2542. சீத நாள்மலர்ச் செல்வனும் மாமலர்ச்
செல்வி மார்பகச் செல்வனும் காண்கிலாப்
பாதம் நாடொறும் பற்றறப் பற்றுவோர்
பாதம் நாடப் பரிந்தருள் பாலிப்பாய்
நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும்மெய்ஞ்
ஞான நாடக நாயக நான்கெனும்
வேதம் நாடிய மெய்ப்பொரு ளேஅருள்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
உரை: நாத தத்துவத்தின் உச்சியின்கண் விளங்குகின்ற மெய்ம்மை ஞானமாய் இயங்கும் தலைவனும், நான்காகிய வேதங்கள் தேடுகின்ற உண்மைப் பாருளுமாய்த் திருவருளுருக் கொண்டு விளங்கும் சித்தி விநாயகனாகிய வள்ளலே, குளிர்ந்த நாட் காலையில் மலரும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், அழகிய செந்தாமரையில் எழுந்தருளும் திருமகளை மார்பிலே கொண்ட செல்வனாகிய திருமாலும் காணவியலாத சிவத்தின் திருவடியை இருவகைப் பற்றும் கெடல் வேண்டிப் பற்றுகின்ற அடியார்களின் திருவடிக்கன்பு செய்ய எனக்குத் திருவருள் செய்வாயாக. எ.று.
நாதம் நாடிய அந்தம், தத்துவாதீதம், ஆங்கு விளங்கும் பரசிவத்தை “அந்தத்தில் ஓங்கும் ஞான நாடக நாயகன்” என்று குறிக்கின்றார். கேவலத்திற் கிடக்கும் உயிர் ஞானப் பேற்றால் உறுதி பெறும் பொருட்டு மாயையைக் கலக்கித் தத்துவங்களைத் தோற்றுவித்து இயக்குதல் பற்றி, பரசிவத்தை “ஞான நாடக நாயகன்” எனக் கூறுகின்றார். இருக்கு முதலிய மறை நான்கையும் “நான்கெனும் வேதம்” எனவும். மெய்ம்மைப் பொருளை நாடி நிற்கும் இயல்பு பற்றி, “வேதம் நாடிய மெய்ப் பொருளே” எனவும் விளம்புகின்றார். நீர்ப் பூவாதலின் தாமரையைச் “சீத நாண் மலர்” எனத் தெரிவிக்கின்றார். நாண்மலர் - நாட்காலையில் மலரும் புதுமலர். திருமகட்கு திருமாலின் வலமார்பும் இடமாகலின், “மாமலர்ச் செல்வி மார்பகச் செல்வன்” எனத் திருமாலைக் குறிக்கின்றார். பசுபாச ஞானங்களால் அறியலாகாத சிவபரம் பொருளின் திருவடி பதி ஞானம் ஒன்றினாலே யுணரப்படுவதால், பசு பாசப் பற்றற விரும்புவோர் மெய்யன்பரால் விளங்குதல் கண்டு, “பாதம் நாடப் பற்றறப் பற்றுவோர்” என்று கூறுகின்றார். மெய்யன்பரைச் சிவமெனவே கருதி வழிபடுவோர் உய்தி பெறுபவராதலின், பற்றறப் பற்றுவோர், “பாதம் நாடப் பரிந்தருள் பாலிப்பாய்” என வேண்டுகின்றார். பரமன் திருவடி பரவுதற்கும் அவனது திருவருள் இன்றியமையாமையின் “அருள் பாலிப்பாய்” என இறைஞ்சுகின்றார்..
இதனால் மெய்யன்பர்களின் திருவடித் தொண்டு புரிதற் கருளுமாறு வேண்டியவாறாம். (2)
|