பக்கம் எண் :

2532.

     சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும்
          செய்தருள் இறைமைதந் தருளில்
     பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினறு
          பெருமையை நாள்தொறும் மறவேன்
     ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா
          ஆண்மைஎற் கருளிய அரசே
     வார்உருத் திடுபூண் மணிமுகக் கொங்கை
          வல்லபைக் கணேசமா மணியே.

உரை:

      யாவர் போந்து அச்சுறுத்தினும் அஞ்சாத மனத்திண்மையை அடியேனுக்கு அருள் புரிந்த அருளரசே, கச்சணிந்து மேலே மணிமாலை பூண்டுள்ள கொங்கைகளையுடைய வல்லபைக் கணவனாகிய கணேசப் பெருமானே, சிறப்புடைய உருத்திர மூர்த்திகள் மூவர்க்குப் படைத்தல் முதலிய முத்தொழில்களைச் செய்யும் திறமருளி, அவ்வத் தொழிற்குரிய தலைமையும் தந்து, அத் தொழிற்குரிய திருவுருவையும் நிலையுற எய்துவித்த நின்னுடைய பெருமையை நான் எந்நாளும் மறவேன். எ.று.

     உருத்தல் - அச்சுறுத்தல். எத்துணை மெய்வலியுடையார் போந்து அச்சமூட்டினும் அஞ்சாத மனத்திண்மையை “ஆருருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மை” என்று எடுத்துரைக்கின்றார். வார் - மகளிர் மார்பிலணியும் கச்சு. மணிப்பூண் - பூண் மணியென மாறி நின்றது. வல்லபை - வல்லபா தேவி. உருத்திர கணத்துள் மூவர் செய்து கொண்ட வேண்டுகோட்கிசைந்து வக்கிரதுண்ட விநாயக மூர்த்தியாய்த் தோன்றிப் படைத்தல் முதலிய முத்தொழில் செய்யவும், அத் தொழில்கட்கு அவர் தாமே தலைவராகவும் செய்தருளிய திருவருட் செயலை நினைக்கின்றாராகலின், “சீர் உருத்திர மூர்த்திகட்கு முத்தொழிலும் செய்து, அருள் இறைமை தந்தருளி” என்றும், செய்தொழிற் கொத்த திருமேனி தந்தருளிய நலத்தை, “பேருருத்திரம் கொண்டிடச் செயும் நினது பெருமை” என்றும் இசைக்கின்றார். உரு திரம் கொள்வது, பேருருவம் நிலையுறக்கொள்வது.

     இதனால், வக்கிரதுண்ட விநாயகர் உருத்திரர் மூவர்க்குப் படைப்பு முதலிய முத்தொழிலும் நல்கிய திறம் உரைத்தவாறாம்.

     (3)