பக்கம் எண் :

2496.

     உலகுயிர் தொறும்நின் றூட்டுவித் தாட்டும்
          ஒருவனே உத்தம னேநின்
     இலகுமுக் கண்ணும் காளகண்ட டமும்மெய்
          இலக்குவெண் ணீற்றணி எழிலும்
     திலகஒள் நுதல்உண் ணாமுலை உமையாள்
          சேர்இடப் பாலுங்கண் டடியேன்
     கலகஐம் புலன்செய் துயரமும் மற்றைக்
          கலக்கமும் நீக்குமா அருளே.

உரை:

      உலகின்கண் உயிர் தோறும் உடனாய் நின்று அவ்வவ்வுயிரின் வினைப்பயனை நுகர்வித்து இயக்கும் ஒருவனே, உத்தமனே, நின்னிடத்து விளங்கும் கண் மூன்றையும் கரிய கழுத்தையும் மேனியில் ஒளிரும் வெண்மையான திருநீற்றுப் பூச்சழகையும், திலகமிட்ட ஒள்ளிய நெற்றியையுடைய உண்ணா முலையாகிய உமையம்மை சேர்ந்த இடப் பாகத்தையும் கண்களாற் கண்டு கலகம் விளைவிக்கும் ஐம்புலன்களால் உண்டாகும் துன்பமும் பிற கலக்கங்களும் அடியேன் நீக்கி யுய்தி பெற அருள் செய்க. எ.று.

     உயிர்கள் செய்யும் வினைப்பயனைத் தாமே யறிந்து கொள்வதும், வினைப்பயன் அறிவில்லாதாகலின் அது தானே சென்று தன்னைச் செய்தவனை யடைவதும் இல்லாமையால், பயனை நுகர்வித்தல் சிவபரம் பொருளின் செயலாதலால், “உலகுயிர்தொறும் நின்று ஊட்டுவித்தாட்டும் ஒருவனே” என வுரைக்கின்றார். “வள்ளலவன்-செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யே போல், செய்வன் செயலணையா சென்று” எனவும், “அவ்வினையைப் பேரால் ஊட்டும் பிரானின் நுகராரேல், ஆர்தாம் அறிந்தணைப்பா ராங்கு” எனவும் சிவஞானபோதம் ஓதுவது காண்க. சிவனுக்கு ஒருவன் என்பதே ஒரு பெயர். “ஒருவன் என்னும் ஒருவ போற்றி” என மணிவாசகர் உரைப்பது அறிக. ஞாயிறும் திங்களும் நெருப்புமாய் இயல்வதனால், இறைவன் முக்கண்களை “இலகு முக்கண்” எனப் புகழ்கின்றார். காள கண்டம் - கரிய கழுத்து. வெண்ணீரணிந்த திருமேனி ஒளி கொண்டு திகழும் அழகை எண்ணி “இலங்கு வெண்ணீற்றணி யெழில்” எனச் சிறப்பிக்கின்றார். மங்கல மகளிர்க்கு நுதலில் திலகம் பொற்பளித்தலின், உமையம்மையைத் “திலக வொண்ணுதல் உமையாள்” எனவும், அப் பெருமாட்டியை ஞானசம்பந்தர் “உண்ணா முலையுமையாளொடும் உடனாகிய ஒருவன்” (அண்ணாமலை) எனப் போற்றிப் பாடுவது கொண்டு “உண்ணாமுலையுமையாள் சேர் இடப்பால்” எனவும் இயம்புகிறார். ஐம்புலன்கண் மேற் செல்லும் ஆசை காரணமாக மக்களுயிர்க்குத் துன்பங்கள் உண்டாதலால், அவற்றைக் “கலக வைம்புலன் செய்துயரம்” என்றும், மன மொழி மெய்களால் விளையும் கலக்கங்களை, “மற்றைக் கலக்க” மென்றும் கூறுகின்றார்.

     இதனால் திருவண்ணாமலையிற் சிவபெருமான் திருமுன்பு சென்று கண்டு பரவுவது பொறி புலன்களாலும் மன முதலிய கருவிகளாலும் விளையும் துன்பங்கள் நீங்குமெனத் தெரிவித்தவாறாம்.

     (7)