பக்கம் எண் :

2504.

     அசையும் பரிசாந் தத்துவமன்
          றவத்தை அகன்ற அறிவேநீ
     ஆகும் அதனை எமதருளால்
          அலவாம் என்றே உலவாமல்
     இசையும் விகற்ப நிலையைஒழித்
          திருந்த படியே இருந்தறிகாண்
     என்றென் உணர்வைத் தெளித்தநினக்
          கென்னே கைம்மா றறியேனே
     நசையும் வெறும்பும் தவிர்ந்தவர்பால்
          நண்ணும் துணையே நன்னெறியே
     நான்தான் என்னல் அறத்திகழ்ந்து
          நாளும் ஒங்கு நடுநிலையே
     திசையும் புவியும் புகழோத்தூர்ச்
          சீர்கொள் மதுரச் செழும்பாகே
     தேவர் புகழுஞ் சிவஞானத்
          தேவே ஞான சிகாமணியே.

உரை:

      நிலையாத இயல்பைடைய தத்துவ வகையைச் சேர்ந்தவனல்லை நீ; அவத்தைகட்கு இடமாகிய உடலின் வேறாகிய அறிவாவாய்; திருவருளால் அவத்தைகளும் ஆன்மா வல்லவாம் என்று எண்ணி நீக்கமின்றி வந்து பொருந்தும் விகற்ப நிலையைக் கையொழித்து இயல்பாய் இருந்தவாறே இருந்து திருவருள் நெறியை அறிவாயாக என என்னுடைய அறிவைத் தெளிவித்து உனக்கு யான் என்ன கைம்மாறு செய்வதென அறிகிலேன்; விருப்பு வெறுப்புகளில்லாத சான்றோர்க்குத் துணைவனே, நன்னெறி காட்டுபவனே, நான், நான் எனும் முனைப்பற்று நாளும் உயர்ந்தோங்கும் நீதியுருவே, நிலவுலகும் அதனைச் சூழ விளங்கும் திசைகளுமாகிய எங்குமுள்ளவர் புகழ்ந்தேத்தும் திருவோத்தூர்க்கண் இருந்தருளும் சீர்கொண்ட இனிய செழும் பாகு போன்றவனே, தேவர்கள் புகழும் சிவஞான தேவனாகிய நீ ஞான சிகாமணியாவாய். எ.று.

     நிலமுதல் சிவம் ஈறாகக் கூறப்படும் தத்துவங்கள் முப்பத்தாறும் மாயையில் தோன்றியொடுங்கும் காரியப் பொருளாதலின், “அசையும் பரிசாம் தத்துவம்” எனவும், ஆன்மா அவற்றுள் ஒன்றன்று என்றற்குத் “தத்துவம் அன்று” எனவும், தத்துவத் தொகுதியாகிய உடற்கண் உயிர் எய்தும் சாக்கிரம் சொப்பன முதலாகிய ஐவகை அவத்தைகளும் ஆன்மா வல்ல என்றற்கு “அவத்தை யகன்ற நீ” எனவும், இவ்விரண்டினும் வேறாய் அறிவுருவாயது ஆன்மா என்பாராய், “அறிவே நீ ஆகும்” எனவும், அவ்வுண்மையைத் திருவருள் அறிவு கொண்டு அவத்தைகள் ஆன்மாவின் வேறென்று உணர்க” என்பார், “அதனை எமது அருளால் அலவாம் என்று உணர்க” எனவும், முக்குண வயத்தால் விடாது வந்து பொருந்தும் விகற்ப நிலையை நீக்குதல் வேண்டுதல் என்பாராய், “உலவாமல் இசையும் விகற்ப நிலையை யொழித்து” எனவும், அறியாமையொடு கூடாமல் அறிவாயிருக்கும் அந்நிலையிலேயே இருந்து திருவருள் இயக்கத்தை அண்ணியறிக என்றற்கு “இருந்தபடியே இருந்து அறி காண்” எனவும், இவ்வாறு உண்மை ஞானத்தை அறிவுறுத்த பலத்தை நினைந்து இதற்குத் தாம் செய்யக் கடவ கைம்மாறு அறியாமை புலப்படுப்பாராய், “என் உணர்வைத் தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேன்” எனவும் இயம்புகின்றார். வேண்டுதல் வேண்டாமை என்று இரண்டையும் முற்றக் கெடுத்த மேலான ஞானிகட்குச் சிவஞானம் இனிய துணையாவதுபற்றி, “நசையும் வெறுப்பும் தவிர்த்தவர்பால் நண்ணும் துணையே” என்றும், இங்கே கூறிய திருவருள் நெறியை யாவர்க்கும் தெளிவாகக் காட்டுவதுபற்றி “நன்னெறியே” என்றும் கூறுகின்றார். நான் நினைத்தேன், நான் சொன்னேன், நான் செய்தேன் என நிற்கும் தன் முனைப்பைப் பற்றறக் கெடுத்துத் திருவருளே யுருவாய் நிற்பது விளங்க, “நான் நான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கும் நடுநிலையே” என்கின்றார். நடுநிலை - நீதி. “நீதி பலவும் தன்ன வுருவாம் என மிகுத்ததவன்” எனத் திருஞானசம்பந்தர் தெரிவிப்பது காண்க. இனிய பண்புடைமை பற்றிச் சிவஞான தேவரைச் “சீர்கொள் மதுரச் செழும் பாகே”என்ற போற்றுகின்றார்.

     இதனால் தத்துவ தாத்துவங்களின் வேறாய் ஐவகை யவத்தையை உடையதேயன்றி அவத்தை யாவதின்றாய ஆன்மா அறிவுரு என விளக்கியவாறாம்..