2516. விண்ணவர்க்கோன் அருந்துயர நீங்கிடவும்
மாதுதவ விளைவும் நல்கும்
கண்ணகன்ற பேரருளின் கருணையினால்
குஞ்சரியைக் காத லோடு
மண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும்
மணம்புரிந்த வள்ள லேஎன்
திண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி
தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
உரை: சிங்கபுரியில் கோயில் கொண்டருளும் தெய்வக் குன்றமே, தேவர்கள் வேந்தனான இந்திரனது பொறுத்தற்கரிய துன்பம் ஒழியவும், அவன் மகளாகிய அமுதவல்லியின் தவத்தின் பயனை விரிந்ததன் பேரருளால் நுகர்விக்கும் கருணையுடன் தேவயானை யென்ற பெயர் கொண்ட மங்கையைக் காதலன்பினால் மண்ணுலகத்து மக்கள் முதல் பல்லுயிர்களும் கண்டு மகிழ்ச்சி யுறவும் திருமணம் செய்து கொண்ட வள்ளலாகிய முருகப் பெருமானே, திண்ணிதாகிய எனது தீவினையைப் போக்கி யருள்வாயாக. எ.று.
சூரவன்மனைத் தலைவனாகக் கொண்ட அசுரர்கள் இந்திரனுக்கும் ஏனைத் தேவர்கட்கும் செய்த மிக்க துன்பங்களைத் தொகுத்துரைக்கு மாற்றால் “விண்ணவர்கோன் அருந்துயரம்” என வுரைக்கின்றார். அருந் துயரம் - போக்குதற் கரிய துன்பம். மாது - ஈண்டு இந்திரன்பால் மகளாக வளர்ந்த தெய்வயானை. திருமால் பெற்ற பெண் மக்களான அமுதவல்லி, சுந்தரவல்லி என்ற இருவரும் முருகப் பெருமானை மணந்து கொள்ள வேண்டித் தவம் கிடப்ப, “இந்திரன் பாங்கர் அண்மி இருமதி அமுதவல்லி” (களவுப்) என முருகன் உரைத்தவண்ணம், அமுதவல்லி செய்த தவப்பயனை, “மாது தவ விளைவு” எனக் குறிக்கின்றார். முருகன் அருட் கடலாதல் தோன்றக் “கண்ணகன்ற பேரருள்” என்கின்றார். யானையைக் குஞ்சாம் என்பவாகலின், “குஞ்சரி” எனத் தெய்வயானையை யுரைக்கின்றார். சுந்தரவல்லியைக் களவு மணம் செய்தமையின், “காதலோடு” எனக் குஞ்சரி மணத்தைச் சிறப்பிக்கின்றார். உயிர்கள் உணர்வு வடிவின எனச் சமயநூல்கள் உரைத்தலால் “மண்ணுலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திட” என்கின்றார். நுகர்ந்து கழிப்பதனாலோ முதல்வன் திருவருளாலோ அன்றிப் பிறவாற்றால் தன்னைச் செய்த உயிரை விடாது பிணித்தலால், தீவினையைத் “திண்ணிய தீவினை” எனக் கூறுகின்றார்.
இதனால் இந்திரனுற்ற துயர் நீங்கவும் உயிர் வகைகள் கண்டு மகிழவும் முருகன் தெய்வயானை யம்மையைத் திருமணம் செய்து கொண்ட கருத்தை விளம்பியவாறாம். (10)
|