பக்கம் எண் :

2539.

     தடக்கைமா முகமும் முக்கணும் பவளச்
          சடிலமும் சதுர்ப்புயங்க களும்கை
     இடக்கைஅங் குசமும் பாசமும் பதமும்
          இறைப்பொழு தேனும் யான் மறவேன்
     விடக்களம் உடைய வித்தகப் பெருமான்
          மிகமகிழ்ந் திடஅருட் பேறே
     மடக்கொடி நங்கை மங்கைநா யகிஎம்
          வல்லபைக் கணேசமா மணியே.

உரை:

      விடம் தங்கிய கழுதையுடைய ஞானப் பெருமானாகிய சிவன் மிகவும் மகிழ்கின்ற திருவருட் செல்வப் புதல்வனாயும், இளமை பொருந்திய கொடி போன்ற நங்கையும் மகளிர்க்கு அரசியாகவும் உள்ள வல்லபை யம்மைக்குக் கணவனாகிய கணேசப் பெருமானே, பெரிய துதிக்கையும் மூன்றாகிய கண்களும் பவளம் போன்ற நிறத்தையுடைய சடையும், நான்காகிய தோள்களும் இடக்கையில் ஏந்திய அங்குசமும், பாசமும் திருவடியும் சிறிது போதினும் யான் மறக்க மாட்டேன். எ.று

     களம் - கழுத்து. வித்தகப் பெருமான், ஞானமே திருவுருவாக அமைந்த சிவபெருமான். அருட்பேறு - திருவருளுருவாகிய செல்வப் புதல்வன். மடக்கொடி -இளமையான கொடி. மங்கை நாயகி - மங்கையரினத்துக்குத் தலைவி. தடக்கை மாமுகம் -பெரிய துதிக்கையையுடைய யானையது முகம். பவளச் சடிலம் - பவளத்தின் நிறமும் ஒளியுமுடைய சடை. சதுர்ப்புயம் - நான்காகிய தோள்கள் இடக்கையில் அங்குசமும் வலக்கையில் பாசமும் ஏந்துதல் தோன்ற “இடக்கை யங்குசமும் பாசமும்” எனக் கூறுகிறார். பதம் - திருவடி.

     இதனால் விநாயகப் பெருமானது திருவுரு அமைதியைத் தெரிவித்தவாறாம்..

     (10)