2547. மண்ணில் ஆசைம யக்கற வேண்டிய
மாத வர்க்கும்ம திப்பரி யாய்உனை
எண்ணி லாச்சிறி யேனையும் முன்நின்றே
ஏன்று கொண்டனை இன்றுவி டுத்தியோ
உண்ணி லாவிய நின்திரு உள்ளமும்
உவகை யோடுவர்ப் பும்கொள ஒண்ணுமோ
வெண்ணி லாமுடிப் புண்ணிய மூர்த்தியே
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
உரை: வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடியுள்ள முடியையுடைய புண்ணிய வுருக்கொண்டு விளங்கும் சித்தி விநாயக வள்ளற் பெருமானே, மண்ணக வாழ்வில் உளவாகும் ஆசையும் மயக்கமும் பற்றாமல் நீங்குதல் வேண்டி தவ முனிவர்களுக்கும் அறிவரியவனாகியவனே, உன்னை மனத்தால் நினைக்காத சிறுமையுடையனாகிய என்னையும் பொருளாகக் கொண்டு, முன்னம் இளமைக் காலத்தே ஏற்றுக் கொண்டு இந்நாளில் என்னைக் கைவிடுதல் செய்குவையோ? உனக்குள் அமைந்திருக்கும் திருவுள்ளமும் உவத்தலும் காய்தலும் கொள்ள வல்லதாமோ? ஆகாதன்றோ. எ.று.
விநாயகப் பெருமானும் சிவத்தின் ஒரு மூர்த்தமாதலால், அவர்க்கும் சிவன்போலக் கங்கையும் திங்களும் தங்கிய சடைமுடி யுண்டாதலால், “வெண்ணிலா முடிப் புண்ணிய மூர்த்தியே” என்று இசைக்கின்றார். வெண்ணிலா - வெண்மை நிறச் சந்திரன். மண்ணிற் பிறப்பார்க்கு உடல் பொருள் உயிர் என்ற மூன்றின்மேல் இயல்பிலேயே ஆசையும் பற்றும் தோன்றி அவற்றினடியாக எண்ணிறந்த ஆசைகள் தோன்றிச் சூழ்ந்து கொள்வதோடு, “வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்” (புறம்) என்ற மயக்கமும், உளதாகலின், பிறப்பற வேண்டும் தவயோகிகளும் முனிவர்களும் பெருந்தவம் புரிபவாதலால், அவர்களை, “மண்ணில் ஆசை மயக்கற வேண்டிய மாதவர்” என்று கூறுகின்றார். தவஞானிகளும் காண்பதற்குரிய அருமையும் பெருமையும் உடையன் விநாயகப் பெருமான் என்பது விளங்க, “மாதவர்க்கும் மதிப்பரியாய்” என வுரைக்கின்றார். மதித்தல் - ஈண்டு அறிவால் அறிதல் மேற்று. இத்தகைய பெருமானது உண்மையுணர்ந்தும் சிந்தைக்கண் நினைந்து போற்றிப் பரவாதொழிந்த சிறுமை புலப்படுத்தற்குத் தம்மை “உனை எண்ணிலாச் சிறியேன்” என இயம்புகின்றார். உன்னை நெஞ்சின், கண் நினைந்து பரவும் நெறிக்கண் நில்லாத சிறுமையேன் எனப் பொருள் கூறுவதும் பொருந்தும். இளமைப்போதில் விநாயகனை நினைந்து போற்றிப் பரவினமை தோன்ற, “சிறியேனையும் முன்னின்று ஏன்று கொண்டனை” என இசைக்கின்றார். அன்று ஏலா தொழிந்திருப்பின், தமக்கு வழிபாடு கைகூடியிரா தென்ற துணிவு பற்றி, “முன் நின்று ஏன்று கொண்டனை” என மொழிகின்றார். நின்று - சிந்தைக்கண் நின்று என்க. இந்நாளில் அப்பெருமான் திருவருள் தமக்கு எய்தவில்லையெனக் கருதுமாறு விளங்க “இன்று விடுத்தியோ” என வினவுகின்றார். முன்பு ஏற்றலும் இன்று விடுத்தலும் வேண்டுதல் வேண்டாமைகளால் உளவாவனவாதலால், அச் செயற் பண்புகள் நின் திருவுள்ளத்தில் இடம் பெறுமோ என வியந்து கேட்பவர் போல, ”உண்ணிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ” எனக் கேட்கின்றார். உவகை - வேண்டுதல்; உவர்ப்பு -வேண்டாமை.
இதனால், வேண்டுதல் வேண்டாமையில்லாத, நின் திருவுள்ளம் இவ்விரண்டையும் கொள்வது கூடாதென மொழிந்தவாறாம். (7)
|