2538. துதிபெறும் காசி நகரிடத் தனந்தம்
தூயநல் உருவுகொண் டாங்கண்
விதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய்
மேவிய கருணையை மறவேண்
நதிபெறும் சடிலப் பவளநற் குன்றே
நான்மறை நாடரு நலமே
மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே
வல்லபைக் கணேசமா மணியே.
உரை: கங்கை தங்கிய சடையையுடைய நல்ல பவளக் குன்றம் போல்பவனும், நான்கு மறைகளும் தேடிக் காண்டற் கரிதாகிய நன்பொருளாயவனும், இயற்கையறிவு நிறைந்த பெருமக்கள் உள்ளத்தில் நிலைபெற வீற்றிருக்கும் சிவமாயவனும், வல்லபைத் தேவியின் கணவனுமாகிய கணேசப் பெருமானே, புகழ் பெற்ற காசி நகர்க்கண் தூய நல்ல மகோட மூர்த்தியாய் எழுந்தருளி, அறம் நிலைபெறும் வீடுகள்தோறும் விருந்தினனாய்த் திருவிளையாடல் புரிந்த நினது திருவருளை யான் மறவேன். எ.று.
விநாயகப் பெருமானுக்கும் சடைமுடியும் முக்கண்ணும் செம்மேனியும் உண்டாதலின், “நதி பெறும் சடிலப் பவள நற்குன்றே” எனப் பரவுகின்றார். வேத ஞானம் பாச ஞானமாதலால், “நான்மறை நாடரும் நலமே” என நவில்கின்றார். மதி - இயற்கையறிவு. நூலறிவு செயற்கையறிவு எனப்படும். “மதி நுட்பம் நூலோடுடையார்க்கு” (குறள்) எனச் சான்றோர் பிரித்தோதுவது காண்க. இயற்கை யறிவில்லார்க்குச் செயற்கையாய் எய்துகிற ஞானம் செல்லுவ தல்லையாதலின் அதனை விதந்து, “மதி பெறும் உளத்தில் பதி பெறும் நலமே” என்று பகர்கின்றார். பதி பெறல் - நிலைபெறுதல். உண்மை ஞானம் இங்கே சிவம் எனப்படுகிறது. துதி - புகழ். காசி நகரம் தன்கட் போந்து இறந்தார்க்கு முத்தி நல்குவது என்ற புகழ் பெற்றமைப்பற்றி, “துதி பெறும் காசி நகர்” என வுரைக்கின்றார். காசி நகர வேந்தன் அரண்மனையில் மகோற்கட விநாயகர் விருந்தினராய் இருந்தபோது நகர மாந்தர் அனைவரும் தத்தம் மனைக்கு விருந்தாக வரல் வேண்டுமென வேண்டினாராக, அவரவர் வேண்டிய உருவிற் போந்து விருந்துண்டு அவர்களை மகிழ்வித்த திருவிளையாடலைக் குறித்தற்கு, “காசி நகரிடத்து அனந்தம் தூய நல் உருவு கொண்டு ஆங்கண் விதி பெறும் மனைகள்தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன்” என்று கூறுகின்றார்.
இதனால் காசி நகர்க்கண் மகோற்கட விநாயகராய்த் திருவிளையாடல் புரிந்தமையை எடுத்தோதியவாறாம். (9)
|