பக்கம் எண் :

2543.

     என்னை வேண்டிஎ னக்கருள் செய்தியேல்
          இன்னல் நீங்கும்நல் இன்பமும் ஓங்கும்நின்
     தன்னை வேண்டிச்ச ரண்புகுந் தேன்என்னைத்
          தாங்கிக் கொள்ளும்ச ரண்பிறி தில்லைகாண்
     அன்னை வேண்டிஅ ழும்மகப் போல்கின்றேன்
          அறிகி லேன்நின்தி ருவுளம் ஐயனே
     மின்னை வேண்டி செஞ்சடை யாளனே
          விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.

உரை:

      விளங்குகின்ற சித்தி விநாயகனாகிய வள்ளலே, மின்னல் போன்று ஒளிரும் சிவந்த சடையையுடையவனே, தாயின் அருளை விரும்பியழுகின்ற குழவி போன்றுள்ள யான் திருவுள்ளக் கருத்தையறியாமல் வருந்துகின்றேன்; என்னை விரும்பி எனக்கு நீ அருள்வாயாயின், எனக்குள்ள துன்பங்கள் நீங்கிப் போம்; கெடாத இன்பங்களும் என்பால் பெருகிச் சிறக்கும்; நின்னையே வேண்டி நின்னுடைய திருவடியையடைந்தேன்; என்னைத் தாங்கி யாதரிக்கும் நற்றாளும் எனக்கு வேறேயில்லை. எ.று.

          விநாயகப் பெருமானுடைய திருமுடிச் சடைமுடியும் மின் போல் ஒளி செய்வது என்பவாகலின் “மின்னை வேண்டிய செஞ்சடையாளனே” என விளம்புகின்றார். பிற சான்றோரும், “மின்னெறி சடாமுடி விநாயகன்” (நன்னெறி) என்பது காண்க. செஞ்சடை -பொன் போற் சிவந்த சடை. மெய்யாற் கண்டு சென்றடையும் திறமின்மையின் தாயின் ஆதரவு வேண்டிய மகவு அழுதலன்றி வேறு செய்ய மாட்டாதவாறு போல மெய்யுணர்வு கொண்டு மெய்ந்நெறி நின்றியல மாட்டாமையால் புலம்புகின்றேன் என்பார், “அன்னை வேண்டி யழும் மகப் போல்கின்றேன்” எனவும், அழும் மகவின் குரல் கேட்டதும் விரைந்தோடி வரும் தாய் போல நினது திருவருள் வந்து எய்தாமையின் நின் கருத்தையறிகின்றிலேன் என்பார், “அறிகிலேன் நின் திருவுளம் ஐயனே” எனவும் இயம்புகின்றார். என்பால் அருள்கூர்ந்து நின்து திருவருளை நல்குவாயாயின், என்னைப் பற்றி வருத்தும் துன்பமனைத்தும் ஒழிந்து விடும் என்பார், “என்னை வேண்டி எனக்கு அருள் செய்தியேல் இன்னல் நீங்கும்” என்றும், துன்பம் நீங்கிய விடத்து உளதாய்ச் சிறப்பது பேரின்பம் என்றற்கு “நல்லின்பம் ஓங்கும்” என்றும் கூறுகின்றார். நினது திருவருளையே நயந்து நின் திருவடியைப் புகலடைந்தேன் என்பாராய், “நின் தன்னை வேண்டிச் சரண் புகுந்தேன்” எனவும், சரண் புகுந்தாரைத் தாங்கிக் கொள்ளும் அழகும் ஆற்றலு முடையது நின் திருவடியாதலால் பிறிது யாதும் வேண்டிற்றில்லேன் என்பாராய், “தாங்கிக் கொள்ளும் சரண் பிறிதில்லை காண்” எனவும் இசைக்கின்றார். “உறுநர்த்தாங்கிய மதனுடை நோன்றாள்” (முருகு) என நக்கீரர் கூறுவது காண்க.

     இதனால் விநாயகப் பெருமானது திருவடியல்லது புகல் வேறில்லையென்பது தெரிவித்தவாறாம்.   

     (3)