18
18. அருட்குரு தோத்திரம்
திருவோத்தூர்
இதன்கண் அருட்குரு வெனப்படுபவர்
திருவோத்தூர்ச் சிவஞானதேவர்; அவர் திருஞானசம்பந்தர்பால் மிக்க ஈடுபாடுடையவர். வடலூர்
வள்ளற் பெருமான் திருஞானசம்பந்தரை ஞான குருவாகக் கொண்டவர். அவருடைய திருமுறைகளை எழுத்தெண்ணி
யோதி யுணர்ந்தவர் என்பதைத் திருவருட்பாவை முறையாகப் படித்துணர்பவர் இனிதறிகுவர்.
திருவண்ணாமலைக்குப் புறப்படுகையிலேயே சிவஞான
சிவயோக நிலைகளில் முதிர்ச்சி பெற்ற வள்ளற் பெருமான் பெண்ணாகிய பெருமானை அண்ணாமலையில்
கண்டு பரவினவர் காஞ்சியம்பதிக்குத் திருவோத்தூர் வழியாக வருகின்றார். திருவோத்தூர்க்குச்
சிறப்பு அங்கே திருஞானசம்பந்தர் ஆண் பனையைப் பெண்பனையாக்கிக் குலையீனச் செய்ததாகும். திருவோத்தூர்
வேதநாயகனைத் தரிசித்துப் பராவலுற்ற வள்ளற்பெருமான் அங்கே சிவப்பணி புரிந்தொழுகிய சிவஞான
தேவரை இந்த நெடும் பாட்டாற் பாடிப் போற்றுகின்றார். இத் திருப்பாட்டில் வள்ளலார் சித்தாந்த
ஞானோபதேசம் சிவஞான தேவர் வழிப்பெற்றதாக நாம் உணருமாறு விரிவாகக் கூறுவதைக் காணலாம்.
நாற்பத் தெண்சீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
2501. உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்
ஒளிபெற விளங்குசுடரே
உதயநிறை மதிஅமுத உணவுபெற நிலவுசிவ
யோகநிலை அருளுமலையே
உனதுசெயல் எனதுசெயல் உனதுடைமை எனதுடைமை
உணர்என உணர்த்துநிறைவே
உளஎனவும் இலஎனவும் உரைஉபய வசனம்அற
ஒருமொழியை உதவுநிதியே
ஒன்றுடன் இரண்டெனவி தண்டைஇடும் மிண்டரொடும்
ஒன்றல்அற நின்றநிலையே
உன்னல்அற உன்னுநிலை இன்னதென என்னுடைய
உள்உணர உள்ளுமதியே
உன்நிலையும் என்நிலையும் அன்னியம்இ லைச்சிறிதும்
உற்றறிதி என்றபொருளே
உண்மைநெறி அண்மைதனில் உண்டுளம்ஒ ருங்கில்என
ஓதுமெய்ப் போதநெறியே.
உரை: உலகியல் வாழ்வின் மயக்கத்தை முற்றவுமடைந்து தோயும் என்னுடைய மனம் இருள் மயக்கம் நீங்க அருள் ஒளி பெறச் செய்யும் ஞானச்சுடரே, உதய காலத்தில் ஒளி நிறைந்து தோன்றும் முழு மதியமாய் உணர்வின்கண் மதியொழுகும் அமுதமாகிய ஞான வுணவு எளியேன் பெற விளங்கும் சிவயோகத்தை எனக்கு அருளிய அருள் மலையே, யோகக் காட்சியில் தோன்றி உன்னுடைய செயல்யாவும் என் செயல் என்றும், உனது உடைமையனைத்தும் என்னுடைய உடைமையென்றும் உணர்க என அறிவுறுத்திய நிறை ஞான வுருவமே, மயக்கவறிவால் உண்டெனவும் இல்லை யெனவும் பேசுகின்ற இருவகைப் பேச்சுக்கும் இடமின்றாக ஒரு சொல்லால் அறிவைத் தந்தருளிய ஞானச் செல்வமே, பிரமப் பொருள் ஒன்றென்றும் இரண்டென்றும் விதண்டாவாதம் புரியும் தருக்கவாதிகளில் ஒருவராகக் கலவாமல் தனி நின்றுயர்ந்த நிலையை யுடையவனே, நினைப்பற நினைக்கும் நினைவுதான் இன்ன தென்று அடியேன் உள்ளம் உணருமாறு நிலைபெற்ற ஞானப்பொருளே, சுத்த முத்தி நிலையில் உன்னிலைமைக்கும் என்னுடைய நிலைமைக்கும் சிறிதும் வேறுபாடில்லையென்பதைச் சிந்தித்தறிக என அறிவுறுத்த மெய்ப்பொருளே, உண்மை காணும் நெறி உனக்கு அருகிலேயே யுளது; உன் சிந்தை ஒடுங்குமாயின் அதனைப் பெறலாம் என வுரைத்தருளிய உண்மை ஞானப் பயனே. எ.று.
