25
25. கணேசர் தனித் திருமாலை
அஃதாவது ஓரொரு காலத்தில் முன்பின் தொடர்பின்றித்
தனித் தனியே பாடிய பாடல்களை முறைப்படுத்திக் கூறுதலின் இது தனித் திருமாலை எனப்படுகிறது. இவை
கணேசப் பெருமானைப் புகழ்வதால் கணேசர் தனித் திருமாலையாயின தனி என்பதற்கொப்பப் பாட்டுக்களும்
வேறு வேறு யாப்பியல் கொண்டுள்ளமை காண்க.
அறுசீர்க் கழிநெடிலடி
யாசிரிய விருத்தம்
2551. திங்கள் அம் கொழுந்து வேய்ந்த
செஞ்சடைக் கொழுந்தே போற்றி
மங்கைவல் லபைக்கு வாய்த்த
மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
ஐங்கர நால்வாய் முக்கண்
அருட்சிவ களிறே போற்றி
கங்கையை மகிழும் செல்வக்
கணேசநின் கழல்கள் போற்றி.
உரை: பிறைச் சந்திரனை யணிந்த சிவந்த சடையையுடையனாய், இளமை யோடுள்ள பெருமானே, போற்றுகின்றேன்; மங்கையாகிய வல்லபைக்கு ஏற்ற கணநாதனே உனது மலர் போன்ற திருவடிகட்கு வணக்கம்; ஐந்து கைகளும் தொங்குகின்ற வாயும் மூன்று கண்களுமுடைய அருளுருவாய்ச் சிவன் பயந்த யானைக் கன்றே, உன்னைப் போற்றுகின்றேன்; கங்கையாற்றைச் சடையில் ஏற்று மகிழும் செல்வக் கணேசப் பெருமானே நின்னுடைய கழலணிந்த திருவடியை போற்றுகின்றேன். எ.று.
திங்களங் கொழுந்து - இளம்பிறைச் சந்திரன்; அம் - சாரியை வேய்தல் - ஈண்டு அழகுற அணிதல் மேற்று. சடைக் கொழுந்து என்றவிடத்துக் கொழுந்து இளமை குறித்து நின்றது. போற்றி - வணக்கமும் வழிபாடும் எண்ணி வரும் வியங்கோள்; காப்புக் குறித்துப் போற்றி யென்றல் மரபு என அடியார்க்கு நல்லாரும், பாதுகாத்தற் பொருளதென நச்சினார்க்கினியரும் கூறுவர். மங்கை என்பது பருவம் குறியாது பெண்ணென்ற பொதுப் பொருள் தோன்ற வந்தது. மகிழ்நன் - கணவன், யானைக்கு வாயின் கீழிதற் தொங்குவதால், அதனை நால்வாய் என்பது பெயராயிற்று. கணேசப் பெருமான் யானை முகத்தனாதல் பற்றி “நால்வாய்” என்று இயம்புகின்றார். சிவனும் உமையும் யானை யுருக்கொண்டு பெற்ற மகனாதலால், “சிவக் களிறே” என்று சிறப்பிக்கின்றார். “பிடியதன் உரு உமைகொள மிகு கரியது வடிகொடு தனதடி வழிபடுமவரிடர் கடிகணபதி வர அருளினன்” (வலிவலம்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. விநாயகரும் கங்கை தங்கிய சடையுடையராதலின், “கங்கையை மகிழும் செல்வக் கணேச” எனப் பரவுகின்றார்.
இதனால் விநாயகப் பெருமானைப் போற்றித் தமக்கு அருட் காப்பு நல்க வேண்டியவாறாம். (1)
|