பக்கம் எண் :

2529.

     பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில்
          பிறங்கிய ஒருதனிப் பேறே
     அரும்பொருள் ஆகி மறைமுடிக் கண்ணே
          அமர்ந்தபேர் ஆனந்த நிறைவே
     தரும்பர போக சித்தியும் சுத்த
          தருமமும் முத்தியும் சார்ந்து
     விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி
          விநாயக விக்கினேச் சுரனே.

உரை:

      பெரிதாகிய பரம்பொருட்கு இடமாக விளங்கும் ஓங்கார வடிவில் சிறக்கும் ஓர் ஒப்பற்ற பெருஞ் செல்வமே, அரிய பொருளாய் வேத முடிவின்கண் இருந்தருளும் பேரின்ப நிறைவே, பரபோக சித்தியும், சுத்த தருமமும் முத்தி நிலையும் பொருந்தி நின்று, அன்பால் விரும்பிப் பரவும் அடியவர்க்கு நல்கி யருளும் வள்ளலாகிய சித்தி விநாயக விக்கினேச்சுரனே, எமக்கு இரங்கி யருள்க. எ.று.

     பொருள் எனப்படுவன எல்லாவற்றிற்கும் மேலாயது பரம்பொருளாகலின் அதனை “பெரும் பொருள்” என்றும், பிரணவத்தின் உட்பொருளாவது பற்றி “பெரும் பொருட்கு இடனாம் பிரணவம்” என்றும் கூறுகின்றார். பிரணவமாகிய ஓங்கார வடிவில் விநாயகப் பெருமான் திருவுரு அமைந்திருப்பதால், “பிரணவ வடிவில் பிறங்கிய ஒரு தனிப்பேறே” எனப் பகர்கின்றார். பசு பாச அறிவுகளால் அறிதற்கரிய தென்பது பற்றி, “அரும் பொருளாகி” என்றும், “வேத முடிவாய் இன்பம் நிறைவாய் விளங்குதலின் மறைமுடிக் கண்ணே அமர்ந்த பேரானந்த நிறைவே” என்றும் உரைக்கின்றார். மேலான போகங்களை விரும்புவோரும், தூய அறம் தரும் இன்பங்களை விழைபவரும், முத்தியை விரும்புபவரும் பல திறத்தராகலின், அவரவர் விரும்புவனவற்றை வரையாது வழங்குவதால், “புரபோக சித்தியும், சுத்த தருமமும், முத்தியும் சார்ந்து விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே” எனப் பராவுகின்றார். பரபோகம் திருவருளால் தரப்படும் இயல்பினதாதலால், “தரும் பரபோக சித்தி” என்று சிறப்பிக்கின்றார்.

     இதனால், பரபோக சித்தியும் முத்தியும் நல்கும் முதல்வன் சித்தி விநாயகன் என்று தெரிவித்தாறாம்.

     (2)