பக்கம் எண் :

2515.

     முன்செய்த மாதவத்தால் அருணகிரி
          நாதர்முன்னே முறையிட் டேத்தும்
     புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும்
          மெய்ஞ்ஞான புனிதன் என்றே
     என்செயலில் இரவுபகல் ஒழியாமல்
          போற்றியிட இரங்கா தென்னே
     தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி
          தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.

உரை:

      தென்னாட்டில் அமைந்து அன்பர்கட்கு அருள் வழங்கும் சிங்கபுரியில் கோயில் கொண்டருளும் தெய்வக் குன்றமே, முற்பிறப்பில் செய்த பெரிய தவத்தின் பயனாக அருணகிரி நாதர் முற்காலத்தில் நின்பால் முறையிட்டுப் பரவும் குற்றமில்லாத திருப்புகழை ஏற்று அருள் செய்யும் மெய்ஞ்ஞான புனிதனே என்று எனது செயலாக இரவும் பகலும் நீங்காமல் போற்றி வழிபட்டேனாகவும், நீ எனக்கு மனமிரங்காமல் இருப்பதை என்னென்பது. எ.று

     தென்திசை - தென்னாடு. முன்னாளில் அருணகிரி நாதர் தோன்றித் திருப்புகழைப் பாடித் திருவருள் பெற்றதற்குக் காரணம் முற் பிறவியிற் செய்த நற்றவம் என்பார், “முன் செய்த மாதவத்தால்” என்று மொழிகின்றார். தாம் பாடிய திருப்புகழில் தாம் செய்துழந்த வினை வகைகளை யெடுத்தோதி முறையிட்டமையின், “முறையிட் டேத்தும் திருப்புகழ்” என்றும், பொது மகளிர் புல்லிய செயல்களை விரியக் கூறித் தமது மனத்தைத் தூய்மை செய்து கொண்டமை தோன்றப் “புன்செயல்தீர் திருப்புகழ்” என்றும் உரைக்கின்றார். இரங்காதது என்பது இரங்காது என வந்தது, உம்மையை விரித்துக் கொள்க.

     இதனால் அருணகிரி நாதர்க்கு முருகன் அருள் புரிந்த குறிப்புணர்த்தி வழிபட்டவாறாம்.

     (9)