பக்கம் எண் :

2509.

     உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே
          அப்பொழுதே உவந்து நாதன்
     தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல்
          ஈன்றபொறி சரவ ணத்தில்
     நம்புமவர் உயவிடுத்து வந்தருளும்
          நம்குகனே நலிவு தீர்ப்பாய்
     திங்கள் தவழ் மதில்சூழும் சிங்கபுரி
          தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.

உரை:

      தேவர்கள் தாம் உற்ற துன்பத்தைச் சிவபிரானுக்கு முறையிட்ட அக்காலத்தே நாதனாகிய அவனும் ஒப்பில்லாத முகம் ஆறு கொண்டு நுதற் கண்ணில் தோற்றுவித்த தீப்பொறிகள் ஆறினையும் சரவணப் பொய்கையில் விரும்புகின்ற தேவர்கள் உய்யும் பொருட்டு உய்ப்ப, ஆறும் திரண்ட உருவாகிய குகப் பெருமானே, சந்திரன் தவழ்ந்து செல்லுமாறு உயர்ந்த மதில் சூழ்ந்த சிங்கபுரியில் கோயில் கொண்டருளும் தெய்வக் குன்றமே எமக்குற்ற நோயைத் தீர்த்தருள வேண்டுகிறோம். எ.று.

          கயிலை மலையில் இருப்பவனாதலால், சிவனைக் “கயிலை யரன்” என்று சிறப்பிக்கின்றார். தேவர்கள் அசுரரால் தமக்குற்ற துன்பத்தைக் கயிலை மலையை யடைந்து சிவபெருமானுக்குத் தெரிவித்தமை புலப்படக் கயிலை மலையை விதந்து மொழிகின்றார். நாதன் - அவன் என்னும் சுட்டுப் பொருண்மை தோன்ற நின்றது. பொருவில் முகம் - ஒப்பற்ற திருமுகம். நுதற் பொறிகளைச் சரவணப் பொய்கையில் விடுத்தமைக்குக் காரணம் கூறுவார், “நம்புமவர் உய்ய” என்று கூறுகின்றார். நம்புதல் - விரும்புதல். ஆர்வ மிகுதி தோன்ற “நம் குகனே” என்று உரைக்கின்றார். திருக் கோயிலின் மதில் உயர்வு புலப்படத் “திங்கள் தவழ் மதில்” என்று கூறுகின்றார்.

          இதனால் தேவர்களின் உய்திபற்றித் தோன்றியவனாதலால் எமது நலிவு தீர்த்தருள்க என முறையிட்டவாறாம்.

     (3)