2553. அடியார் உள்ளம் தித்தித்
தூறும் அமுதென்கோ
கடியார் கொன்றைச் செஞ்சடை
யானைக் கன்றென்கோ
பொடியார் மேனிப் புண்ணியர்
புகழும் பொருள்என்கோ
அடிகேள் சித்தி விநாயக
என்என் றறைகேனே.
உரை: சித்தி விநாயகப் பெருமானே, அடியவர் மனத்தில் இனிக்கச் சுரக்கும் அமுதமே என்பேனா, மணம் கமழும் கொன்றை மலர் மாலையணிந்த சிவந்த சடையையுடைய சிவனாகிய யானை யீன்ற கன்றே என்பேனா? திருநீறணிந்த மேனியையுடைய புண்ணியவான்களாகிய பெரியோர் புகழ்ந்தேத்தும் பரம்பொருளே என்பேனா, அடிகளாகிய உன்னை என்னேன்று சொல்லுவேன். எ.று.
அன்பாற் சிந்திக்குந் தோறும் தேனூற நின்றருளும் செம்பொருளாதலின், விநாயகப் பெருமானை, “அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ” எனக் கூறுகின்றார். கடி - நறுமணம். விநாயகரும் செஞ்சடை யுடையராதலின் சிவனைக் குறித்தற்குக் “கொன்றைச் செஞ்சடையான்” எனவும், இளமையும் யானை முகமும் உடைமையால் “கன்று” எனவும் மொழிகின்றார். பொடி - திருநீறு. திருநீறணியும் சிவநெறித் திருவினரைப் “புண்ணியர்” என்றும், அவர்கள் சிவமே பரம்பொருளென்பவாகலின், “புண்ணியர் புகழும் பொருள்” என்றும் உரைக்கின்றார். “பொடியணி மேனியர் என்று புண்ணியர் போற்றிசைப்ப” (திருப்பல்லாண்டு) எனச் சான்றோர் கூறுவது காண்க.
இதனால் திருநீற்றுப் பொடியணியும் பெரியோராற் போற்றப்படும் பெருமை சான்றவர் விநாயகப் பெருமான் என்பதாம். (3)
|