உலகியல் மயக்கம் செய்வதென்பதை “மமையல் செய்து மண்ணின் மேல் பிறக்குமாறு காட்டினாய்” (துருத்தி) என ஞானசம்பந்தர் ஓதுவதாலும், “மையல் மானுடமாய் மயங்கும் வழி, ஐயனே தடுத்தாண்டருள்” (தடுத்தாட்) எனச் சேக்கிழார் நம்பியாரூரர் வாக்காகத் தெரிவிப்பதாலும் அறிக. மயலின் அடைவு பெறல், மயக்கத்தால் முற்றவும் மயங்கி யொழிதல். மயக்கம் இருள் செய்தலின், அதனைப் போக்குவது அறிவொளியாதலால், “ஒளி பெற விளங்கு சுடரே” எனவுரைக்கின்றார். ஞாயிறும் திங்களும் உதய காலத்தில் ஒளி மிக்கிருப்பதுபற்றி, யோகக் காட்சியில் காணப்படும் அமுத சந்திரனை, “உதய நிறைமதி” எனக் கூறுகின்றார். இலக்கண நூலோர் மதியென்ற சொற்கு மதுவையுடையது எனப்பொருள் கூறுவதும் இதுபற்றியே என அறிக. துவாத சாந்தத்தில் விளங்கும் சந்திரனிடத்தொழுகும் அமுதையுண்டு மகிழ்வது யோகியர் இயல்பு என யோக நூலோர் கூறுவர். சிவஞானாமிர்தமுண்பது சிவயோகர் செயல் என்பது தோன்ற, “மதியமுத வுணவு பெற நிலவு சிவயோக நிலை” என வள்ளற் பெருமான் உரைக்கின்றார். யோகம் என்னும் சொல் கூடுதல் என்று பொருள்படுதல், ஞானத்தால் கூடிய வழி நீ வேறு நான் வேறு எனும் வேற்றுமைக்கு இடமின்மை இனிது புலப்பட, “உனது செயல் எனது செயல் உனதுடைமை எனதுடைமை உணர் என உணர்த்தும் நிறைவே” என இசைக்கின்றார். “மெய்ப்பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செயுமவன்” (கழுமலம்) என ஞானசம்பந்தர் இதனைச் சுருங்கக் கூறுகின்றார். குறைவுள்ளவிடத்தே வேற்றுமை தோன்றுதலால் “நிறைவே” எனக் குறிக்கின்றார். பரமாய பொருள் உண்டோ இல்லையோ என வினவுதலும் விடையிருத்தலும் உலகியலறிஞரிடம் உண்மையின், “உளவெனவும் இலவெனவும் உரை யுபய வசனம்” எனக் கூறுகின்றார். உபய வசனம் - இருவகை யுரை. ஒரு மொழியாவது, “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி” (பாசுரம்) என ஞானசம்பந்தர் அறுதியிட்டுரைத்தது. பிரமப் பொருள் பாரமார்த்தத்தில் ஒன்றெனவும், விவகாரத்தில் பரம்பிரமம், சீவப்பிரமம் என இரண்டெனவும் வாதம் புரியும் தார்க்கிகரை, “ஒன்றுடன் இரண்டென விதண்டையிடும் மிண்டர்” என விளம்புகிறார். விதண்டை - விதண்டாவாதம். மிண்டர் - வன்சொல்லும் வன் செயலும் உடையவர்; மிகுவலி யுடையவரெனினும் அமையும். அவரோடு கூடலிற் ஞானப் பயன் இன்மையால், “ஒன்றலற நின்ற நிலையே” என்று கூறுகிறார். உன்னலற உன்னும் நிலை, பிற நினைவுகட்கு இடமின்றி நினைத்தற்குரிய