249. நெஞ்சே யுகந்த துணையெனக்கு
நீயென றறிந்தே நேசித்தேன்
மஞ்சேர் தணிகை மலையமுதை
வாரிக் கொளும்போ தென்னுள்ளே
நஞ்சே கலந்தாய் உன்னுறவு
நன்றே யினியுன் னட்பகன்றால்
உய்ஞ்சே னிலையேல் வன்னரகத்
துள்ளேன் கொள்ளே னொன்றையுமே.
உரை: நெஞ்சமே, நீயே எனக்கு உயர்ந்து துணை யென்று அறிந்து உன் மேல் அன்பு கொண்டிருந்தேனாக, மேகம் தவழும் தணிகை மலைப் பெருமானாகிய முருகனும் ஞானவமுதத்தை அள்ளிப் பருகும் இக்காலத்தே என்னுள்ளத்தில் வேறு நினைவுகளாகிய நஞ்சினைக் கலந்து கெடுத்தொழித்தாய்; உன்னுடைய தொடர்பு நன்றன் றாயிற்று; இனி உனது நட்புக் கெட்டொழியுமாயின் நான் உய்தி பெறுவேன்; இல்லையேல் ஒரு நன்மையும் எய்தாமல் மீளா நரகத்துள் வீழ்வேன், காண், எ. று.
உகப்பு உயர்வாதலின், உகந்த துணை உயர்ந்த துணையெனப் பொருள் கூறப்பட்டது. “துன்பத்திற்கு யாரோ துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி” (குறள்) எனச் சான்றோர் உரைத்தலால், “துணையெனக்கு நீ என்றறிந்தே நேசித்தேன்” எனவும், இப்போது பகை செய்து கெடுக்கின்றாய் என்பாராய்த் “தணிகை மலையமுதை வாரிக் கொளும் போது என்னுள்ளே நஞ்சு கலந்தாய்” அதனால் “உன்னுறவு நன்றே” எனவும் உரைக்கின்றார். மலை முடியில் மேகம் தவழ்வது இயற்கையாதலால், “மஞ்சேர் தணிகைமலை” என்றும், முருகன் திருவருட் பேற்றைச் சிறப்பிப்பதற்குத் “தணிகை மலையமுதை வாரிக் கொள்ளும் போது” என்றும் இயம்புகிறார். திருமுன்னின்று நோக்கி வழிபட்டுச் சிந்தை மகிழ்தலை இங்ஙனம் கூறுகின்றார் என்றுமாம். அமுதென்றலின் வாரிக் கொள்ளுதல் என்கின்றார். விழிபடும் போகு ஒன்றி நில்லாமல் புலன். வழியோடி அலையும் மனத்தின் செயலை, “என்னுள்ளே நஞ்சு கலந்தாய்” எனவும், இதனால் உனது தொடர்பு தீய நட்பாயிற்று என்பார், “உன்னுறவு நன்றே” எனவும் கடிகின்றார். நன்றென்பது எதிர்மறை இலக்கணையாய்த் தீதெனப் பொருள்படுகிறது. ஏகாரத்தை எதிர்மறை யாக்கி “நன்றன்று” எனக் கொள்வதும் ஒன்று. தீய நட்பு உய்தி பெறுவிக்கும் நன்னட்பாகாமல் நரகத் துன்பம் எய்துவித்தலால், “இனி உன்னட்பகன்றால் உய்ஞ்சேன்” எனவும், “வன்னரகத் துள்ளேன்” எனவும், வேறு நலமொன்றும் பெறேன் என்பாராய்க் “கொள்ளேன் ஒன்றை யுமே” எனவும் உரைக்கின்றார். உய்ந்தேன் என்பது உய்ஞ்சேன் என்றாயிற்று,
இதனால் வழிபாட்டின்கண் வேறு நினைவுகளை யெழுப்பிக் கெடுத்து நரகத்துய்க்கும் கொடுமை காட்டி நெஞ்சினைச் சினந்து கொண்டவாறு. (9)
|