பக்கம் எண் :

1

17. அருணகிரிச் சிவக்கொழுந்து

 

திருவண்ணாமலை

 

    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2500.

     திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
          சிவஞான நிலைவிளங்கச் சிவாநுபவம் விளங்கத்
     தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
          திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
     உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
          உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்
     மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
          வயங்கருண கிரிவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.

உரை:

     அருட்செல்வம் சிறக்கும் சிவயோக சித்திகள் பெருகவும் சிவஞான நிலையும் சிவபோகமும் உயிர்கட்கு உண்டாதற் பொருட்டு அழகிய வீதிகளையுடைய திருத்தில்லை நகர்க்கண்ணுள்ள திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடும் சிவவொளி திகழும் திருவிளக்கே, உடலும் உயிரும் உணர்வும் பெருகி உலகமெல்லாம் சிறப்படையத் திருவருள் நல்கும் பெரிய தாய் போன்றவனே, மணம் கமழும் கூந்தலையுடைய கொடி போன்ற உமாதேவி மகிழ்வுடன் ஒருபால் இனிது விளங்கப் புகழ் மிகும் திருவண்ணாமலை பெருமை மிக வளர்ந்தோங்கும் சிவக்கொழுந்தே, உன் திருவருளை வேண்டுகிறேன். எ.று.

               திரு, திருவருட் செல்வமுடைமையால் உளதாகும் பொற்பு. சிவ யோக சித்தி -சிவயோகத்தால் விளையும் நலங்கள். சிவஞான நிலை - சிவஞானம் நிறைந்து விளங்கும் நிலைமை. அந்நிலையிற் சிவபோகம் துய்த்தல் சிவானுபவமாகும். தில்லை - சிதம்பரம் என இந்நாளில் வழங்கும் தில்லை நகர். செல்வ நெடுமாடங்கள் பொருந்திய திருவீதியைத் “தெரு” என்று எடுத்தோதுகின்றார். “செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச் செல்வ மதி தோயச் செல்வமுயர்கின்ற, செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம்” என்று திருஞானசம்பந்தர் போற்றிப் புகழ்வது காண்க. சிவஞான வொளியைப் பரப்பி அதன் நடுவே திருக்கூத்துச் சிறந்து தோன்ற விளங்குவதுபற்றி, “திருக்கூத்து விளங்க வொளி சிறந்த திருவிளக்கே” என வுரைக்கின்றார். உருவில்லாத வுயிர்க்கு உருக் கொடுப்பது உடம்பாதலால், அதனை “உரு” என்றும், உயிர் உணர்வு வடிவினதாதல்பற்றி, “உயிர் விளங்க உணர்ச்சியது விளங்க” என்றும் அடுத்தடுக்கிக் கூறுகின்றார். உயிரில்லது உலக மாகாமையின், “உலகமெலாம் விளங்க” எனவும், “அவன் அருளாலன்றி இவை யனைத்தும் உளவாதல் இல்லாமை நினைப்பிப்பாராய், “அருளுதவு பெருந்தாயே” எனவும் இயம்புகின்றார். தாயாகும் பெருமை சிவனுக்கு மாதொரு கூறனாதலால் சிறத்தலின், “மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க” என்று கூறுகிறார். மரு - நறுமணம். வல்லி - கொடி; ஆகு பெயராய் உண்ணாமுலை யுமையாளுக்காயிற்று. அருணகிரி -திருவண்ணாமலை. குறைவிலா நிறைவாய் விளங்குவது புலப்பட, “வளர்ந்த” என இறந்த காலத்தாற் குறிக்கின்றார். மென்மைப் பண்பு பற்றி, சிவபரம்பொருளைச் “சிவக்கொழுந்து” என்று சிறப்பிக்கின்றார். உன் திருவருளை வேண்டுகிறேன் என்பது குறிப்பெச்சம்.

     இதனால், திருவருளைச் சிவபிரானது திருக்கூத்தின் உண்மை நலம் உரைத்து அவனது திருவருளை வியந்து வேண்டியவாறாம்.

     (1)