தொன்றையே நினைக்கும் நிலை. இருள் நீக்கி அருட் சுடர் விரித்து மனத்தின்கண் பரம்பொருள் நிற்கும் நிலையை, மணிவாசகப் பெருமான் நினைந்த நிலையாம்; “இன்றெனக்கருளி இருள் கடிந்து உள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்” (கோயில்) என அப் பெருமான் உரைப்பது காண்க. அந்நிலையில் சிவனை யல்லது வேறு பொருளில்லை என்றும், பிற யாவும் அவனல்லவென்றும் அவையும் அவனையின்றி இல்லை யென்றும் உள்ளம் உணர்வது விளங்க, “இன்னதென என்னுடைய உள்ளுணர உள்ளும் மதியே” என உரைக்கின்றார். மதி - ஈண்டுத் திருவருள் ஞானப்பொருள் குறித்து நிற்கிறது. பெத்த நிலையில் சிவத்தின் வேறாம் அண்ணியமாக நிற்கும் ஆன்மா முத்திக்குரிய சுத்த நிலையில் ஞானமே யுருவாய் வேறற ஒன்றி நிற்குமென்ற உண்மை நிலையை, “என் நிலையும் உன் நிலையும் சிறிதும் அன்னியமிலை” எனவும், இறப்பில் தவ வுணர்வால் இனிது அறியப்படும் என்றற்கு “உற்றறிக என்ற பொருளே” எனவும் கூறுகின்றார். தவத்தால் உணர்த்த “அன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே” என்றும், “இரு வினை யொப்பில் இறப்பில் தவத்தால் மருவுவனாம் ஞானத்தை வந்து” என்றும் சிவஞான போதம் தெரிவிப்பது காண்க. இந்த உண்மை நெறியை யுணர்த்தும் யாம் உன்பால் தன்மையிலும் முன்னிலையிலும் உள்ளோம்; மனத்தின்கண் சிந்தையை ஒரு நெறிப்படுத்தி நோக்குக என ஞான குருவாய் உணர்த்துவதைச் சிவஞானபோதம் விளக்குவதை நினைப்பிப்பாராய், “உண்மை நெறி அண்மைதனில் உண்டுளம் ஒருங்கில் என ஓதும் மெய்ப் போத நெறியே” என மொழிகின்றார். “அருவாகி நின்றானை யார் அறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று” என்பது சிவஞான போதம். மெய்ப்போத நெறி என்றது சிவஞான போதத்தை நினைப்பிப்பது அறிக. போதம் என்னாது போதநெறியென்றது போதநெறியால் விளையும் பயன் மேற்று.
அலகின்மறை மொழியும்ஒரு பொருளின்முடி பெனஎன
தகந்தெளிய அருள்செய்தெருளே
ஐம்பூதம் ஆதிநீ அல்லைஅத் தத்துவ
அதீதஅறி வென்றஒன்றே
அத்துவா ஆறையும் அகன்றநிலை யாதஃது
அதீதநிலை என்றநன்றே
ஆணைஎம தாணைஎமை அன்றிஒன் றில்லைநீ
அறிதிஎன அருளுமுதலே
அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
அறிவித்த சுத்தஅறிவே
அத்துவித நிலைதுவித நிலைநின்ற பின்னலது
அடைந்திடா தென்றஇறையே
ஆனந்த மதுசச்சி தானந்த மேஇஃது
அறிந்தடைதீ என்றநலமே
அட்டசித் திகளும்நின தேவல்செயும் தீஅவை
அவாவிஇடல் என்றமணியே.
