பக்கம் எண் :

20

20. திருஞான சம்பந்தர் தோத்திரம்

  

திருவோத்தூர் வேதநாதனை வழிபட்டுக்கொண்டு அங்கே சிவப்பணிச் செல்வராய் விளங்கிய சிவஞான தேவர்பால் விடை கொண்டு காஞ்சியம்பதிக்குச் சென்று சேர்ந்த வடலூர் வள்ளற் பெருமான் திருவேகம்பரையும் காமக் கொடியாகிய உமாதேவியையும் வணங்கிப் பரவுகின்றார். திருவேகம்பத்தைப் பணிவுடன் பராவிய வள்ளற் பெருமான், திருவேகம்பரைத் திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதியத்தில் கருத்தைச் செலுத்தி யின்புறுவதுடன் திருஞானசம்பந்தப் பெருமானைப் பின்வரும் ஒரு பாட்டால் போற்றுகின்றார்.

 

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2506.

     திருத்தகுசீர்த் தமிழ்மறைக்கே முதலாய
          வாக்கதனால் திருப்பேர் கொண்டு
     கருத்தர்நம தேகம்பக் கடவுளையுட்
          புறங்கண்டு களிக்கின் றோய்நின்
     உருத்தகுசே வடிக்கடியேன் ஒருகோடி
          தெண்டனிட்டே உரைக்கின் றேன்உன்
     கருத்தறியேன் எனினு ( முனைக் ) கொடுமுயல்வேன்( தனை )
          யன்பால் காக்க அன்றே.

உரை:

      அருட் செல்வம் தகவுற நிறைதலால் சிறப்புறும் தமிழ் மறையாகிய திருமுறைக்கு முதலாகக் விளங்குகின்ற திருப்பெயரை நினைவிற் கொண்டு தலைவராகிய நம்முடைய திருவேகம்பரை அகத்தும் புறத்தும் கண்டு மகிழ்கின்ற பெருமானே, நின்னுடைய அழகிய சிவந்த திருவடிக்கண் ஒரு கோடி வணக்கம் செய்து, உனது திருவுள்ளமறியே னென்றாலும், உன்னையே தலைவனாகக் கொண்டு திருவருட் பேற்றுக்கு முயல்கின்றேனாகலின் என்னைக் காத்தருள்க. எ.று.

          திரு - திருவருளாகிய செல்வம். சைவத் திருமுறைகள் அனைத்தையும் தமிழ்மறையென்று சான்றோர் போற்றிப் புகழ்வது கொண்டு, “திருத்தகுசீர்த் தமிழ்மறை” எனச் சிறப்பிக்கின்றார். திருமுறைத் தொகுப்பின்கண் முதல் திருமுறையில் முதல் திருப்பதியத்தின் முதற்றிருப்பாட்டின் முதற் சீரே “தோடுடைய செவியன்” எனத் தொடங்குகிறது: அதனால், “தமிழ் மறைக்கே முதலாய வாக்கு” என அதனைக் குறிக்கின்றார். தோடுடைய செவியன் என்பதையே தலைவனாகிய சிவபெருமான் திருப்பெயராமென ஞானசம்பந்தர் மனங்கொண்டிருந்தார் என்பார், “திருப்பேர் கொண்டு கருத்தர் நமது ஏகம்பக் கடவுளை யுட்புறம் கண்டு களிக்கின்றோய்” என வுரைக்கின்றார். தோடுடையசெவியன் என்ற தொடரை, “எல்லையிலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை மல்லல் நெடுந்தமிழ்” (ஞானசம்ப. புரா) எனச் சேக்கிழார் கூறுவது ஈண்டு நினைவுகூரத் தக்கது. உருத்தகு சேவடி - அழகு பொருந்திய திருவடி. வணக்கங்களின் பன்மை தோன்ற, “ஒரு கோடி தெண்டன்” என்கிறார். தெண்டன் - வணக்கம். தண்டுபோல் வீழ்ந்து வணங்குவது தெண்டனிடல் என வழங்குகிறது. முயலுதல் - திருவருளைப் பெறுதற்கு முயல்வதாகும். முயற்சியில் அயர்வுற்று வழுவாதவாறு என்னைக் காத்தல் வேண்டும் என்றற்கு “முயல்வேன் தனை அன்பால் காக்க” என்று கூறுகின்றார்.

     இதனால், திருவருள் ஞானம் பெற முயல்கின்ற தமக்குத் துணை புரிய வேண்டுமெனத் திருஞான சம்பந்தரை வணங்கியவாறாம்.

     (1)