2525. சத்லசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத்
தத்துவ நிலைபெற விழைவோர்
சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச்
சேவடி தொழஎனக் கருள்வாய்
சுத்தசற் குணத்தெள் அமுதெழு கடலே
சுகபரி பூரணப் பொருளே
வித்தக முக்கண் அத்தனே சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
உரை: தூய ஞான குணமாகிய தெளிந்த அமுதம் தோன்றுகின்ற அருட் கடலாகிய பெருமானே, சுக நிலையிற் குறைவற நிறைந்த மெய்ப் பொருளாயவனே, ஞானமே யுருவாயவனே, மூன்று கண்களையுடைய தலைவனே, சித்தி விநாயக விக்கினேச்சுரனே, சத்தும் அசத்துமாகிய பொருள்களின் இயல்புகளையறிந்து அதனால் பெறப்படும் உண்மை ஞானத்தால் தத்துவங்களின் நிலைகளைப் பெற்றுயர விரும்புகிற ஞானிகளின் திருவுள்ளத்தில் எழுந்தருளும் நின் சிவந்த திருவடிகளைத் தொழுதற்கு அருள் செய்க. எ.று.
நிலையுடைமை குணங்கட்கியல்பாதலால் சற்குணமென்றும், தூய குணங்களின் நிலைபேறு ஞான நலந்தருவதுபற்றி, “சுத்த சற்குணத் தெள்ளமுது எழுகடலே” என விநாயகப் பெருமானைப் பரவுகின்றார். சற்குணத்தைக் கடல் என்றமையின், அதனால் எய்தும் ஞான நலத்தைத் “தெள்ளமுது” என்கின்றார். பரிபூரணம் - குறைவிலா நிறைவு. பொருளின் குறைவு சுகம் பயவாமையின் “சுக பரிபூரணப் பொருளே” எனச் சிறப்பிக்கின்றார். வித்தகன் -ஞானவான். சத்துப் பொருள் - அழியாது நிலைக்கும் பொருள். சத்தின் நிலையுடைமையும், அசத்தின் நிலையாமையும் தேர்ந்தறிவது மெய்யுணர்வாதலால், “சத் தசத்து இயல் அறிந்து” எனவும், அதனால் எய்தும் மெய்யுணர்வால் இன்ப ஞான நிலையை யடைதற்கு விருப்புண்டாதல்பற்றி, “மெய் போதத் தத்துவ நிலை பெற விழைவோர்” எனவும் கூறுகின்றார். தத்துவ நிலை - பலவாகிய தத்துவ நிலைகளைக் கண்டு மேற்படும் இன்பநிலை. சித்தம் - மனம். மனத்தைக் கோயிலாகக்கொள்வது விளங்க, “சித்த முற்றகலாது ஒளித்த நின் கமலச் சேவடி” என்று உரைக்கின்றார். திருவடி வணங்கற்கும் திருவருள் வேண்டப்படுதலின், “சேவடி தொழ எனக்கருள்வாய்” என வேண்டுகின்றார்.
இதனால் சத்தசத் தறிந்து உண்மை ஞானம் பெற்ற சான்றோர் உள்ளத்தில் விநாயகப் பெருமான் கோயில் கொண்டருள்வது கூறியவாறாம். (8)
|