உரை :அளவில்லனவாகிய வேதங்கள் பலவற்றை ஓதினும் முடிந்த பொருள் ஒன்றே என்று என் மனம் இனிதறியத் தெரிவித்த தெளிந்த அறிவுருவே, நில முதலாகிய பூத தத்துவங்கள் நீயல்ல; அவற்றிற்கு மேம்பட்ட அறிவுரு என்று அறிவித்த ஒருவனே; அதீதமாவது அத்துவாக்கள் ஆறினையும் நீங்கிய நிலை யாதோ அது என்று அறிவித்த நன்பொருளே; எமது ஆணையாகச் சொல்லுகிறேன்; சிவமாகிய எம்மையன்றி வேறு ஒன்றும் இல்லையென அறிக என உரைத்தருளும் முதல்வனே; அன்பு எனப்படுவது சிவமே என எனக்கு இயம்பிய தூய அறிவனே; அத்துவித நிலையும் துவித நிலையில் நின்ற பின்னரே எய்துவது எனவுரைத்த இறைவனே; ஆனந்தமென்பது சச்சிதானந்தமாகும், இதனை நீ அடைக என்று இசைத்த நல்லவனே; எண் வகைச் சித்திகளும் நினக்கு ஏவல் செய்வனவாகும். ஆகவே அவற்றைப் பெற விரும்புவதை ஒழிக என்று கூறியருளிய குருமணியே. எ.று.
இருக்கு முதலிய வேதம் நான்கினும் எண்ணிறந்த இருக்குகள் இருப்பதாலும், ஒவ்வொன்றும் வேதம் எனப்படுதலாலும், “அலகில் மறைமொழி” என்றும், அவற்றாற் பல்வேறு பொருள் கூறப்படினும் முடிபு ஒன்றே என்றும் தெளிந்தோர் உரைப்பதுபற்றி, “மறைமொழியும் ஒரு பொருளின் முடிபு” எனவும், கேட்போர் மனம் கொள்ளுமாறு தெளிவித்தமை புலப்பட, “எனது அகம் தெளிய அருள் செய்தெருளே” எனவும் கூறுகின்றார். தெருள் - தெளிவு. தெருண்ட ஆசிரியனைத் தெருள் என்கிறார். குணியைக் குணமாக உரைப்பது ஒருவகைச் செய்யுள் மரபு; உபசார வழக்கு என்றும் கூறுவர். பிற வருமிடங்களிலும் இதனையே கூறிக்கொள்க. நில முதலிய பூதங்களும் தத்துவக் கூறுகளாகும். அதுபற்றியே, “ஐம்பூத மாதி நீ யல்லை” என்றவர், தத்துவங்களின் வேறாய் அறிவுடைமையால் மேலாவாய் என்றற்கு. “அத்தத்துவாதீத அறிவு என்ற ஒன்றே” எனக் குறிக்கின்றார். ஒருமைப் பண்புடைமைபற்றி “ஒன்றே” என்கின்றார். வன்னம், பதம், மந்திரம், கலை, தத்துவம், புவனம் என்ற ஆறும் அத்துவா எனப்படும். இவை யாறும் உயிர்கள் மன மொழி மெய்களைக் கொண்டு செய்யும் வினை வகைகட்கு வழியாதலால் இவை அத்துவா எனப்படுகின்றன. அத்துவாதுவாரம், வழி என்று பொருள்படுவது. வினைகள் தோன்றும் வாயில் என்றற்கு சமய நூலோர் அத்துவா என்கின்றார்கள். ஆன்மா கருவி கரணங்களின் நீங்கித் தனிக்கும் நிலை அதீத நிலை; அதனால் “அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீதநிலை” எனவுரைக்கின்றார். நற்பண்புடைய முதல்வனை “நன்று” என நவில்கின்றார். ஆணை யென்றும் “நமது ஆணை” என்றும் கூறுவது வன்புறை. சிவத்தின் வேறே பரம்பொருள் என ஒன்று இல்லாமையால், “எமையன்றி ஒன்றில்லை” என இசைக்கின்றார். முதல் - முதல்வன். அன்ப ஞானம் என்றலும் உண்மையின், “அன்பென்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே” என விளம்புகின்றார். “ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானமுண்டார்” (ஞானசம். புரா) எனச் சேக்கிழார் கூறுகின்றார். திருமூலர் “அன்பே