பக்கம் எண் :

22

22. சித்தி வினாயகர் பதிகம்

 

      வடலூர்க் கணிமையிலுள்ள கருங்குழிக்கண் கோயில் கொண்டருளும் விநாயகப் பெருமானுக்குச் சித்தி விநாயகர் என்று பெயர்; அதனால், அப் பெருமானைப் பாடிய இப்பதிகம் சித்தி விநாயகர் பதிகம் எனப்படுகிறது. தன்னைச் சிந்தித்து  வழிபடுவோர் விரும்புவன பலவும் கைவரப் பெறுவிக்கும் நலம் பற்றிச் சித்தி விநாயகர் என்று பெரியோர் பெயர் குறித்துள்ளனர். அன்பர்கட் குண்டாகும் இடையூறு போக்கியருளும் அருட் செல்வன் என்ற பொருளில் விநாயகனை விக்கினேச்சுரன் என்று விளம்புகின்றார்.

 

நேரிசை வெண்பா

2508.

     சீராரு மறையொருக்கந் தவிராது
          நான்மரபு சிறக்க வாழும்
     ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும்
          மிகநாணும் எழிலின் மிக்க
     வாராருங் கொங்கையர்கள் மணவாளர்
          உடன்கூடி வாழ்த்த நாளும்
     தேராரு நெடுவீதிச் சிங்கபுரி
          தனில் அமர்ந்த தெய்வக் குன்றே.

உரை:

      சிறப்புப் பொருந்திய வைதிக வொழுக்கம் தவறாத நான்கு சாதியினரும் செம்மையுற்று வாழும் அழகு பொருந்திய செல்வ வேந்தனாகிய இந்திரனது அமராவதியென்னும் நகரம் தானும் மிகவும் நாணும்படிப் பொலிவு கொண்டதும், கச்சணிந்த கொங்கைகளையுடைய மங்கையர்கள் தத்தம் கணவருடன் கூடி நாடோறும் வாழ்த்தி வணங்கவுள்ளதுமான தேரோடும் நெடிய தெருக்களையுடைய சிங்கபுரிக்கண் விரும்பியுறையும் தெய்வ மலை போன்றவனே, அருள் புரிக. எ.று.

          மறையென்பது, சாதி முறைகளை வகுத்து ஒவ்வொன்றிற்கும் ஒழுக்கம் உரைத்த மிகுதி நூல். நான்மரபு - அந்தணர், அரசர், வணிகர் வேளாளர் மரபு. சிறத்தலாவது, தனித்தனியே ஓங்குவது. ஏர் - அழகு. நிதிபதி - சங்கநிதி பதுமநிதி எனப்படும் நிதிகட்குத் தலைவன். இந்திரவுலகத்துத் தலைநகர் அமராவதி என்பர், வளமும் பொற்பும் கண்டு நிகராகாமை எண்ணி மனம் சுருங்கும் என்பார், “மிக நாணும்” என்று விளம்புகிறார். மனையறம் பேணும் மகளிர் நாளும் வாழ்த்தி வழிபடும் நலம் புலப்பட, “வாராரும் கொங்கையர்கள் மணவாளருடன் கூடி நாளும் வாழ்த்து” என வுரைக்கின்றார். தேர் - நான்கு சக்கரங்களையுடைய வண்டி. செம்மலை போல் உயர்ந்தோங்கிய தோற்றமுடைமை விளங்க, முருகனைத் “தெய்வக் குன்று” எனப் புகழ்கின்றார். பாட்டுத்தோறும் இது மகுடமாய் நிற்கிறது.

     இதனால் சிங்கபுரிக் குடிச்சிறப்பும் ஒழுக்க நலமும் செல்வ வளமும் மக்களின் வழிபாட்டியல்பும் உரைத்தவாறாம்.

     (2)