2497. அருட்பெருங் கடலே ஆனந்த நறவே
அடிநடு அந்தமுங் கடந்த
தெருட்பெரு மலையே திருஅணா மலையில்
திகழ்சுயஞ் சோதியே சிவனே
மருட்பெருங் கடலின் மயங்குகின் றேன்என
மயக்கெலாம் ஒழிந்துவன் பிறவி
இருட்பெருங் கடல்விட் டேறநின் கோயிற்
கெளியனேன் வரவரம் அருளே.
உரை: அருள் நிறைந்த பெரிய கடல் போன்றவனே, இன்பந்தரும் தேனே, முதலும் இடையும் முடிவு என்ற எல்லை யில்லாத தெளிந்த ஞானமாகிய மலையாயவனே, திருவண்ணமலையில் எழுந்தருளும் இயற்கை யொளியே, சிவபெருமானே, மருட்சியாகிய பெரிய கடலின்கட் கிடந்து மயங்குகின்ற எனது மயக்க மெல்லாம் நீங்கி வன்மை கொண்ட பிறப்பாகிய பெரிய இருட் கடலினின்றும் கரையேறி யுய்தற் பொருட்டு நின்னுடைய திருக்கோயிலைக் கண்டு வழிபடுவதற்காக எளியனாகிய யான் வருதற்கு அருள் செய்க. எ.று.
எல்லையற்ற பேரருளாளனாவது பற்றிச் சிவபெருமானை, “அருட்பெருங்கடலே” என்றும், அன்பர்க்கு இடையறாத இன்பம் தருதலால், “ஆனந்த நறவே” என்றும் கூறுகின்றார். நறவு - தேன். உலகியற் பொருள் அனைத்தும் முதல் நடு இறுதி யென்ற முக்கூற்று இயல்பினவாதலின், அந்த அளவு கொண்டு காண்பார்க்குத் தெளிந்த ஞான மாமலையாகிய சிவபரம் பொருள் அவ்வளவைகட்கு அடங்காமைபற்றி, “அடி நடு வந்தமும் கடந்த தெருட் பெருமலையே” என்று சிறப்பிக்கின்றார். திருவண்ணாமலையில் தோற்றுவிக்கத் தோன்றாமல் தானே தனி நின்று சுடரும் ஒளி யுருவினனாதலால், “திருவண்ணா மலையில் திகழ் சுயஞ்சோதி” எனவும், “சிவனே” எனவும் போற்றுகின்றார். பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருட்சி யுணர்வே மக்களுலகில் கடல் போற் பெருகி நிலவுதலால், “மருட் பெருங் கடலின் மயங்குகின்றேன்” என்றும் அதனால் தாம் எய்துவது பெருமயக்கமாதலின், அது நீங்கினாலன்றிப் பிறவித் தொடர்பு ஒழியாமை பற்றி, “மயக்கெலாம் ஒழித்து வன்பிறவி விட்டேற” என்றும் இயம்புகின்றார். மருட் கடற்கண் வீழ்ந்தார் மயக்கமே யுறுவராதலால், “மயங்குகின்றேன்” என்று குறிக்கின்றார். “மருளானாம் மாணாப் பிறப்பு” (குறள்) எனப் பெரியோர் கூறுதலால், “வன்பிறவிக் கடல்” என்கின்றார். பிறவிக்கு ஏதுவும் விளைவும் மருள் செய்யும் அறியாமையிருளாதலால், “வன்பிறவி இருட் பெருங்கடல்” என வுரைக்கின்றார். விடாது தொடர்வது பற்றி “வன்பிறவி” என்று சிறப்பிக்கின்றார்.
இதனால் மயக் கொழிந்து பிறவிக் கடலின் நீங்கிக் கரை யேறற்குத் திருவண்ணாமலைத் திருக்கோயில் திருமுன் படைத்து வழிபடுவது தெரிவித்தவாறாம். (8)
|