை ஞான மொடு வலகம் தழைக்க கிரியை யின்பம் வழங்கும் ஆதி பரை யென வழங்கும் ஒரு பேரருள்” என்று கூறுகின்றார். வலம் - வலகம் என்று வந்தது. வலம் - வெற்றி; வன்மையுமாம். பரை - பரனுக்குப் பெண்பாற்பெயர். தேவர்கட்கும் மக்களுக்கும் இன்றியமையாத சக்திகளை யளிக்கும் அருட் சக்தியாதலால், ஆதிபரை எனவும் ஒரு பேரருள் எனவும் கூறுகின்றார். ஞானப் பேற்றுக்குச் சமைந்த நன்மக்களின் அறிவினுள் அமர்ந்து அருளொளி தந்து ஞானம் பெருக உதவுவது கொண்டு “மதியை விளக்கும் மணி விளக்கே” எனக் குறிக்கின்றார். அறிவினுள் திரோதாயி என்னும் சத்தியாய்க் கலந்து மறைத்தும் அருட் சத்தியாய் ஞானம் விளங்குவித்தும் ஒழுகுவது பற்றி இங்ஙனம் உரைக்கின்றார் எனினும் அமையும். அலகு - நெல்வளம். “அலகுடை நீழலவர்” (குறள்) எனச் சான்றோர் உரைப்பது காண்க. ஈற்றில் அம்முச்சாரியை பெற்று அலகம் என வந்தது; உலகு உலகம் என வருதல் போல. பிரியா வுற வென்றற்கு மெய்யுறவு என்கின்றார். பெரியநாயகி, பெருமையெல்லாம் தனக்கே யுடைய உலக முதல்வி. ஆணுலகிற்குச் சிவனைப் போலப் பெண்ணுலகிற் கெல்லாம் அருளரசி என்பது தோன்றப் “பெரிய நாயகிப் பெண்ணரசே” எனப் புகழ்கின்றார்.

     இதனாற் பெரியநாயகி யம்மையின் பெருமைக் கூறுகள் பலவும் எடுத்தோதிப் பரவியவாறாம்.

     (2)