சிவம்” என்பர். சுத்த அறிவு, சிவஞானம். பரம்பொருளும் ஆன்மாக்களும் சிவமும் சீவனுமாய் இருக்கும் நிலை துவித நிலை; சீவன் பசு பாசங்களின் நீங்கிச் சிவமாந்தன்மை யெய்திச் சிவமும் தானுமாய் விளங்கும் நிலை அத்துவித நிலை. சீவன் சீவமாம் தன்மை எய்துங்காறும் துவித நிலையில் இருத்தலால், “அத்துவித நிலை துவிதநிலை நின்ற பின்னலது அடைந்திடாது என்ற இறையே” என்று சொல்லுகிறார். துவிதம் - இரண்டு; அத்துவிதம் இரண்டன்மை. இறை -இறைவன். சச்சிதானந்தம் - சத்தாயும் சித்தாயும் இருந்து சிவபோகம் துய்க்கும் இன்பநிலையாதலால், “ஆனந்தமது சச்சிதானந்தமே” என்றும், அது ஆன்மாக்கள் பலவும் எய்தி நுகர்தற்குரியதாகலின், “இஃது அறிந்து அடைதி என்ற நலமே” என இயம்புகிறார். அடைதி - அடைவாயாக. சிவஞானச் செல்வ மெய்தியவர்க்கு அணிமா, மகிமா முதலாகவுள்ள அட்டசித்திகளும் வேண்டாதவையும், வேண்டுமாயின் எளிதில் இயல்வனவுமாதலால், “அட்டச்சித்திகளும் நினது ஏவல் செயும்” என்றும், அவற்றால் சிவஞான நலம் உண்டாகாதாகையால், “நீ அவை அவாவியிடல்” என்றும் உரைக்கின்றார். அவாவுதல் - விரும்புதல். அவாவியிடல் - விரும்பற்க என வரும் எதிர்மறை வியங்கோள்..
இலகுபரி பூரண விலாசம்அல திலைஅண்டம்
எங்கணும் எனச்சொல்பதியே
இரவுபகல் அற்றஇடம் அதுசகல கேவலம்
இரண்டின்நடு என்றபரமே
இச்சைமன மாயையே கண்டன எலாம்அவை
இருந்துகாண் என்றதவமே
யான்பிறர் எனும்பேத நடைவிடுத் தென்னோடு
இருத்திஎன உரைசெய்அரைசே
என்களைக ணேஎனது கண்ணேஎன் இருகண்
இலங்குமணி யேஎன் உயிரே
என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு
இருந்தசிவ மேஎன்அன்பே
என்தெய்வ மேஎனது தந்தையே எனைஈன்று
எடுத்ததா யேஎன்உறவே
என்செல்வ மேஎனது வாழ்வேஎன் இன்பமே
என்அருட் குருவடிவமே.
உரை : அண்டங்கள் அனைத்திலும் விளங்குகின்ற சிவத்தின் பரிபூரண விலாசமல்லது வேறு யாதும் இல்லையென வுரைக்கின்ற குருபதியே; இரவு பகலற்ற இடம் என்பது ஆன்மாக்கள் எய்தும் கேவலம் சகலம் என்ற நிலைகட்கு இடைப்பட்டது என்று கூறுகின்ற பரம்பொருளே; காணப்படுபவை யாவும் இச்சை வழியோடும் மனம் காட்டும் மாயாகாரியமாம்; அவற்றைத் தனித்திருந்து காண்பாயாக என அறிவுறுத்த தவச் செல்வமே; யான் வேறு, இவர் பிறராவர் என வேறுபடுத்துரைக்கும் உலகநடையைக் கைவிட்டு எல்லோரும் நம்பவரே எனக் கொண்டு என்னினைவோடே இருப்பாயாக என உபதேசித்த அருளரசே; என் துயர் துடைக்கும் களைகணானவனே, என்னுடைய கண்ணே, இரு கண்களிலும் விளங்கும் மணியே; என்னுடைய உயிரே, எனது அறிவே, என் அறிவின்கண் இருந்தருளும் சிவமே, என்னுடைய அன்பே, எனக்குத் தெய்வமே, என் தந்தையே, என்னைப் பெற்றெடுத்த தாயே; எனக்கு உறவானவனே, எனது செல்வமே, எனக்கு வாழ்வளித்த முதற்பொருளே, யான் பெறும் இன்பமே, எனது அருட் குருவே. எ.று.
