பக்கம் எண் :

எழுச்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2554.

     கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்உறு
          கரிசகல அருள்செய்பசு பதியாம்
     நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக
          நிலையைஅருள் புரியும்அதி பதியாம்
     விமலபிர ணவவடிவ விகடதட கடகரட
          விபுலகய முகசுகுண பதியாம்
     அமலபர சிவஒளியின் உதயசய விசயசய
          அபயஎனும் எமதுகண பதியே.

உரை:

      எமது கணபதியாகிய சித்தி விநாயகப் பெருமான், தாமரைப் பூவிலிருக்கும் பிரமன், அந்த மலர் போலும் கண்களையுடைய திருமால் முதலாக வுள்ள தேவர்களின் மனத்திற் படியும் மலக் குற்றம் நீங்குமாறு திருவருள் புரியும் பசுபதியாவான்; தூய்மையே நிறைந்த ஞானத்தில் விளங்கும் அதிசய எல்லை கடந்த பரம சுகமாகிய சிவானந்த நிலையை யருளும் அதிபதியாவான்; மலமில்லாத பிரணவ வடிவமும் விகட நடமும் பெரிய மத வெறியுமுடைய ஞான மூர்த்தமுடைய யானை முகத்து நற்குணம் பொருந்திய தலைவன்; தூய பரசிவத்தின் அருளொளியின்கண் தோன்றியவன்; அச்சம் போக்குபவன்; அவனுக்கு வெற்றி மிக்க வெற்றியுண்டாகுக. எ.று.

     கமல மலர் என்பதை நயனன் என்பதனோடும் கூட்டுக. திருமாலைத் தாமரைக் கண்ணன் என்பது மரபு. தேவர்களாயினும் மலமுடையராதலின், அதனை “இதயமுது கரிசு” என்று கூறுகின்றார். கரிசு - குற்றம். மலத்தொடர்பாற் பசுவாகிய உயிர்கட்கு அதனை நீக்கவல்ல பரசிவத்தைப் “பசுபதி” என்பது வழக்கம். மலபாசத்தாற் கட்டப்படுதலால் உயிர்கள் பசு எனப்படுகின்றன. கட்டறுத்து வீடருளுதலாற் சிவன் பசுபதியாயினான் என்க. நிமலம் - விமலம் என்பன மலமின்மையைக் குறிப்பன. அஞ்ஞான விருளகன்ற ஞானநிலை “நிமல நிறைமதி” என்று உரைக்கின்றார். பசுபாச ஞானங்கட்கு வேறாய் மேலாயுள்ள பரஞான ஒளி திகழும் இன்பநிலையை, “நிமல நிறை மதியினொளிர் மதியின் பரம சுக நிலை” எனவும், அந்நிலை நல்கும் சுகம் உலகியற் சுகம் போல நுகர்வார்க்கு அதிசயம் விளைப்ப தின்மையின், “நிரதிசய சுகம்” எனவும், அந்தச் சுகம், ஆன்மாக்கள் பெறுகின்ற சுகங்கள் அனைத்திற்கும் மேலான தென்றற்குப் “பரமசுக நிலை” எனவும் பகர்கின்றார். இது பற்றியே முத்தியின்பத்தைப் பெரியோர் “நிரதிசய ஆனந்தம்” என்று வழங்குகின்றார்கள். மதி - ஈண்டுச் சிவஞானத்தின் மேற்று; யோகக் காட்சியில் துவாத சாந்தத்தில் விளங்கும் அமுத சந்திரன் என்பதுமுண்டு. சித்தாந்தச் செந் நெறியின்கண் நின்று பத்தி பண்ணுவோர்க்கும் யோக நெறியில் நின்று துவாத சாந்தக் காட்சி முயல்வோர்க்கும் முதல்வனாதலின், “பரமசுக நிலையை அருள்புரியும் அதிபதியாம்” என்று கணேசப் பெருமானைப் புகழ்கின்றார். பிரணவம், ஓம் எனப்படும் ஓங்காரம். பிரணவ வடிவம் கணேச மூர்த்தம் என்று சான்றோர் கூறுதலால், “விமல பிரணவ வடிவ” என்று குறிக்கின்றார். “அகரமென வுருவாகி யுலக மெல்லாம், அமர்ந்து அகர வுகர மகரங்கள் தம்மாற் பகருமொரு வடிவாகி” (விநாயகபு) என்பர் கச்சியப்ப முனிவர். திருமால் இழந்த சக்கரப் படையைப் பெறுவித்தற் பொருட்டு விநாயகப் பெருமான் தமது கணங்களின் எதிரே விகட நடனம் புரிந்தது பற்றி “விகட விநாயகர்” என்று பெயர் கொண்டாரெனக் காஞ்சிப்புராணம் ஓதுகிறது. அதனால், “விகட தட கட கரட கயமுக” என்று சிறப்பிக்கின்றார். தட - பெருமை. கடகரடு - மதவெறி. கட கரட கயம் என இயைக்க. விபுலம், சிறந்த ஞானம்; சிவஞானம். விபுலம் என்பது பெருமையையும் குறித்தலால், பெருமை மிக்க யானை எனினும் பொருந்தும். கணேசப்பெருமானுக்கு யானை முகமாதலால், “கயமுக சுகுணபதி” என்கின்றார். கஜம் - கயம், கயம் எனத் தமிழாயிற்று. முகம் யானையது போன்றதாயினும், மங்கல நற்குணமே யுடையவன் என்றற்குச் “சுகுணபதி” என்று விசேடிக்கின்றார். பரசிவத்தின் பரஞானப் பரவொளியில் திருமூர்த்தமாதலால், கணேசப் பெருமானை, “விமல பரசிவ வொளியின் உதய” என உரைக்கின்றார். அடியடைந்தார்க்கு அபய மளித் தாதரிக்கும் அருளாளன் என்றற்கு “அபய” என்கின்றார். மக்கட்காயின் அபயன் என்பது அச்சமில்லாதவன் என்று பொருள்படும் என அறிக. சய விசய சய என்பது வெற்றி வாழ்த்து.

     இதனால் கணேசப் பெருமானுடைய பரஞான குண நலன்களை யுணர்த்தியவாறாம்.

     (4)