வண
வண்ணக் கலித்துறை
2552. உலகம் பரவும் பொருள்என்
கோஎன் உறவென்கோ
கலகம் பெறும்ஐம் புலன்வென்
றுயரும் கதிஎன்கோ
திலகம் பெறுநெய் எனநின்
றிலகும் சிவம்என்கோ
இலகைங் கரஅம் பரநின்
தனைஎன் என்கேனே.
உரை: விளங்குகின்ற ஐந்து கைககளையுடைய பரம்பொருளே, உலகில் வாழ்வோர் அனைவரும் வழிபடும் மெய்ப்பொருள் என்பேனா? எனக்கு உறவானவன் என்பேனோ? துன்பம் விளைவிக்கும் ஐம்புல வாசைகளை அறுத்து மேம்படுவார் எய்தும் இன்பநிலையம் என்பேனா? எள்ளில் உறையும் எண்ணெய் போன்று உலகுயிர்களிற் கலந்துறையும் சிவம் என்பேனா? நின்னை யான் என்னென்று கூறுவேன். எ.று.
“பொருளிலார்க்கு இவ்வுலகு இல்லை” (குறள்) என்றலின், பொருள் நோக்கி வாழ்வார்க்குப் பொருளாய் உறுதி நல்குவது பற்றி விநாயகப் பெருமானை, “உலகம் பரவும் பொருளென்கோ” எனவும், பொருளுடையாரை யாவரும் உறவு கொள்பவாகலின், “என் உறவென்கோ” எனவும் இயம்புகின்றார். இனி, உலகம் என்றது உலகிற் பெருமை யுற்ற சான்றோரைக் குறிப்பதாகக் கொண்டு, அச் சான்றோர் நாளும் பராவி வழிபடும் பரம்பொருள் என்பேனா என்கின்றார் என்றலும் உண்டு. பொய்ப் பொருள் போற்றப் படாதாகலின், பரம்பொருள் மெய்ப்பொருள் எனப்பட்டது. மெய்ப்பொருள் - மெய்யான உறுதி பயக்கும் பொருள் என்க. புலன்கள் மேற் செல்லும் ஆசை யைந்தும் துன்பமே யுறுவித்தலால், “கலகம் பெறும் ஐம்புலன்” எனக் கூறுகின்றார். புலன்களை வென்றுயர்ந்தவர் பேரின்ப நிலையாகிய சிவகதியைப் பெறுதலால், “புலன் வென்றுயரும் கதி யென்கோ” எனப் புகல்கின்றார். திலகம் - எள். சிவபிரான் உலகில் எள்ளும் எண்ணெயும் போன்றுளன் என்பதனால், திலகம் பெறு நெய்யென நின்றிலகும் சிவம் என்கோ” என வுரைக்கின்றார். “நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும், எள்ளும் எண்ணெயும் போனின்ற எந்தையே” (சதகம்) என்பது திருவாசகம். பரன் - பர என அண்மைவிளியேற்றது; பரம்பொருள் என்பதாம் என்கு - குற்றுகர வீற்றுத் தன்மை வினை.
இதனால் விநாயகப் மூர்த்தம் பரம்பொருள் என்பது உணர்த்தியவாறாம். (2)
|