2537. முன்அருந் தவத்தோன் முற்கலன் முதலா
முனிவர்கள் இனிதுவீ டடைய
இன்அருள் புரியும் நின்அருட் பெருமை
இரவினும் பகலினும் மறவேன்.
என்அரும் பொருளே என்உயிர்க் குயிரே
என்அர சேஎன துறவே
மன்அரு நெறியில் மன்னிய அறிவே
வல்லபைக் கணேசமா மணியே.
உரை: எனக்குப் பெறற்கரும் பொருளாயவனும், எனது உயிர்க்குயிராயவனும், எனக்கு அருளரசனும், எனக்கு உறவும், நிலைத்த அரிய நெறியில் மன்னுகின்ற மெய்யறிவாயவனும், வல்லபைத் தேவிக்குக் கணவனுமாகிய கணேசப் பெருமானே, முன்னாளில் அரிய தவத்தைச் செய்த முற்கலன் முதலிய முனிவர்கள் வீடு பேற்றை இனிது பெற, இனிய திருவருளைச் செய்த நினது அருட் பெருமையை, இரவு பகல் எக்காலத்தும் அடியேன் மறவேன். எ.று.
பெறப்படும் பொருள்களும் எய்துதற் கரியது யாவராலும் பேணிப் பாராட்டப்படுவதாகலின், கணேசப் பெருமானை “என்னரும் பொருளே” எனவும், உயிர்க்குயிராய் இருந்து அறிவருளும் சிறப்புப் பற்றி, “உயிர்க்குயிரே” எனவும் போற்றுகின்றார். இடையறவின்றித் திருவருள் பாலித்தலின், “என்னரசே” என்றும், இன்பமும் துன்பமும் எய்தும் காலத்தும் உடனிருந்தருளுதலின், “எனது உறவே” என்றும் ஏத்துகின்றார். நிலை பேறுடைய செந்நெறிக்கண் செல்வார்க்கு இன்றியமையாத ஞானமருளும் பெருமானாதல் விளங்க, “அருநெறியில் மன்னிய அறிவே” எனப் போற்றுகின்றார். முற்கல முனிவர் - முற்பிறவியிலேயே அரிதவங்களைச் செய்து மேன்மை யுற்றவர் எனப் புராணம் கூறுதலால் “முன்னருந்தோன் முற்கலன்” என மொழிகின்றார். முன்னென்பதைத் தனி நிறுத்தி முற்காலத்தில் எனவுரைத்தல் மரபு. இனி, முன்னருந் தவத்தோன் என இயைத்து நினைத்தற்கரிய உயரிய தவம் செய்தவன் என்றலும் ஒன்று. மிக்க பிணியுற்று வருந்திய தக்கன், முற்கலனைத் தலைவனாகக் கொண்ட முனிவர் கூட்டத்தின் காற்றுப் பட்டதனால் பிணி நீங்கி அது தந்த துன்பத்தினின்றும் வீடு பெற்றான் என்பது விநாயக புராணம். முற்கலன் முதலிய முனிவர்கள் கணேசப் பெருமான் திருவருளால் சிவஞானிகளாகி வீடு பெற்ற செய்தியைக் குறித்தற்கு “முற்கலன் முதலா முனிவர் வீடு இனிதடைய இன்னருள் புரியும் நின் அருட் பெருமை” எனப் பராவுகின்றார்.
இதனால் முற்கலன் முனிவர்கள் வீடு பெற்ற திறம் தெரிவித்தவாறாம். (8)
|