பக்கம் எண் :

2548.

     ஆணி லேஅன்றி ஆருயிர்ப் பெண்ணிலே
          அலியி லேஇவ்வ டியனைப் போலவே
     காணி லேன்ஒரு பாவியை இப்பெருங்
          கள்ள நெஞ்சக்க டையனை மாயையாம்
     ஏணி லேஇடர் எய்தவி டுத்தியேல்
          என்செய் கேன்இனி இவ்வுல கத்திலே
     வீணி லேஉழைப் பேன்அருள் ஐயனே
          விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.

உரை:

      புகழால் விளக்கமுறும் சித்தி விநாயக வள்ளற் பெருமானே, அரிய மக்களுயிர்களுள் ஆண்களிலோ அன்றிப் பெண்களிலோ அன்றி அலியினத்திலோ இந்த அடியவனாகிய என்னைப் போலும் ஒரு பாவியைக் கண்டிலேன்; இந்தப் பெரிய கள்ளம் பொருந்திய நெஞ்சினையுடைய கடையனாகிய என்னை மானுடமாயையென்னும் வலிய எல்லையில் துன்புற விடுகின்றாயென்னில், யான் யாது செய்ய வல்லேன்; இப்பொழுது இவ்வுலகத்தில் வீணாகவுழைத்து மெலிகின்றேனாதலால் எனக்கு உன் திருவருளை நல்குவாயாக. எ.று.

     ஆருயிர் - நடுநிலை விளக்கு. ஆருயிர் ஆணிலே, ஆருயிர்ப் பெண்ணிலே, ஆருயிர் அலியிலே என இயையும். ஒருபாவி - ஒப்பாரும் மிக்காருமில்லாத பாவி. விநாயகப் பெருமான் திருவடியை நினைந்து கூறுதலால் தம்மை “அடியன்” என்று குறிக்கின்றார். காணிலேன்-காண்பதில்லேன். கள்ள நினைவுகளின் மிகுதி விளங்கப் “பெருங் கள்ள நெஞ்சகக் கடையன்” எனவும், கள்ளம் நிறைந்த நெஞ்சத்தால் கடைப்படுவது தோன்றக் “கடையன்” எனவும் உரைக்கின்றார். மக்கட் பிறப்பால் உளதாகும் மாயை மயக்கத்தை “மாயையாம் ஏண்” எனக் குறிக்கின்றார். மக்கட் பிறப்பை யுள்ளடக்கி யிருத்தலால், “மாயையாம் ஏண்” எனச் சுட்டுகின்றார். “மையல் மானுடமாய் மயங்கும் வழி ஐயனே தடுத்தாண்டருள்” (தடுத்தாட்) எனச் சேக்கிழார் பெருமான் தெரிவிப்பது காண்க. உலகம் உடல் கருவி கரணம் நுகர்வு அனைத்தும் மாயா காரியமாய்ச் சகல நிலை யுயிர்களை மயக்கி வாழச் செய்வனவாதலால், மாயை யென்றே ஒழியாமல் “மாயையாம் ஏண்” என்கின்றார். ஏண் - எல்லை; கடக்கலாகாத வலிய எல்லை என்றுமாம். மயக்கம் செய்தலால் உயிர்கள் குற்றம் செய்து இடரும் தளர்வுமுற்றுத் துன்புறுவது இயல்பாதலால், “இடரெய்த விடுத்தியேல்” எனவும், நினது ஆணை பெருவலியுடையதாகலின், “என் செய்வேன்” எனவும் இயம்புகின்றார். இவ்வுலகில் நினைந்தும் மொழிந்தும் செய்வன செய்தும் உழைக்கும் உழைப்பு மாயை யுதறி வல்வினையைச் சுட்டு மலத்தைக் கெடுத்து உய்தி பெறற்கு உதவுகின்றதில்லை என்பார், “இவ்வுலகத்திலே வீணிலே யுழைப்பேன்” என்று கூறுகின்றார். நின்திருவருளால்தான் என் உழைப்புப் பயன் தருவதாகலின் அதனை யருள்க என்பது குறிப்பெச்சம்.

     இதனால், திருவருளின்றி உலகில் மக்களுழைப்பு வீணாமென்பது தெரிவித்தவாறாம்.

     (8)