பக்கம் எண் :

21

21. சிங்கபுரிக் கந்தர் பதிகம

 

      சிங்கபுரி என்பது குறிஞ்சிப் பாடி என்னும் ஊர்க்கு அருகில் உளது. இங்கே கோயில் கொண்டிருக்கும் முருகப் பெருமானை நம் வள்ளற் பெருமான் இப் பதிகம் பாடிப் பரவுகின்றார். தமது சோதரர் சபாபதிப் பிள்ளையின் “ரோக நிவாரணார்த்தம்” வள்ளலார் பாடியதாக ஏட்டுப் பிரதிக் குறிப்பொன்று கூறுவதாகத் திருவருட்பா வரலாற்றுப் பதிப்பாசிரியர் தெரிவிக்கின்றார். இதனை யாக்கிய காலம் 6-5-1864 எனவும் அக் குறிப்பு அறிவிக்கின்றது. இந்நூலின் தொடக்கத்தில் வினாயகர் காப்புச் செய்யுளொன்று காணப்படுவதால் இது தனி நூலாகச் செய்யப்பட்டமை தெரிவிக்கிறது. எடுத்துக் கொண்ட இலக்கியம் இடுக்கணின்றி இனிது முடிதற் பொருட்டுக் காப்புப்பாவது மரபாகும்.

                       காப்பு - நேரிசை வெண்பா

2507.

     பொன்மகள் வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
     நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
     மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
     பொய்யகலப் போற்றுவம்இப் போது.

உரை:

      திருமகள் வீற்றிருக்கின்ற சிங்கபுரியின்கண் கோயில் கொண்டருளும் ஞானமூர்த்தியாகிய ஆறுமுகக் கடவுள்மேல் நலம் மிக்க செந்தமிழ்ப் பாமாலையை யாம் செய்தற்கு ஞானத்தின் உண்மை வடிவாகிய நமது குருவின் திருவடியும் யானைமுகக் கடவுளின் திருவடியும் பாட்டிடையே பொய் முதலிய குற்றங்கள் புகாதபடி இப்போது போற்றி வணங்குவோமாக. எ.று.

          திருமகளைப் பொன் மகள் என்று கூறுகிறார், அப்பெருமாட்டி பொன்னும் பொருளும் அருளுபவள் என்பதுபற்றி, போதன் - ஞானவான் சிவனுக்குப் பிரணவ ஞானத்தை யுரைத்தான் முருகப்பெருமான் என்பது கொண்டு “போதன் அறுமாமுகன்” என வுரைக்கின்றார் “ஈசனொடு ஞான மொழி பேசு முகம் ஒன்று” என்பர் அருணகிரிநாதர். ஓதுபவர்க்கு நலம் மிகவுண்டாம் என்பாராய், “நன்மை மிகு செந்தமிழ்ப்பா” என்று சொல்லுகின்றார். செந்தமிழ்ப்பா என இங்கே குறிப்பது செந்தமிழாற் பாடப்படும் இப் பதிகத்தையாம் என அறிக. சின்மயம் - ஞானம். மெய்ஞ்ஞானமே யுருவாகியவன் தம்முடைய குருபரன் என்றற்கு. “சின்மயத்தின் மெய்வடிவாம் நம் குரு” என்று இசைக்கின்றார், உருவில்லாத ஞானம் உருக்கொண்டு வந்தாற்போல்பவன் குரு என்பது கருத்து. வேழம் -யானை. தன்னையறியாமல் பொய்மையும் பிறகுற்றங்கள் புகலாமென அஞ்சுகின்றமை விளங்க, “பொய்யகலப் போற்றுவம் இப்போது” என்று புகல்கின்றார்.

     இதனாற் குருபரன் திருவடியையும் வேழமுகன் சேவடியையும் பாட்டிடையே பொய்யும் வழுவும் புகாமற் காத்துக் கோடற்குப் பரவியவாறாம்.

     (1)