பக்கம் எண் :

2531.

     நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன்
          நண்ணிநின் துணைஅடி வழுத்திக்
     களிநலன் உடன்இவ் வுலகெலாம் படைக்கக்
          கடைக்கணித் ததைஉளம் மறவேன்
     அளிநலன் உறுபேர் ஆனந்தக் கடலே
          அருமருந் தேஅருள் அமுதே
     வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே
          வல்லபைக் கணேசமா மணியே.

உரை:

      அருணலம் மிக்க பெரிய இன்பக் கடலாய், பிறவி நோய்க்குப் பெறற் கரிய மருந்தாய், திருவருளாகிய அமுதமாய், காற்று நிறைந்த உலகுக்கு ஒப்பற்ற பெரிய துணையாய் விளங்கும் வல்லபைக் கணேசனாகிய பெரிய மாணிக்க மணியே, தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் நான்கு முகங்களையுடைய ஒருவனாகிய பிரமன் நின்னுடைய இரண்டாகிய திருவடிகளை வாழ்த்தி, இன்பச் சிறப்புடன் இவ் வுலகங்களைப் படைக்கும் தொழிலை இனிது செய்தற் பொருட்டு அருள் பாலித்த செயலை யான் என்றும் மறவேன். எ.று.

     அளி - அருள். திருவருளால் அன்பர்கட்குப் பேரின்பம் பெருகுதலால், அதற்கு முதல்வனாகிய கணேசப் பெருமானை, “அளி நலன் உறுபோர் ஆனந்தக் கடலே” எனவும், பிறவியின்கண் எய்தும் நோய் வகைகள் அனைத்துக்கும் கணேசப் பெருமானது திருவருள் பெறற்கரும் மருந்தாதல் தோன்ற, “அருமருந்தே” எனவும், இனிது வாழ்வார்க்கு இன்பம் நல்கும் ஞானப் பொருளாதலின், “அருளமுதே” எனவும் உரைக்கின்றார். காற்று முதலிய ஐம்பெரும் பூதங்களால் இவ்வுலகம் ஆகிய தென்பது பற்றி, “வளி நிறை யுலகு” என்றும், இப்பூதங்கள் தமக்குரிய வரம்பு கடவாமல் நின்று வாழும் உயிர்கட்கு வாழ்வளித்தற்குக் கணேசப் பெருமான் காரணமாதல் விளங்க, “உலகுக்கு ஒரு பெருந் துணையே” என்றும் இயம்புகின்றார். “வளி வழங்குமல்லல் மாஞாலம் கரி” (குறள்) என்று பெரியோர் கூறுவது காண்க. நளினம் - தாமரை. முகம் நான்காதலால் திருமேனியும் நான்காம் போலும் என ஐயுறாமைப் பொருட்டு, “நான்முகத் தொருவன்” என்று கூறுகின்றார். கணேசப் பெருமான் தேவர்கள் கண்டு வியக்குமாறு விசுவரூபம் காட்டியபோது பிரமன் நன்கு கண்டு செய்தொழில் தெளிவு பெற்றான் என்ற புராண வரலாற்றை (விநாயக பு. விசுவரூபம் காட்டிய படலம்) நினைவிற் கொண்டு உரைக்கின்றாராதலின், “நண்ணி நின் துணையடி வழுத்திக் களிநலனுடன் இவ்வுலகெலாம் படைக்கக் கடைக் கணித்ததை மறவேன்” என வுரைக்கின்றார். விசுவரூபம் கண்டு வாழ்த்தி பெற்ற பெரு மகிழ்ச்சியைக் “களிநலன்” எனவும், பலவேறு வகைய உலகங்களாதலின் “உலகெலாம்” எனவும், கணேசப் பெருமான் அருளிய திறத்தைக் “கடைக் கணித்தது” எனவும் இயம்புகின்றார். நற்பான்மையாதலின் “மறவேன்” என்கின்றார்.

     இதனால் கணேசப் பெருமானது விசுவரூபக் காட்சியால் நான்முகன் படைப்புத் தொழில் சீர் பெற்றமை தெரிவித்தவாறாம்.

     (2)