பக்கம் எண் :

2514.

     மட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந்
          தூர்பழனி மருவு சாமி
     நட்டாரும் பணிபுரியும் ஆறுதலை
          மலைமுதலாய் நணுகி எங்கள்
     ஒட்டாதார் வலிஅடக்கி அன்பர் துதி
          ஏற்றருளும் ஒருவ காவாய்
     தெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி
          தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.

உரை:

      வஞ்சனை முதலிய குற்றமில்லாத நல்லவர்க்கு அருள் செய்யும் சிங்கபுரியிற் கோயில் கொண்டிருக்கும் தெய்வக் குன்றமே, தேன் பொருந்திய சோலைகளை யுடைய திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் பழனி முதலிய திருப்பதிகளில் எழுந்தருளும் சாமியே, அன்பராயினார் திருப்பணிகளைச் செய்யும் ஆறுதலைகளை யுற்று மலை நாட்டுக்கு முதல்வனாய் மேவி, பகைவரது வலிமையை அழித்து, அன்பர்கள் பணிந்து போற்றும் துதிகளை யேற்று வேண்டும் வரங்களை நல்கும் ஒருவனே, எங்களைப் பிணி நீக்கிக் காத்தருள்வாய். எ.று.

     மட்டு - தேன். மட்டாரும் பொழில் சேர் என்பதனைச் செந்தூர் பழனியாகியவற்றோடும் ஒட்டுக. சாமி என்பது முருகனுக்குரிய பெயர்களில் ஒன்று. முருகனுக்குத் தந்தை யென்னும் பொருளில் சிவனைச் “சாமி தாதை” என்று திருமுறை யாசிரியர்கள் கூறுவர். நட்டார், அன்பர். நட்டாரும் பணி புரியும் என்பதை ஆரும் நட்டுப் பணியும் என இயைத்து யாவரும் அன்புற்றுப் பணி புரியும் எனக் கொள்ளினும் அமையும். மலை நிலத்துக்குக் கடவுளாதலால் “மலை முதல்” எனக் கூறுகிறார். “சேயோன் மேய மைவரை யுலகம்” என்பது தொல்காப்பியம். ஒட்டாதார் - பகைவர்; ஒட்டாமைக்கு ஏது வலிமைச் செருக்காதலின், “வலியடக்கி” என்றும்; அன்பர் அன்பு செய்தோங்குதற் பொருட்டுத் “துதி யேற்றருளும் ஒருவ” என்றும் இயம்புகின்றார். “ஒருவன்” என்ற பெயர் சிவனுக் குரியதாயினும், முருகன் சிவத்தின் வேறல்லனாதல் பற்றி “ஒருவ” எனச் சிறப்பிக்கின்றார். நோய் நீக்கம் குறித்து இப் பதிகம் பாடப்படுதலால், காவாய் என்றதற்குப் பிணி நீக்கிக் காத்தருள் எனப் பொருளுரைக்கப்பட்டது.

     இதனால் பிணிகளின் நீக்கிக் காக்குமாறு வேண்டியவாறாம்.

     (8)