2503. நின்பால் அறிவும் நின்செயலும்
நீயும் பிறிதன் றெமதருளே
நெடிய விகற்ப உணர்ச்சிகொடு
நின்றாய் அதனால் நேர்ந்திலைகாண்
அன்பால் உன்பால் ஒருமொழிதந்
தனம்இம் மொழியால் அறிந்தொருங்கி
அளவா அறிவே உருவாக
அமரென் றுணர்த்தும் அரும்பொருளே
இன்பால் என்பால் தருதாயில்
இனிய கருணை இருங்கடலே
இகத்தும் பரத்தும் துணையாகி
என்னுள் இருந்த வியனிறைவே
தென்பால் விளங்குந் திருவோத்தூர்
திகழும் மதுரச் செழுங்கனியே
தேவர் புகழுஞ் சிவஞானத்
தேவே ஞான சிகாமணியே.
உரை: நின்னிடத்துளவாகிய அறிவும் சத்தியும் செயற் சத்தியும் ஆன்மாவாகிய நீயும் தொழிற்படுதற்குக் காரணம் எமது அருளல்லது வேறில்லை; நெடுங் காலமாக நீ விகற்ப வுணர்வினால் வேறாயினாய்; அதனால் உண்மை ஞானம் எய்தாயாயினாய்; உன்பால் உண்டாகிய அன்பினால் ஒர் உண்மை யுரையை யுரைக்கின்றோம்; அதனைக் கொண்டு உணர்வொன்றி அளவிறந்த ஞானமே யுருவாகக் கருதி அமைக என்று அறிவுறுத்தும் அரும்பொருளே, இன்பமுடன் எனக்கு அருளும் தாய் போல இனிய கருணையைச் செய்யும் பெரிய ஞானக் கடலாகியவனே, இகம்பரம் இரண்டினும் எனக்குத் துணையாய் என்னுடைய உள்ளத்தில் எழுந்தருளும் பெரும் நிறைவே, தென்றிசைக்கண் விளங்குகின்ற திருவோரின்கண் ஒளிரும் இனிமை மிக்க செழுமையான அறிவுக்கனியே, தேவர்கள் புகழ்ந்தேத்தும் சிவஞான தேவனே, நீ சிவஞானிகளின் சிகாமணியாவாய். எ.று.
ஆன்மாவுக்கு அறிவு விழைவு செயல் ஆகிய மூன்று சத்திகளும் இயல்பாகவே யுண்மைபற்றி, “நின்பால் அறிவும் நின் செயலும்” என வுரைக்கின்றார். கேவலத்தில் மலப்பிணிப்பால் இயக்கமின்றிக் கிடக்கும் ஆன்மாவைச் சகலத்திற் செலுத்தி யியக்குவது சிவத்தின் சிற்சத்தியாகிய திருவருளாதலால், “நின்பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிதன்று எமதருளே” எனவும், அதனையுணராது நான் என்னும் தற்போத வுணர்வுற்று வேறாய் நின்றாய் என்பாராய், “நெடிய விகற்ப வுணர்ச்சி கொடு நின்றாய்” எனவும், அதனால் திருவருளுண்மையை யுணரா தொழிந்தாய் என்பாராய், “அதனால் நேர்ந்திலை காண்” எனவும், உன்பால் எமக்குண்டாய அன்பினால் சிவாய என்ற ஒரு மொழிப் பொருளுண்மையை யுரைத்தாய் என்றற்கு “அன்பால் உன்பால் ஒரு மொழி தந்தனம்” எனவும், உலகுடல் கருவி கரணங்களின் வேறாய் அருள் ஞானப் பேற்றுக்குரிய அறிவுருவாவது தெளிந்து அறிவாகிய சிவத்தின்கண் ஒன்றுவாயாக என்பாராய், “அளவா அறிவேயுருவாக
அமர்” எனவும், இவ்வாறு சிவஞான தேவர் உரைத்தமை விளங்க, “என்று உணர்த்தும் அரும்பொருளே” எனவும் கூறுகின்றார். ஒரு மொழி, சிவாய என்பது. சி அறிவேயாகிய சிவத்தையும், வ திருவருளையும், ய ஆன்மாவையும் குறிப்பன; ஆன்மாவாகிய ய சிவசத்தியாகிய திருவருளால் இயங்கிச் சிவவுணர்வுற்றுச் சிவமாந்தன்மை எய்துவது என்பது இம்மொழி யுணர்த்தும் பொருளாகும். அளவா அறிவு - சிவம். சிவஞானமே யுருவாவது சிவோகம் பாவனையால் எய்துவதென்பர். திருநாவுக்கரசர் “நண்ணரிய சிவானந்த ஞானவடிவே” யாயினர் எனச் சேக்கிழார் பெருமான் உரைத்தருளுவது காண்க. இது சைவ மெய்ந்நூல்கள் உரைக்கும் அரிய வுண்மையாதலால், இதனை அறிவுறுத்தும் சிவஞான தேவரை, “அரும் பொருளே” எனப் போற்றுகின்றார். இனிய பொருளொன்றை இன்பமாகப் பேசி அன்புடன் அளிக்கும் தாய்போலச் சைவ ஞானச் செம்பொருளைத் தமக்கு வழங்கிய சிவஞான தேவரின் கருணையை வியக்கின்றாராகலின், வள்ளற் பெருமான், “இன்பால் என்பால் தருதாயில் இனிய கருணை யிருங்கடலே” என இசைக்கின்றார். இகம் - இவ்வுலக வாழ்வு. பரம், மேலுலக வாழ்வு. ஞானப்பொருள் உள்ளத்திருப்பதால் அதனைத் தந்தருளிய ஞானியும் உடனிருக்கும் இயையபு பற்றி “இகத்தும் பரத்தும் துணையாகி என்னுள் இருந்த வியன் நிறைவே” என்று இயம்புகின்றார். வியல் - பெருமை. நினைவு சொற் செயல்களால் இனிமையுடைமைபற்றி, “மதுரச் செழுங்கனியே” என்று புகழ்கின்றார்.
இதனால் சிவஞான தேவர் உரைத்தருளிய சைவ ஞானச் செம்மொழிப் பொருளைத் தெரிவித்தவாறாம்.. (2)
|