2494. மறையும்அம் மறையின் வாய்மையும் ஆகி
மன்னிய வள்ளலே மலர்மேல்
இறையும்மா தவனும் இறையும்இன் னவன்என்
றெய்திடா இறைவனே அடியேன்
பொறையும்நன் னிறையும் அறிவும்நற் செறிவும்
பொருந்திடாப் பொய்யனேன் எனினும்
அறையும்நற் புகழ்சேர் அருணையை விழைந்தேன்
அங்கெனை அடைகுவித் தருளே.
உரை: வேதமும் வேதமோதும் மெய்ப்பொருளுமாய் நிலைபெற்ற வள்ளலே, பூமேல் இருக்கும் பிரமனும் திருமாலும் இந்திரனும் இத்தன்மையன் என்றறிந்து அடைய முடியாத இறைவனே, அடியவனாகிய யான் பொறுமையும் நல்ல நிறையும் நல்லறிவும் நல்ல அடக்கமும் இல்லாத பொய்யனாயினும், நல்லவர் உரைக்கும் நல்ல புகழ் சேர்ந்த திருவண்ணாமலைக்கு வர விரும்புகிறேன்; அத்தலத்திற்கு யான் வந்தடைதற்கு அருள் புரிக. எ.று.
வேதத்தையே இறைவன் என்பதுபற்றி, “மறையும்” எனவும், வேதங்கூறும் மெய்ப்பொருளும் பரம்பொருனென்பதனால் “மறையின் வாய்மையுமாகி” எனவும், நித்தப் பொருள் என்பது கொண்டு “மன்னிய வள்ளலே” எனவும் இயம்புகின்றார். மலர்மேல் இறை - பிரமன். மாதவன் - திருமால். இறையெனப் பொதுப்பட மொழிதலால் இந்திரன் என்பது பெறப்பட்டது. இத்தன்மையன் என்று அறியாமையால் எய்த மாட்டாராயினமை தோன்ற, “இன்னவன் என்று எய்திடா இறைவனே” என்கின்றார். பொறை - பொறுமை. நிறை - புலன் வழியோடாதவாறு நிறுத்தும் பண்பு; அதனால் நன்மையே விளைதலின், “நன்னிறை” என்றும், அடக்கம் அமரருள் உய்க்கும் நலம் உடையதாகலின், “நற்செறிவு” என்றும் இசைக்கின்றார். நிறை செறிவுகளை நல்லவெனச் சிறப்பித்தமையால், இடை நின்ற அறிவும் நல்லறிவாயிற்று. பொறை முதலாகக் கூறிய நற்பண்பின்றிப் பொய்யொழுக்கமுடையேன் என்பார், “பொருந்திடாப் பொய்யனேன்” எனவும், இத்தகைய யான் நினது திருவருளாலன்றித் திருவண்ணாமலையில் நின்னுடைய திருமுன் படைதல் கூடாதென்பார், “அருணையை வீழைந்தேன் அங்கெனையடை குவித்தருள்” எனவும் இயம்புகின்றார். திருமுறை யாசிரியர்களும் திருப்புகழாசிரியரும் பிறரும் புகழ்ந்தோதும் பெருமையுடையதாகலின், “அறையும் நற்புகழ்சேர் அருணை” என்று பாராட்டுகின்றார்.
இதனால் பிரமன் முதல் இந்திரனை யுள்ளிட்ட தேவர்கள் அடைய முடியாத பெருமையுடையது திருவண்ணாமலை என்பது தெரிவித்தவாறாம். (5)
|