மிகப் பலவாகிய அண்டங்கள் எல்லாவற்றினும் எங்கும் எப்பொருளினும் கலந்து பரந்து விளங்குவது சிவபரம்பொருளின் குறைவிலாது நிறைந்த பரப்பல்லது பிறிது யாதுமில்லை என அறிவுறுப்பவன் அவற்றில் ஒன்றாயும் வேறாயும் இருக்கும் பதிப்பொருளாதலால், “இலகுபரி பூரண விலாசமலது இலை அண்டம் எங்கணும் எனச் சொல் பதியே” என்று உரைக்கின்றார். விலாசம் - பரப்பு. பரிபூரணம் - குறைவில்லாத நிறைவு. ஆன்மா - உடல் கருவி கரணங்களோடு கூடி உலகில் வாழும் நிலை சகலம்; கூடாது மலப்பிணிப்புற்றுத் தனித்துச் செயலின்றிக் கிடப்பது கேவலம். இடம் காலம் கருவிகளோடு கூடி ஆன்மா வினை செய்யும் நிலை சகலமாதலின், அதற்குத் தான் இராப் பகல் என்ற காலமுண்டு; “வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது, நினையுங்காலைக் காலமொடு தோன்றும்” என்பர் தொல்காப்பியர். கேவலத்தில் ஆன்மாவின் அறிவு செயல்கள் அதன் சிற்சத்தியில் ஒடுங்கிக் கிடப்பதால் கால வியக்கமில்லை. கேவலத்தின் நீங்கிச் சகலத்திற் புகுங்கால் காலம், இடம் பெறுதல் பற்றி, “இரவு பகலற்ற விடமது சகல கேவல மிரண்டின் நடு என்ற பரமே” என்று இயம்புகின்றார். காலக்கூறு இரவு பகல்களால் உண்டாதலால், காலத்தை “இரவு பகல்” எனவும், சகல கேவல நிலைகளை அவற்றின் வேறாய் நின்று காண்பது பரம்பொருள் என்றற்குப் “பரமே” எனப் பகர்கின்றார். புலன்கள்மேல் உண்டாகும் ஆசை வழி இயங்குவதாகலின் “இச்சை மனம்” எனச் சிறப்பிக்கின்றார். மனமும் அதனாற் காணப்படும் உலகமும் பொருளும் மாயா காரியமாகலின், “மாயையே கண்டனவெலாம்” என்றும், காட்சி வயமாகாது தனித்துச் சிந்திக்குமிடத்து இவ்வுண்மை புலப்படுவதுபற்றி, “அவை இருந்து காண்” என்றும், இதுவும் தவநெறிக் கண் நிற்பாரால் உணர்ந்து காட்டப்படுவதால் “தவமே” என்றும் கூறுகின்றார். பேத நடை சமரச நோக்குக்குத் தடையாய்த் தலைவன் வழி நிற்கவிடாதாகலின், “யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி” என்றும், தன் ஆணை வழி நிற்கும் பலரையும் ஒப்ப நோக்குவது அரசாதலால் “அரசே” என்றும் இயம்புகிறார். துன்பம் துடைப்பற்றிக் “களைகணே” என்கின்றார். உடனிருந்து பொருள்களைக் கண்டும் காட்டியும் உபசரித்தலால் “கண்ணே” எனவும், “என் இரு கண்மணியே” எனவும் இசைக்கின்றார். உயிர்பாற் கொண்ட அருளால் அறிவாயும் அறியுமிடத்து அறிவுக்கறிவாயும் செறிந்திருக்கும் சிவத்தின் செயல் நலம் புலப்படுத்தற்கு “என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே” எனக் கூறுகிறார். தெய்வமே, தந்தையே, தாயே என்பன முதலாயின சிவன்
பால் உள்ள ஆர்வத்தை விளக்குவன. மேற்கூறிய ஞானப் பொருளை இனிது அறிவித்தமையால், “என் அருட் குருவடிவமே” என்று போற்றுகின்றார்.
உரை : துன்பம் விளைக்கும் மனத்தையுடைய எளியேனது குற்றங்களைப் பொறுத்து என்னைப் பணிகொண்ட கருணைக் கடலமுதமே, அந்நாளிற் சீர்காழியில் மூன்றாமாண்டில் தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் உயர்வாகக் கருதப்படும் பல்வேறு சமயவாதிகளும் கண்டு கைகளைத் தலைமேற் குவித்து அருகே நின்று போற்றச் சிவஞானப் பாலை யுண்டு மகிழ்ந்து, இனிமை கணிந்தொழுகும் திருப்பதிகமாகிய செழித்த சொல் மழையை, கண்ணுதற் பெருமானான சிவந்த பவள மலையைக் கண்களாற் கண்டு பொழிந்த அருள் மேகமான திருஞான சம்பந்த வள்ளலாகிய கடவுளே, திருவோத்தூரில் அழகுமிக இருந்து நல்ல சிவப் பணிகளைச் சிவபுண்ணியம் செய்வார் நற்கதியைப் பெறும் திறத்தை உலகவர் கண்டு அறிந்து உய்தி பெறற் பொருட்டு எல்லையற்ற மகிழ்ச்சியுடன் செய்தும் திருவருள் ஞானத்தை அறிவுறுத்தும் ஞானியே, சிவஞான தேவர் என யாவரும் போற்றும் திருப்பெயர் பூண்ட சிவமணியே, எம்மைக் காப்பது இனி யுன் கடமையாகும். எ.று.
