2489. தன்னேர் அறியாப் பரவெளியில்
சத்தாம் சுத்த அநுபவத்தைச்
சார்ந்து நின்ற பெரியவர்க்கும்
தாயே எமக்குத் தனித்தாயே
மின்னே மின்னேர் இடைப்பிடியே
விளங்கும் இதய மலர்அனமே
வேதம் புகலும் பசுங்கிளியே
விமலக் குயிலே இளமயிலே
பொன்னே எல்லாம் வல்லதிரி
புரையே பரையே பூரணமே
புனித மான புண்ணியமே
பொற்பே கற்ப கப்பூவே.
அன்னே முன்னே என்னேயத்
தமர்ந்த அதிகை அருட்சிவையே
அரிய பெரிய நாயகிப்பெண்
அரசே என்னை ஆண்டருளே.
உரை: தானே தனக்கு நிகரன்றி வேறொன்றுமில்லாத பரவெளியில் நிலைத்த சத்தாகிய சுத்த சிவானுபவத்தைப் பெறுகின்ற சான்றோர்க்கெல்லாம் தாயாகுபவளும், சகலராகிய எங்கட்குத் தனி நிலையன்னையாகுபவளும், மின்போல் ஒளிர்பவளும், மின்னற் கொடி போன்ற இடையும் பிடியானை போன்ற நடையும் உடையவளும், அன்புற்று விளங்கும் மனமாகிய தாமரையில் எழுந்தருளும் அன்னம் போன்றவளும், வேதங்களையோதும் கிளி போன்றவளும் நின்மலமான குயில் ஒப்பவளும், சாயலால் இளமயிலை ஒப்பவளும், அருமையால் பொன்னை நிகர்ப்பவளும், எல்லாம் செயல் வல்ல திரிபுரையும், பரையும், நிறைவேயுருவாயவளும், தூயதாகிய புண்ணிய வடிவினளும், அழகேயுருவாகியவளும், கற்பக மரத்தின் மலர் போன்றவளும், உலகுக்கு அன்னையாகுபவளும் இளமையிலே என்னுடைய அன்பில் அமர்ந்த திருவதிகைப்பதியில் எழுந்தருளும் அருட் சத்தியாகியவளும் ஆகிய அருமையையுடைய பெரியநாயகி யெனப்படும் பெண்ணரசியே எளிய என்னை ஆண்டு கொண்டு அருள் புரிக. எ.று.
சுத்த தத்துவத்தின் மத்தகத்துறையும் நாத தத்துவத்துக்கு அப்பால் உளதாய், பரசிவம் திகழும் சிவாகாச மெனப்படுவது பரவெளி; அதனின் வேறொன்றும் இன்மைபற்றி, “தன்னேர் அறியாப் பரவெளி” எனக் கூறுகின்றார். அது சத்தாய் நித்தமாய் இலங்குவதால் “சத்தாம்” என்றும், மலம் அகன்ற சுத்தாவத்தைக் கண் சிவபோகத்தை நுகரும் நிலை, “சுத்தானுபவம்” என்றும், அதனைப் பெறுபவர் முத்தான்மாக்களாதலால், அவர்களைச் “சுத்தானுபவத்தைச் சார்ந்து நின்ற பெரியவர்” என்றும், அவர்களைச் சுத்த வனுபோகத்தைத் துய்ப்பித்தல்பற்றிப் பெரியநாயகியாகிய சிவசத்தியைப் “பெரியரவர்க்கும் தாயே” என்றும் பரவுகின்றார். எமக்கு என்றது சகலாவற்றைக் கண் இருக்கும் ஆன்மாக்களாகிய எங்கட்கு என்பதாம். சகலர்க்கு வேண்டிய உடல் கருவி கரணம் உலகு போகங்களாகியவற்றைப் படைத்தளித்தலால், “எமக்குத் தனித்தாயே” என்கின்றார். பிறந்திறந்துழலும் சகலர்க்குப் பிறவிதோறும் இவற்றைச் சந்திப்பின்றி நல்குவது கொண்டு “தனித்தாய்” எனச் சிறப்பிக்கின்றார். அருள் ஒளியாய் ஒளிர்தல் தோன்ற “மின்னே” எனப்படுகின்றாள். “மின்னேர் இடை” யென்றமையின் பிடியுவமம் நடைக்காயிற்று. அன்னற் பறவை தாமரை மலரை இடமாகக்கொள்வது போல, பெரிய நாயகியாகிய அன்னம் மனத்தாமரை மலரின்கண் எழுந்தருளுவது என்றற்கு, “இதய மலரணமே” எனக் கூறுகின்றார். ஓதுவார் ஓதக் கேட்டு ஓதும் கிளி போலாது வேதத்தைப் பிறர் கேட்டு ஓத ஓதும் உயர்வு தோன்ற “வேதம் புகலும் பசுங்கிளியே” என விளம்புகின்றார். “பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு, வேரிமலி பொழிற் கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலையாமே” (வீழிமிழலை) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. மண்ணகத்துக் கருங்குயிலின் வேறுபடுத்தற்கு “விமலக் குயில்” எனச் சிறப்பிக்கின்றார். மாறா இளமையுடைமைபற்றி, “இள மயிலே” என எடுத்தோதுகின்றார். பொன்னே என்றது அருமை புலப்படுத்தற்கு. திரிபுரம் எரித்த நாயகியாதலால் “திரிபுரை” எனக் கூறுகின்றார். பரை - மேலானவள். பதி புண்ணியத்தைக் குறித்தற்குப் “புனிதமான புண்ணியமே” எனவும், பொற்பே யுருவாயவள் என்றற்குப் “பொற்பே” எனவும் புகல்கின்றார். கற்பகம் - தேவருலகத்துப் பூமரம். “கற்பகத்தின் பூங்கொம்போ” (தடுத்தாட்) எனச் சேக்கிழாரும் வழங்குவர். இளமைக் காலத்தேயே சிவத்தின்பாற் செறிந்த அன்புற்றவராதலின் “முன்னே என் நேயத் தமர்ந்த அருட்சிவையே” எனப் புகழ்கின்றார். சிவை சிவனுக்குப் பெண்பாற் பெயர்.
இதனால் பெரியநாயகி யம்மை திருவருட் சத்தியாய்ச் சுத்தான் மாக்கட்குச் சிவபோகம் துய்ப்பிக்கும் திறம் கூறியவாறாம். (3)
|