251. இருந்தா யிங்குக் கண்டவிடத்
தேகா நின்றாய் அவ்விடத்தும்
பொருந்தாய் மீண்டும் புகுவாய்பின்
போவாய் வருவாய் புகழ்த்தணிகை
மருந்தாய் நின்ற குகனடியை
வழுத்தா யெனையும் வலிக்கின்றாய்
திருந்தாய் நெஞ்சே நின்செயலைச்
செப்ப வெனக்குத் திடுக்கிடுமே.
உரை: நெஞ்சமே, என்னிடத்தே இருக்கும் நீ இருந்தே யொழியாமல் கண்ட கண்ட இடத்துக் கெல்லாம் செல்கின்றாய்; சென்ற விடத்தும் பொருந்தி யில்லாமல் மீளவும் என்னிடம் புகுவதும் பின்பு போவதும் வருவதும் செய்கின்றாய்; புகழ் தங்கிய தணிகை மலையில் எழுந்தருளும் பிறவி நோய்க்கு மருந்தாகிய குகப் பெருமான் திருவடியை வழிபடாமல் என்னையும் உன் வழிக்கே இழுக்கின்றாய்; நல்லது சொல்லித் திருத்தினாலும் திருந்துகின்றாயில்லை; உனது செயலை எடுத்துச் சொல்லலுற்றால் எனக்குத் திடுக்கிடுறது காண், எ. று.
நெஞ்சம் இருக்குமிடம் அவரவர் உடம்பாதலால், “இருந்தாய் இங்கு” என்கின்றார். உடம்போடியைந்த தத்துவம் இருபத்து நான்கினுள் ஒன்றாதலின் இவ்வாறு கூறுகிறார். இருபத்து நான்கையும் இது பற்றியே ஆன்ம தத்துவம் என்று பெயர் கூறுகிறார்கள். கண் முதலிய பொறிகளாற் காணப்படும் பொருள் தோறும் நெஞ்சம் செல்வதால், “கண்டவிடத்து ஏகா நின்றாய்” என்றும், கண்ட பொருளிடத்தும் நிலையுற நில்லாமல் ஆங்காங்குப் போவதும் வருவதுமாய்த் திரிந்தவண்ணம் இருத்தல் பற்றி, “அவ்விடத்தும் பொருந்தாய் மீண்டும் புகுவாய் பின் போவாய் வருவாய்” எனப் புகல்கின்றார். இங்ஙனம் திரிந்து அலையாமல் முருகப் பெருமான் திருவடி வழிபாட்டில் ஒன்றி நிற்க வேண்டிய நீ அதனையும் செய்யாமல், அலைந்தொழுகும் நினது வழிக்கே என்னையும் இழுத்துக் கொண்டு போகின்றாய் என்றற்குப் “புகழ்த் தணிகை மருந்தாய் நின்ற குகன் அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்” எனச் சினக்கின்றார். மருந்து-பிறவிப் பிணி நீக்கும் மருந்து. வழுத்தல் - வழிபடுவது. வலித்தல் - இழுத்தல். நீ செய்யும் செயல் நன்மை நல்காமல் தீமை விளைவிப்பதாகையால் அது குற்றம் எனக் காட்டித் திருத்தினாலும் செம்மை நெறிக்குத் திரும்புவதில்லை என்பாராய்த் “திருந்தாய்” எனவும், திருந்தாமல் குற்றமே செய் தொழுகும் தீய செயல்களை எடுத்துரைத்த போது பயன்படா தொழிவது துணுக்கமே உண்டு பண்ணுவது பற்றி, “நின் செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே” எனவும் இசைக்கின்றார்.
இதனால், நிலையின்றித் திரிந்தலையும் நெஞ்சின் கொடுமை தெளிய விளக்கியவாறாம். (11)
|