2549. வாளி லேவிழி மங்கையர் கொங்கையாம்
மலையி லேமுக மாயத்தி லேஅவர்
தோளி லேஇடைச் சூழலி லேஉந்திச்
சுழயி லேநிதம் சுற்றும்என் நெஞ்சம்நின்
தாளி லேநின்த னித்தபு கழிலே
தங்கும் வண்ணம் தரஉளம் செய்தியோ
வேளி லேஅழ கானசெவ் வேளின்முன்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
உரை: விடலைப் பருவத்து அழகுருவான செவ்வேட்கு முன்னவனாய் விளங்கும் சித்தி விநாயகனான வள்ளற் பெருமானே, ஒளிபொருந்திய கண்களையுடைய மகளிர் கொங்கையாகிய மலையிலும், அவர்களின் முகம் செய்யும் மயக்கத்திலும், தோளிலும், இடைச் சுற்றிலும், உந்தியின் சுழித்த வுருவிலும், நாடோறும் சுழன்று திரியும் என்னுடைய நெஞ்சம் நினது திருவடியிலும், ஒப்பற்ற புகழிலும் தோய்ந்து நின்று வழிபடுமாறு திருவுள்ளம் செய்தருளுவாயாக. எ.று.
இளமகளிரின் கண்களில் ஒளிரும் ஒளி காமக் குறிப்புணர்த்தும் பொற்புடையதாகலின் ஆடவர் உள்ளம் அவ்விழியொளில் மயங்கும் இயல்பு தோன்ற, “வாளிலே விழி” என எடுத்து மொழிகின்றார். இதனை “மங்கையர் விழி வாளிலே” என இயைக்க. அடி பரந்து செம்மாந்து நுனி குவிந்து நிற்பது பற்றி, மகளிர் கொங்கைக்கு மலையை யுவமம் செய்வது மரபு. முகத்தினது ஒளி திகழும் மலர்ச்சியில் விளங்கும் வனப்பு காண்பார் கருத்தைக் காமக் களிப்பை யெழுப்புவது கொண்டு “முக மாயத்திலே” எனவும், மூங்கில் போல் வளைந்து தோன்றும் தோளும், கொடி போல் திவளும் இடையும், நீர்ச்சுழி போலும் உந்தியும் இளமைக்கு வளமும் அழகும் மிகுவித்தலின், “தோளிலே இடைச் சூழலிலே உந்திச் சுழியிலே” எனவும், இவற்றைக் காணும் இளைஞர் மனம் காம நினைவுகளில் அழுந்தி அலமருவதனால் “நிதம் சுற்றும் என் நெஞ்சம்” எனவும் இசைக்கின்றார். இந் நினைவுகளும் நெஞ்சச் சுழற்சியும் பிறப்பிணிக்கே மக்களை இறையாக்குவதை யுணர்ந்து, அந்நெறியை மாற்றி இறைவன் திருவடியிலும் திருவருளிலும் படிதல் வேண்டும் என்றற்கு “நின் தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும்வண்ணம்” என்றும், அதுவும் இறைவன் திருவருளால் நிகழ வல்லதாகலின், “உளம் செய்தியோ” என்றும் இயம்புகின்றார்.
இதனால் மகளிர் உருவில் மயங்கிச் சுழலும் மனத்தை மாற்றி விநாயகப் பெருமான் திருவடியிலும் அருளிலும் செலுத்தற்கு அருள் புரிக என வேண்டியவாறாம். (9)
|