23
23. வல்லபைக் கணேசர்
பிரசாத மாலை
கணேசப் பெருமானுடைய தேவி பெயர் வல்லபை யென்பது. மரீசி முனிவர்க்கும்
வேதவல்லிக்கும் பிறந்த மகள் வல்லபை. இவள் அருட் சத்தியாகிய உமையம்மையின் கூறு; இளமையிலே
பண்டை நினைவுற்று சிவன்பாற் பிரியா விடப்பாகம் பெறற் பொருட்டுத் தவம் கிடந்து, தன்னை
மணக்க வேதிய வுருவிற் போந்த இறைவனை மறுக்கவும், அவர் பின்பு கணேச மூர்த்தியாய்ப் போதரக்
கண்டு வழிபட்டு மணந்து கொண்டாள் என்பது விநாயக புராணம் கூறுகிறது. அன்று முதல் விநாயகர், வல்லபைக்
கணேசர் எனப் போற்றப்படுகின்றார். அவரைப் பாடிப் பரவும் இச் சொன்மாலை அப்பெருமானுடைய
அருட் செயல்களையும் ஆங்காங்கே எடுத்தோதுதலால், பிரசாத மாலை என வழங்குகிறது.
2530. திருநெடு மால்அன் றால்இடை நினது
சேவடித் துணைமலர்த் துகளான்
பெருநெடு மேனி தனிற்படப் பாம்பின்
பேர்உரு அகன்றமை மறவேன்
கருநெடுங் கடலைக் கடத்து நற் றுணையே
கண்கள்மூன் றுடையசெங் கரும்பே
வருநெடு மருப்பொன் றிலகுவா ரணமே
வல்லபைக் கணேசமா மணியே.
உரை: பிறவியாகிய நெடிய கடலைக் கடத்தற்கு உதவும் நல்ல துணைவனும், மூன்று கண்களையுடைய செங்கரும்பு போன்றவனும், நீண்ட மருப்பு ஒன்று கொண்ட யானை முகத்தையுடையவனுமாகிய வல்லபைக் கணேசனாகிய மாணிக்க மணியே, நெடியோனாகிய திருமால் நின்னுடைய திருவடித்தூள், அந்நாளில் ஆலின்கீழ் படமுடைய மலைப் பாம்பின் உருவமுற்றுக் கிடந்தபோது பெரிய தனது உடம்பிற் பட்டதனால் நீங்கியுயர்ந்த அருணலத்தை ஒருகாலும் மறக்க மாட்டேன்; என்னை ஆண்டருள்க. எ.று.
திருமாலை, நெடுமால் என்பது பற்றித் திருநெடுமால் என்று கூறகின்றார்; திருமகள் கணவனாகிய நெடுமால் எனினும் பொருந்தும். உமையம்மையும் சிவனும் சூதாடியபோது உமாதேவி பெற்ற வெற்றியை மறுத்துத் தனதே வெற்றி யெனச் சிவபிரான் கூறவும், அந்நிலையில் திருமால், சிவன் கூற்றினை யாதரித்துப் பொய்ச் சான்று கூறிய குற்றத்துக்காக உமையம்மை அவரைக் குருட்டு மலைப்பாம்பாகுக எனச் சபித்தாரெனவும், பின் பொருகால் அப்பாம்பு ஓர் ஆலின் கீழிருந்து கணேச மூர்த்தியின் திருவடித்துகள் பட்டுப் பாம்புரு நீங்கிற்றென்றும் புராணம் கூறுகிறது. கணேசப் பெருமான் திருவடியைப் சிறப்பித்தற்குச் “சேவடித் துணைமலர்” என வுரைக்கின்றார். மலைப்பாம்பின் உடம்பு பெருத்து நீண்டிருப்பது பற்றிப் “பெருநெடு மேனி” என்று குறிக்கின்றார். கரு - பிறப்பு. பிறவிப் பெருங் கடலை, “கருநெடுங்கடல்” என்கின்றார். கணேசர் திருவடி பிறவிக் கடலைக் கடக்கலுறுவார்க்குப் பெரியதொரு புணையாதலால், “கடத்தும் நற்றுணையே” என்று போற்றுகின்றார். கரும்பின் கணுவையும் கண்ணெண்பது பற்றி, “கண்கள் மூன்றுடைய செங் கரும்பே” என்றும், அசுரரைக் கொல்லற்கு ஒரு மருப்பை ஒடித்துச் செலுத்தின குறிப்புப் புலப்பட விநாயகரை ஒற்றை மருப்போன் என்பதுண்மையின், “நெடு மருப்பு ஒன்று இலகு வாரணமே” என்றும் போற்றுகின்றார். வாரணம் - யானை; யானையின் முகமுடைமை கருதி வாரணம் என்பது மரபு.
இதனால், திருமால் மலைப்பாம்பாகி வருந்திய செய்கையும், விநாயகர் திருவடித்துகளால் அவர் பாம்புரு நீங்கிய குறிப்பும் தெரிவித்தவாறாம். (1)
|