பக்கம் எண் :

கட

கட்டளைக் கலித்துறை

2555.

     அம்பொன்று செஞ்சடை அப்பரைப்
          போல்தான்அடியர்தம்துக்
     கம்பொன்றும் வண்ணம் கருணைசெய்
          தாளும் கருதுமினோ
     வம்பொன்று பூங்குழல் வல்லபை
          யோடு வயங்கியவெண்
     கொம்பென்று கொண்டெமை ஆட்கொண்
          டருளிய குஞ்சரமே.

உரை:

      மணம் பொருந்திய பூக்களை யணிந்த கூந்தலையுடையை வல்லபை யம்மையொடு கூடி விளங்குகின்ற வெண்மையான கொம்பு ஒன்றை யுடையனாய் எங்களை ஆண்டருள் புரியும் யானையாகிய கணேசப் பெருமான், கங்கை நீர் தங்கிய சிவந்த சடையையுடைய சிவபெருமானைப் போலத் தன்பால் அன்புடையார்க் கெய்தும் துன்பங்கள் நீங்குமாறு திருவருள் புரிகுவன் என்று நினைவிற் கொள்வீராக. எ.று.

     வம்பு - நறுமணம். நறிய மணமுடைய பூக்களை மகளிர் தம் கூந்தளிற் சூடிக் கொள்ளும் இயல்பினராதலின், வல்லபைத் தேவியை, “வம்பொன்று பூங்குழல் வல்லபை” என்று சிறப்பிக்கின்றார். ஒரு கொம்பையொடித்துக் கயாசுரனைக் கொன்றொழித்தாராதலின், எஞ்சிய ஒரு கொம்பேயுடையனாதல் பற்றி, விநாயகரை, “ஒற்றைக் கொம்பன்” என்று பெரியோர் பாராட்டுகின்றனர். அதனால், வயங்கிய வெண்கொம்பொன்று கொண்டு எமை ஆட்கொண்டருளிய குஞ்சரமே” எனக் கூறுகின்றார். யானையின் கொம்பு வெண்மை நிறமும் ஒளியும் கொண்டதாகலின், “வயங்கிய வெண்கொம்பு ஒன்று” எனப் புகழ்கின்றார். அருட்பேறு பற்றி, “எமை ஆட்கொண்டு அருளிய குஞ்சம்” என்கின்றார். குஞ்சரம் - யானை. அம்பு - நீர்; ஈண்டுக் கங்கையாற்றின் மேற்று. அப்பர் - அம்மையப்பனாகிய சிவபெருமான். துக்கம் - துன்பம். பொன்றுதல் - கெட்டொழிதல். இருளற்றம் பார்க்கும் ஒளி போலத் துன்பத்தின் நீக்கம் நோக்குவது இன்பமாதலால், துன்ப நீக்கத்தையே விதந்து, “துக்கம் பொன்றும் வண்ணம் கருணை செய்தாளும்” என்றும், அன்பு செய்யும் அடியவர்க்குத் துக்க நீக்கத்தின் வேறு ஊதியமில்லை யாதலின், அதனை வள்ளற் பெருமான் எடுத்தும் மொழிகின்றார். மறத்தலாகாமை வற்புறுத்தற்குக் கருதுமினோ” என வுரைக்கின்றார்.

     இதனால், விநாயகப் பெருமானது திருவருட் செயலுண்மை யோதி நம்மனோர் மனத்தில் இருத்தியவாறாம்.

     (5)