2526. மருள்உறு மனமும் கொடியவெங் குணமும்
மதித்தறி யாததுன் மதியும்
இருள்உறு நிலையும் நீங்கிநின் அடியை
எந்தநாள் அடைகுவன் எளியேன்
அருள்உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே
அமர்ந்தசிற் பரஒளி நிறைவே
வெருள்உறு சமயத் தறியொணாச் சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
உரை: அருள் நிறைந்த ஒளிப் பொருளாய், அந்த ஒளிக்குள் உறைகின்ற மேலான நிறை ஞானவொளியே யுருவாகிய பெருமானே, வெருண்டசையும் சமய நெறியாளரால் அறியப்படாத சித்தி விநாயக விக்கினேச்சுரனே, மருளுகின்ற மனமும், கொடுமையான குணமும், அறியாமையால் இருண்ட மனநிலையும் நீங்கி, நினது திருவடியை எளியனாகிய யான் அடைவது எப்போது? அருளுவாயாக. எ.று.
திருவருள் ஒளி யுருவினதாகலின், அருளே யுருவாகிய விநாயகப் பெருமானை, “அருளுறும் ஒளியாய்” என்று போற்றுகின்றார். சோதியுட் சோதியெனச் சான்றோர் பரம்பொருளைக் குறிப்பதால், “அவ்வொளிக்குள்ளே யமர்ந்த சிற்பர வொளி” எனவும், அவ்வொளி தானும் குறைவற நிறைந்த தென்றற்கு, “பரவொளி நிறைவே” எனவும் இசைக்கின்றார். நிலை பேறின்றி மாறும் கொள்கைகளையுடைய சமயம், “வெருளுறு சமயம்” எனப்படுகிறது. மனம் முதலிய கருவிகள் மாயா காரியமாதலால், மருளுதல் இயல்பாதலால், “மருளுறு மனம்” என்றும், நேர்மை பிறழ்தற்கேதுவாகிய தீய குணத்தை, “கொடிய வெங்குணம்” என்றும், பொருளென மதித்து உண்மை காணா தொழியும் புன்மையை, “மதித்தறியாத துன்மதி” என்றும் குறிக்கின்றார். இவற்றால் நல்லறிவின்றிக் கெடுதலால், “இருளுறு நிலை” யென அதனைக் கூறுகின்றார். இக் குறைகள் நீங்கினாலன்றி, நன்னெ்றி காண்டலும் நல்லொழுக்கம் மேற்கோடலும் அமையாவாகலின், “இருளுறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன்” என வுரைக்கின்றார்.
இதனால் மருளும் கொடுமையும் மதியாமையும் பிறவும் இறை வழிபாட்டுக்குத் தடையாம் என்பது உணர்த்தியவாறாம். (9)
|