பக்கம் எண் :

16

16. திருவண்ணாமலைப் பதிகம்

 

      திருவதிகை வீரட்டேசுரரையும் பெரியநாயகியாரையும் வழிபட்டு வந்த வள்ளற் பெருமான் தென்பெண்ணை வடகரை வழியாகத் திருவண்ணாமலை செல்ல விழைகின்றார். திருவண்ணாமலை யடைதற்கும் அங்கே கோயில் கொண்டருளும் பெருமானது திருவருள் இன்றியமையால் அதனை நினைந்து இத் திருப்பதிகத்தைப் பாடுகின்றார். பாட்டுத்தோறும் திருவண்ணாமலையடைந்து பெண்ணாகிய பெருமானைக் கண்டு வணங்கும் பேற்றினை அருளுமாறு வேண்டுவதைக் காணலாம்.

 

    எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2490.

     வளங்கிளர் சடையும் விளங்கிய இதழி
          மாலையும் மால்அயன் வழுத்தும்
     குளங்கிளர் நுதலும் களங்கினர் மணியும்
          குலவுதிண் புயமும்அம் புயத்தின்
     தளங்கிளர் பதமும் இளங்கதிர் வடிவும்
          தழைக்க நீ இருத்தல்கண் டுவத்தல்
     உளங்கினர் அமுதே துளங்குநெஞ் சகனேன்
          உற்றரு ணையில்பெற அருளே.

உரை:

      வளம் பொருந்திய சடையும் விளக்கமுடைய கொன்றை மாலையும் திருமாலும் பிரமனும் வணங்கி வாழ்த்தும் கண் பொருந்திய நெற்றியும், கழுத்தின் நீலமணி போன்ற நிறமும், திண்மை பொருந்திய தோளும் தாமரை மலரின் இதழ் போன்ற திருவடியும், இளஞ்சூரியனது ஒளி பொருந்திய மேனியும் சிறந்தோங்க நீ வீற்றிருப்பதைக் கண்டு மகிழ்தற்கு, என் மனத்தின்கண் ஊக்கம் கிளர்விக்கும் அமுது போன்ற பெருமானே, கலங்குகின்ற நெஞ்சினையுடைய யான் திருவண்ணாமலை வருதற்கு அருள் புரிக. எ.று.

     கங்கையாறும் பிறைத் திங்களும் தாங்குதலால் சிவபெருமான் சடையை “விளங்கிளர் சடை” எனச் சிறப்பிக்கின்றார். பொன்னிறங் கொண்டு பொலிதலால் “விளங்கிய இதழி மாலை” என விளம்புகின்றார். குளம் - நெற்றி; ஈண்டு ஆகு பெயராய் நெற்றி விழிக்காயிற்று. நஞ்சுண்டு நீலமணியின் நிறமும் ஒளியும் கொண்டு நிகழ்தலால் திருக் கழுத்தை, “களம் கிளர் மணி” யெனப் புகழ்கின்றார். மலையை வில்லாக வளைக்கும் வன்மை பற்றிக் “குலவு திண்புயம்” எனக் குறிக்கின்றார். அம்புயத்தின் தளம், தாமரை மலரின் இதழ். “இள ஞாயிறின் சோதி யன்னான்” (ஆலத்) என ஞானசம்பந்தர் முதலியோர் பராவுதலால், “இளங்கதிர் வடிவு” என்கின்றார். ஞானிகளின் திருவுள்ளத்தில் எழுந்தருளி ஞான யோக முயற்சிக்கண் இன்புறுத்தி ஊக்குகின்ற அருட் செயல் பற்றி, “உளங்கிளர் அமுதே” என உரைக்கின்றார். திருவண்ணாமலைக்குச் சென்று சேர்தலின் அருமை நினைந்து அயர்வுறும் நெஞ்சினை யெண்ணி, “துளங்கும் நெஞ்சகனேன்” என்றும், துளக்க மின்றிச் சென்றடைதற்கு அருள் செய்தல் வேண்டும் என்ற கருத்தால், “அருணையில் உற்றுப் பெற அருளே” என்றும் முறையிடுகின்றார். அண்ணாமலை செம்மண் மலையாய்ச் செந்நிற முடையதாதலால் வடமொழியாளர் அதனை அருணகிரி, அருணாசலம் என்பர். அருணம் - சிவப்பு. அருணகிரி அருணை என மருவுதலுண்டு. அதனை அண்ணாமலை யென்றும், அம்மலை நின்ற நாட்டை அண்ணா நாடு என்றும் முன்னாளைத் தமிழர் வழங்கி வந்துள்ளதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. திருவண்ணாமலைக்குக் கிழக்கில் கீழண்ணாத்தூர் என்றோர் ஊரிருந்து சான்று பகர்கின்றது..

      இதனால் திருவருளை யடைந்து பெருமானைத் தரிசித்து இன்புறுதற்குத் திருவருள் செய்தல் வேண்டுமென விழைந்தவாறாம்.

     (1)