பக்கம் எண் :

19

19. ஞான சிகாமணி திருச்சீர் அட்டகம

 

      அஃதாவது திருவோத்தூரிற் சிவப்பணிச் செல்வராய் விளங்கிய சிவஞான தேசிகர்க்குரிய ஞான சிகாமணியென்ற திருப்பெயரை வியந்து மேற்கொண்டு அவருரைத்த திருவருள் ஞானத்தை நினைந்துப் பாராட்டிப் பாடிய எட்டுப் பாக்களைக் கொண்ட பாமாலை என்பது.  அட்டகம் - எட்டுப் பாக்களையுடையது.

 

    பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2502.

     அணிவா யுலகத் தம்புயனும்
          அளிக்குந் தொழிற்பொன் அம்புயனும்
     அறியா அருமைத் திருவடியை
          அடியேந் தரிசித் தகங்ருளிர
     மணிவாய் மலர்ந்தெம் போல்வார்க்கு
          மறையுண் முடிபை வகுத்தருள
     வயங்குங் கருணை வடிவெடுத்து
          வந்து விளங்கு மணிச்சுடரே
     பிணிவாய் பிறவிக் கொருமருந்தே
          பேரா னந்தப் பெருவிருந்தே
     பிறங்கு கதியின் அருளாறே
          பெரியோர் மகிழ்விற் பெரும்பேறே
     திணிவாய் எயிற்சூழ் திருவோத்தூர்
          திகழ அமர்ந்த சிவநெறியே
     தேவர் புகழுஞ் சிவஞானத்
          தேவே ஞான சிகாமணியே.

உரை:

      அழகமைய வுலகத்தைப் படைத்த பிரமனும் அவ்வுலகைக் காக்கும் தொழிலைப் புரியும் திருவீற்றிருக்கும் தோள்களையுடைய திருமாலும் அறிய மாட்டாத திருவடியை அடியவர்களாகிய நாங்கள் கண்டு மனம் குளிர்ச்சி பெறவும், எம்மைப் போன்றவர்க்கு வேதமுடிபான மெய்ம்மைப் பொருளைத் திருவாய் மலர்ந்துரைக்கவும், விளங்குகின்ற திருவருளுருக் கொண்டு எழுந்தருளிச் சிறப்புறும் ஞானமணியொளியே, துன்பம் பொருந்திய பிறவிப் பிணிக்கு மருந்தாகியவனே, பேரின்பம் நல்கும் பெருமை கொண்ட புதுமைப் பொருளே, உயர்ந்த கதியை அடைவிக்கும் அருள் நெறிப் பயனே, பெரியவர்கள் மகிழ்ந்து பெறும் பேறாகியவனே, வன்மை பொருந்திய மதில் சூழ்ந்த திருவோத்தூர் விளக்கமுற எழுத்தருளிய சிவநெறிச் செல்வனே, தேவர்கள் புகழ்ந்து பரவும் சிவஞானத் தேவனே, நீ சிவஞானிகட்குச் சிகாமணியாவாய். எ.று.

     நில முதலாகிய ஐம்பூதங்களால் ஆகிய இவ்வுலகம் காலந்தோறும் இடந்தோறும் வாழும் மக்கட்கு இனிய காட்சி வழங்கி இன்புறுத்தலால் “அணிவாய் உலகம்” என்றும், இதனைப் படைத்த பிரமன் தாமரைப் பூவில் இருப்பவனாதலால் “அம்புயன்” என்றும் புகழ்ந்துரைக்கின்றார். பொன்னம்புயன், திருமகள் வீற்றிருக்கும் தோள்களையுடைவன். பொன் - திருமகள். திருவடியை மனத்திற் கொண்டவராதலின், அடியார்களால் அதனைக் காண்பது இனிதின் இயல்வதாயிற்றென்பது விளங்க, “திருவடியை அடியேம் தரிசித் தகங்குளிர” எனவும், மறைகள் உரைக்கும் பொருள் முடிபான சித்தாந்த சைவ வுண்மையை எடுத்தோதுவதுபற்றி, “மணிவாய் மலர்ந்து எம்போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்தருள” எனவும், ஞானமுணர்த்தும் குருபரனைச் சிவனென்றே கொண்டு பரவும் மரபினால், “வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கும் மணிச்சுடரே” எனவும் புகழ்கின்றார். சிவபரம் பொருளே குருவாய் உருக்கொண்டு வருவன் என்பதைச் சிவஞானபோதம், “அருவாகி நின்றானை யார் அறிவார் தானே உருவாகி வாரானேல் உற்று” என வுரைக்குமாக, “கண்ணுதலும் கண்டக்கறையும் கரந்தருளி, மண்ணிடையில் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய் நல்லூர் மெய்கண்டான்” (இருபா) என அருணந்தி சிவனார் உரைப்பது காண்க. குரு முதல்வனது திருமேனி அருளுருவம் என்று சைவ நூல்கள் கூறுதலால், “வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கும் மணிச்சுடரே” எனக் கூறுகின்றார். குருவைச் சிவமென்று கொள்வதால் மணியென்றது மாணிக்கமணி என அறிக. “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்” (சிவப்) என உமாபதி சிவனார் கூறுவதால், சிவஞான தேவர் உரைத்த சைவப் பொருளை, “மறையுள் முடிபு” என வுரைக்கின்றார். நோயிற்றோன்றி நோயுற்று முடிதலால், பிறவியைப் “பிணிவாய் பிறவி” எனப் பேசுகின்றார். குரு முதல்வனது அருளுரை பிறவியைப் போக்கும் மருந்தாவதுபற்றி, “பிறவிக்கு ஒரு மருந்தே” எனவும், நோய் நீங்க எய்துவது இன்பமாதலால், “பேரானந்தப் பெருவிருந்தே” எனவும் இயம்புகின்றார். பிறங்குதல் - உயர்தல். எல்லாவற்றினும் உயர்ந்ததாகலின் சிவகதி “பிறங்கு கதி” எனப்படுகிறது. சிவப்பேற்றுக்குரியது அருணெறியாவதால் “பிறங்கு கதியின் அருளாறே” என்றும், பெரியோர்களால் விரும்பப்படுதலின், “பெரியோர் மகிழ்விற் பெரும் பேறே” என்றும் இசைக்கின்றார். சேயாற்றின் பெருக்கால் அலைக்கப்படினும் சலியாத் திண்மையுடைமைபற்றித் “திணிவாய் எயில் சூழ் திருவோத்தூர்” என்கின்றார். கற்றலும் கற்றாங்கு நிற்றலும் நிற்பித்தலும் உடையவராதல் விளங்கச் சிவஞான தேவரை, “ஞான சிகாமணி” என நவில்கின்றார். சிகாமணி - முடிமணி. சிவஞான தேவர் எனற்பாலது சிவஞானத்தேவர் என வந்தது தமிழ்நூல் முடிபு.

     இதனால், சிவகுரு சிவஞான தேவர் என்பது தெரிவித்தவாறாம்.

     (1)