253. முலையைக் காட்டி மயக்கியென் னாருயிர்
முற்றும் வாங்குறும் முண்டைக ணன்மதி
குலையக் காட்டும் கலவிக் கிசைந்துநின்
கோலங் காணக் குறிப்பில னாயினேன்
நிலையைக் காட்டும்நல் லானந்த வெள்ளமே
நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
கலையைத் காட்டும் மதிதவழ் நற்றணி
காச லத்தமர்ந் தோங்கதி காரனே.
உரை: மெய்ஞ்ஞான நிலையை அறிவித்து உய்தி பெறுவிக்கும் நல்ல ஞானானந்தப் பெருக்கமே, அன்புடைய நெஞ்சின்கண் நின்று ஞானவொளி செய்யும் திருவிளக்கமானவனே, கலைகள் நிறைந்த முழு மதியம் தவழும் தணிகை மலையில் எழுந்தருளும் அதிகாரனே, கொங்கைகளைக் காண்பித்து அறிவை மயக்கி எனது அரிய வுயிரை முழுதும் உண்டொழிக்கும் மகளிரிடத்து நுகரப்படும் நல்லறிவு கெடப் பண்ணும் புணர்ச்சிக்கு ஈடுபட்டு நினது திருவருட் காட்சியைக் காண்டற்கு எண்ணமில்லாதவ னாயினேன்; என்னே என் புன்மை இருந்தவாறு! எ. று.
நிலையெனப் பொதுப்பட மொழிதலால், மெய்ஞ்ஞானம் காட்டும் நிலையென வுரைக்கப்பட்டது. மேலாய ஞானம் பேரின்பக் கடலாதலால், அதுவே உருவாகிய முருகப் பெருமானை, “நிலையைக் காட்டும் நல்லானந்த வெள்ளமே” என நவில்கின்றார். ஆனந்தத்துக்கு நன்மை, நிலைத்த தன்மை யெனவும், ஏனை இன்பங்கள் சிறிது போதில் கழிந்து போகும் சிறுமை யுடையவை, அதனால் அவை சிற்றின்பம் எனவும் கூறப்படுகின்றன. அன்புடையார் நெஞ்சின்கண் வினை யிருள் படியாவாறு நின்று ஞான வொளி செய்தலால், “நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே” என உரைக்கின்றார். தணிகை மலையிற் கோயிற் கொண்டருளித் தன்பால் வந்து வழிபடும் மக்கட்குக் குறை போக்கி முறையே நலங்களால் நிறைவருளுவது பற்றித், “தணிகாசலத் தமர்ந்து ஓங்கு அதிகாரனே” எனப் புகழ்கின்றார். அதிகாரம் - முறைமை. முறை செய்வது பற்றி முருகனை “அதிகாரன்” என்று மொழிகின்றார். மகளிரின் கொங்கைகள் தம்முடைய உருநலத்தால் காணும் ஆடவர் காட்சி வாயிலாகக் கருத்துட் புகுந்து காம வுணர்ச்சியை எழுப்பி அவரது உண்மையறிவை மயக்குவது கொண்டு, “முலையைக் காட்டி மயக்கி” என்றும் மயங்கிய பலர் அவரைப் பெறும் செயலால் அரிய தமது உயிரை இழக்கின்றார்களாதலால், “ஆருயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள்” என்றும், அவரது போக நுகர்ச்சி நல்லறிவை மறைத்துக் கெடுத்தலால், ‘நன்மதி குலையக் காட்டும் கலவி’ என்றும், கெடுக்கும் திறத்தைக், “கலவிக் கிசைந்து நின் கோலம் காணக் குறிப்பிலனாயினேன்” என்றும் விளங்கத் தெரிவிக்கின்றார்.
இதுவும் அப்புன்மையையே விளக்கியவாறாம். (2)
|