26
26.
தெய்வத் தனித்திருமாலை
அஃதாவது கணபதி, முருகன், சிவன், உமையாகிய
தெய்வங்கள் பொருளாக ஓரொருகால் தனித் தனியாகப் பாடிய சொன்மாலை என்பதாம். எல்லாவற்றிற்கும்
மேலாய் அகளமாய் விளங்கும் பரம்பொருள் சிவன், கணபதி, முருகன் முதலிய சகளத் திருமேனி கொள்ளுமிடத்துத்
தெய்வம் எனப்படும். பரம்பொருட் கூறாயவற்றைப் பெருந் தெய்வமென்றும், வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாகிய
மக்களைச் சிறு தெய்வமெனவும் பெரியோர் வேறுபடுத்துவர். இங்கே பெருந் தெய்வங்களே பரவப்படுதல்
அறிக.
வஞ்சித்துறை
2557. ஐங்கரன் அடிமலர்
இங்குற நினைதிநின்
பொங்குறு துயரறும்
மங்கலின் மனனே.
உரை: தாழ்தலில்லாத மனமே, ஐந்து கைகளையுடைய விநாயகன் திருவடித் தாமரை இங்கே நமக்கெய்துமாறு நினைவாயாக; அதனால் மிக்குறும் துன்பங்கள் அற்றொழியுமாகலான். எ.று.
மங்குதல் - தாழ்தல். இருள் கலந்த ஒளியை மங்கிய வொளி என்ற வழக்கு நோக்குக. பெருகிவரும் இயல்பினவாதலால், துன்பங்களை “பொங்குறு துயரம்” என்றும், தொடர்பறக் கெடும் என்றற்கு “அறும்” என்றும் கூறுகின்றார். துயரறுதற்குக் காரணமாவது விநாயகன் திருவடி நினைவு என்றற்கு “ஐங்கரன் அடிமலர் நினைதி” எனவும், துயர் மிகும் இவ்விடத்து இப்பொழுது நினைக; நினைந்தபோது அத்திருவடி போந்து துயரறுவிக்கும் என வற்புறுத்தற்கு “இங்குற நினைதி” எனவும் இயம்புகின்றார். மலர் எனப் பொதுப்படவுரைத்தலால் தாமரையாயிற்று. “பூவினுக் கருங்காலம் பொங்கு தாமரை” என்பர் திருநாவுக்கரசர்.
இதனால் விநாயகர் திருவடியை நினைப்பவர் துயரற் றின்புறுவர் எனத் தெரிவித்தவாறாம். (1)
|