பக்கம் எண் :

2499.

     ஏதுசெய் திடினும் பொறுத்தருள் புரியும்
          என்உயிர்க் கொருபெருந் துணையே
     தீதுசெய் மனத்தார் தம்முடன் சேராச்
          செயல்எனக் களித்தஎன் தேவே
     வாதுசெய் புலனால் வருந்தல்செய் கின்றேன்
          வருந்துறா வண்ணம்எற் கருளித்
     தாதுசெய் பவன்ஏத் தருணையங் கோயில்
          சந்நிதிக் கியான்வர அருளே.

உரை:

      என்ன குற்றம் செய்தாலும் பொறுத்து அருள் செய்யும் எனது உயிர்க்கு ஒரு பெரிய துணையா யிருப்பவனே, தீமைகளைச் செய்யும் மனமுடைய தீயவர்களோடு கூடாத செய்கையை எனக்கு ஈந்த தெய்வமே, அலைத்து வருத்தும் புலன்கள் ஐந்தாலும் வருந்துகின்ற யான் மேலும் வருந்தாவாறு பிரமன் பணிந்து பரவும் திருவண்ணாமலையில் நின் திருமுன்பு அடைந்துய்ய அருளுக. எ.று.

     “பொறுத்தருள் புரியும்” என்றதனால், ஏது என்பது குற்றத்தின்மேல் நின்றது. உயிர்க்குத் துணையாதல், உயிரின்கண் அறிவாய் இருந்து அறிவன அறிவித்தல். தமக்கும் பிறர்க்கும் பிற வுயிர்க்கும் தீங்கு நினைக்கும் மனத்தையுடைய கொடியவர். தீயவருடன் கூடுதல் தீச் செயலாதலால், அதன்கண் ஈடுபடாமைக் காத்தல் நல்வினையாகும். அதனால், “தீது செய் மனத்தார் தம்முடன் சேராச் செயல் எனக்கு அளித்த தேவே” என்று பரவுகின்றார். புலனைந்தும் பல்வேறு ஆசைகளைத் தூண்டி யலைப்பதால் “வாது செய் புலன்” என்று கூறுகின்றார்; வருந்துறல் - வருந்துதல். தாது - பல்வகைத் தாதுக்களால் ஆகிய உடம்புக் காதலின், ஆகு பெயர். உடம்பு படைப்பவன் - பிரமன். திருவண்ணாமலையிலுள்ள திருக்கோயிலை, “அருணையங் கோயில்” எனப் புகல்கின்றார்.

     இதனால் புலனைந்தும் எய்துவிக்கும் துன்பத்தால் வருந்தாமையைத் திருவண்ணாமலையில் சிவனை வழிபடும் செய்கை நல்குமெனத் தெரிவித்தவாறாம்.

     (10)