கலகத்தால் விளைவது துன்பமாகலின் அதனை யுண்டு பண்ணும் மனத்தைக் “கலகமனம்” என்றும், பிழை செய்தற்குக் காரணம் மனமாதலால், “கலக மனமுடைய என்பிழை” என்றும், பிழை கண்டும் பொறுத்து இன்முகத்தோடு வரவேற்று ஆதரவு செய்து இருந்து கேட்டொழுகும் மாணவனாகக் கொண்ட குறிப்பு விளங்க, “ஆட்கொண்ட கருணையங் கடலமுதமே” என்றும் புகழ்கின்றார். கடலிடத்தே பிறந்த அமுதம் போல்வதுபற்றிச் சிவஞான தேசிகரை, “கடலமுதமே” எனக் குறிக்கின்றார். அவர் திருஞான சம்பந்தப் பெருமானைக் குலகுருவாகப்பேணி வழிபடுபவராதலால், அப்பரம்பரை ஏதுவாகத் தேசிகரையே ஞானசம்பந்தராகக் கருதி அவர் சீர்காழியில் மூவாண்டில் ஞானப்பால் உண்டு செஞ்சொற் பதிகங்கள் பாடிய வரலாற்றை நினைந்து “சம்பந்த வள்ளலாம் கடவுளே” எனப் போற்றுகின்றார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமானை, “தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும். தாவில் தனிச் சிவஞான சம்பந்தராயினார்” (ஞான. புரா) என்று சேக்கிழார் பெருமான் தெரிவிப்பதால், “சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் கைகுவித் தருகு நின்றேத்த” எனவும், சம்பந்தர் உண்டருளிய பாலடிசில் “எண்ணரிய சிவஞானத் தின்னமுதம்” எனப்படுவதால், வள்ளற் பெருமான், “மெய்ப் போதம்” எனவும் மொழிகின்றார். செம்பவளத் திருமேனியனாகலின் சிவபிரானை, “கண்ணுதற் பவளமலை” என்றும், கருமுகில் மலைகளின்மேல் மழை பொழிவதுபோல் ஞானசம்பந்தர் சிவன்மேல் திருப்பதிகம் பாடிய செய்தியை, “கண்ணுதற் பவளமலையில் கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளல்” என்று உரைக்கின்றார். சிவஞான தேசிகர் திருவோத்தூரில் இருந்து திருக்கோயில் திருப்பணி புரிந்தமையின், “ஓத்தூரினில் கவினுற விளங்கு நற்பணிகள் கரையற்ற மகிழ்வினொடு செய்து” எனவும், தம்மையடைந்தவர்க்குச் சித்தாந்த சைவ ஞானநூற் கருத்துக்களை உரைத்தமை புலப்பட, “அருள் புரிந்திடும் காட்சியே” எனவும் எடுத்துரைக்கின்றார். சிவஞான தேசிகர் என்பது அவர் பெயரென்பது பற்றிச் “சிவஞானியாம் கருத வரும் ஒரு திருப்பெயர் கொள்மணியே” எனப் பரவுகின்றார். தமக்குச் சிவஞானக் கருத்துக்களை விளக்கினமையால், “எமைக் காப்பது என்றும் உன் கடன்” என்று வள்ளற்பெருமான் அன்பு கனிய வழுத்துகின்றார்.
இதனால் வடலூர் வள்ளல் திருவோத்தூரில் சிவஞான தேவர்பால் சைவ ஞானக் கருத்துக்கள் பலவற்றிற்கு விளக்கம் பெற்றமை தெரிவித்தவாறாம்.
|