பக்கம் எண் :

24

24. சித்தி விநாயகர் திருவருள் மாலை

 

      அஃதாவது சித்தி விநாயகப் பெருமான் திருவருளை வேண்டுகின்ற பாமாலையென்பது. கருங்குழியில் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமானுக்குச் சித்தி விநாயகர் என்பது பெயர். இதனை, “கருங்குழியென்னும்மூர் மேவியன்பர்க்கருள் கணநாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே” இச் சொன்மாலையின் இறுதித் திருப்பாட்டில் குறிப்பதனால் அறிகின்றோம். சித்தி விநாயகர் என்ற திருப்பெயரை ஓதும் ஆசைப் பெருக்கால் பாட்டுத்தோறும் “சித்தி விநாயக வள்ளலே” என்பதை மகுடமாக வைத்து வள்ளற் பெருமான் பாடியிருக்கின்றார். இத் திருப்பதிகத்தைக் கணேசர் திருவருள் மாலை எனவும் கூறுகின்றார். இதன்கண் அச்சம் நீங்குதல், அன்பர் பணி செய்தல், அடியனாதல், திருவருள் வேண்டல் முதலிய அரும்பண்புகளை, நல்குக எனக் கணேசப் பெருமானை வேண்டுகின்றார்.

 

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2541.

     திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன்
          திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
     உருவும் சீலமும் ஊக்கமும் தழ்வுறா
          உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
     குருவும் தெய்வமும் ஆகிஅன் பாளர்தம்
          குறைத விர்க்கும்கு ணப்பெருங் குன்றமே
     வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம்
          விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.

உரை:

      சிந்தையின்கண் அஞ்சம் இயல்பு நீங்குமாறு யானை முகத்தோடு விளங்கும் சித்தி விநாயகனென்றும் வள்ளற் பெருமானே, செல்வமும் கல்வியும் சீரும் சிறப்பும் நின்னுடைய திருவடியே புகழ்ந்து பாடும் திறமையும், நல்ல உடம்பும் ஒழுக்கமும் உள்ளத்தில் ஊக்கமும் குற்றப்படாத உணர்வும் தந்து எளிய என் மனத்தின்கண் எழுந்தருளியவனே, நின்பால் அன்புடையார்க்கு உண்டாகும் குறைகளைப் போக்கியருளும் பெரிய குணக் குன்றமாகியவனே, எனக்கு அருள் புரிக. எ.று.

     திரு - யாவரும் விரும்பும் செல்வம். சீர் - செல்வத்தால் உண்டாகும் நன் மதிப்பு. திருவடிப் புகழை உரைப்பதினும் பாட்டாற் பாடுவது அருமையென்பது பற்றி, “திருவடிப் புகழ் பாடும் திறம்” எனத் தெரித்துரைக்கின்றார். உருவமைந்த உடம்பு பெறுதலும் சிறப்பாதலின், “நல்லுரு” என நவில்கின்றார். “உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிதே” (சீவக) என்பர் திருத்தக்க தேவர். சீலம்-ஒழுக்கம். குற்றம். புரியும் உணர்வு தாழ்வு உண்டாக்குதலால், “தாழ்வு உணர்வு” என்று சிறப்பிக்கின்றார். “உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்” (திருமந்தி) என்று பெரியோர் கூறுதலால், “உள்ளத் தமர்ந்தவா” என வுரைக்கின்றார். குரு - அறியும் அறிவு தருபவன். தெய்வம் -வேண்டும் துணையாகி வரம் தருவது. இரு வகையாய் நின்று அன்பாளர்க்கு எய்தும் குறைகளைப் போக்கி யருளுவதால், “குருவும் தெய்வமுமாகி அன்பாளர்தம் குறை தவிர்க்கும் குணப் பெருங் குன்றமே” எனப் புகழ்கின்றார். நெஞ்சில் உண்டாகும் அச்சம் கீழ்மை யுறுவித்தலால், “வெருவும் சிந்தை விலக” என விளம்புகின்றார். கசானனம் - யானை முகம். வள்ளலார் மாணவரான தொழுவூர் வேலாயுத முதலியார் காலத்தில் வட வெழுத்துப் புதிது புகுத்தப்பட்டமையால் கசானனம் கஜானனம் என எழுதப் பட்டதென அறிக.

     இதனால், விநாயகப் பெருமான் அன்பர் சிந்தைக்கண் அமர்ந்து அச்ச வுணர்வு தோன்றாது கெடுமாறு அருளும் திறம் தெரிவித்தவாறாம்.

     (1)